இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி என்கிற ‘மாயை’ – அது எப்படி உருவானது?
‘சனிப்பெயர்ச்சி’, ‘குருபெயர்ச்சி’ மாதிரி, எம்.எல்.ஏ. பெயர்ச்சி,
எம்.பி. பெயர்ச்சி எல்லாம் தொடர்ச்சியாக வருகின்றன!
பா.ஜ.க.விற்கு மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை வந்துவிட்டால், பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இவற்றிற்கு வேலை இல்லை!
‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்’’ –
இதனை எச்சரிக்கை செய்வதுதான் நமது பணி!
சேலம், ஜூலை 8 இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி என்கிற ‘மாயை’ – அது எப்படி உருவானது? ‘சனிப்பெயர்ச்சி’, ‘குருபெயர்ச்சி’ மாதிரி, எம்.எல்.ஏ. பெயர்ச்சி,
எம்.பி. பெயர்ச்சி எல்லாம் தொடர்ச்சியாக வருகின்றன! பா.ஜ.க.விற்கு மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை வந்துவிட்டால், பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இவற்றிற்கு வேலை இல்லை! ‘என் மதம், இந்து மதம்’’ என்ற ஆரிய மதம் எல்லாருக்கும்! ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்’’ இதனை எச்சரிக்கை செய்வதுதான் நமது பணி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சேலம்: பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் சிறப்புரை
சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானம் – மாநகராட்சி அலுவலகம் அருகில், 4.7.2026 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கியது. சுயமரியாதைச் சுடரொளிகள் ஆத்தூர் ஏ.வி.தங்கவேலு, மேட்டூர் கிருஷ்ணமூர்த்தி நினைவு அரங்கமாகவும், மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, வில்லிவாக்கம் தங்கமணி குணசீலன் ஆகியோர் நினைவாகவும் அமைக்கப்பட்டு இருந்த மேடையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘மண் என்று சொன்னாய்’
எனவே, ‘மண்ணையே கவ்விக் கொண்டிரு!’
‘‘பெரியாரே ஒரு மண்’’ என்றெல்லாம் கூட சில பேர் உளறி இருப்பார்கள். ஆனால், அவர்கள் பாவம், மண்ணைக் கவ்வியதைத் தவிர வேறு கிடையாது. ‘மண் என்று சொன்னாய்’ எனவே, ‘மண்ணையே கவ்விக் கொண்டிரு’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மக்கள் தீர்ப்பளித்து, விலாசம் தெரியாத அளவிற்குக் கூட, வேறு இவர்களைப் பார்த்தாலாவது இனி விலாசம் கிடைக்காதா? என்று கதவைத் தட்டிக் கொண்டிருக்கிற காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இரண்டு மாதத்திற்கு முன்பு அமைச்சராக இருந்தார். இப்பொழுது அமைச்சராக இல்லையே என்று அவருக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அவருக்கு மட்டுமல்ல, யாருக்குமே வருத்தம் இல்லை.
ஏனென்றால், அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். பதவி முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம் என்று. அண்ணா அவர்கள் அற்புதமான பாடத்தை எடுத்தார். அதற்குக் கலைஞர் விரிவுரை சொன்னார். மு.க.ஸ்டாலின் அதற்கு நிறைவுரை சொன்னார். எல்லா வகையிலும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து வந்தது.
‘‘கொள்கை என்பது வேட்டி;
பதவி என்பது துண்டு!’’
அண்ணா, ‘‘கொள்கை இருக்கிறதே, அது வேட்டி; பதவி இருக்கிறதே, அது துண்டு’’ என்றார். தோள்மீது உள்ள துண்டு இல்லாமல், நான் வரலாம்; வேட்டி இல்லாமல் வர முடியுமா? ஆனால், நிறைய பேர் இப்பொழுது துண்டுதான் முக்கியம்; வேட்டி முக்கியம் இல்லை என்று இருக்கிறார்கள். இன்னும் சில பேர், கட்டியிருக்கின்ற வேட்டியை அவிழ்த்துவிட்டுப் போகிற அளவிற்குத் தயாராக இருக்கிறார்கள். இங்கே அவிழ்க்கவேண்டுமா? வேறு இடத்தில் அவிழ்க்க வேண்டுமா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கி றார்கள். சொல்லுவதற்கே வெட்கமாக இருக்கிறது. இதற்கு மேல் விவரித்தால் எங்களுக்கே தரம் தாழ்ந்து விடுமோ என்ற அச்சம் வருகிறது.
மானமிகு இல்லையேல்,
மாண்புமிகுவுக்கு மதிப்பு இல்லை!
கலைஞர் மேலும் எழுதுகிறார்,
‘‘நான் தலைவனாக விளங்குகிறேனோ, இல்லையோ, இளமை தொட்டு, தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்ட வடுக்களையும் கண்டு உணர்ந்து, தொண்டு உள்ளத்தை தொலைக்காமல் இருப்பவன் நான். மானமிகு இல்லையேல், மாண்புமிகுவுக்கு மதிப்பு இல்லை என்பதை நான் அறிவேன்’’ என்று எழுதியுள்ளார்.
அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் கலைஞர் சொன்னார், அதையும் உங்களுக்குச் சொல்கிறேன்.
அது என்னவென்றால், ‘‘மாண்புமிகு வரும், போகும். மானமிகு ஒரு தடவை வந்துவிட்டால், அதை யாராலும் பறிக்க முடியாது’’ என்றார்.
‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’ என்று சொல்லக்கூடிய அந்த உணர்வை உருவாக்கினார்.
திராவிடர் கழகத் தீர்மானங்கள் –
வருங்காலத்து சட்ட திட்டங்கள்!
இதையெல்லாம் வலியுறுத்துவதற்குத்தான் திராவிடர் கழகம், இன்றைக்குப் பொதுக்குழுவை நடத்தி, எதார்த்தமாக இருக்கக்கூடிய 19 தீர்மா னங்களை நாங்கள் வடித்தெடுத்தோம். பொதுவாக திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் நடத்துகின்ற மாநாடுகள் என்று சொன்னாலும், கமிட்டிகள் என்று சொன்னாலும், பொதுக்குழு என்று சொன்னாலும் அதிலே நிறைவேற்றக்கூடிய தீர்மானங்கள் வெறும் வாசகங்கள் அல்ல; அல்லது ஏதோ காற்றுப் போக்கிலே போகக்கூடியவை அல்ல. மாறாக. வருங்காலத்து சட்ட திட்டங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இது வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிற ஓர் அற்புதமான செய்தி.
உதவி பெற்றவர்கள் நன்றி காட்டவில்லையே என்று எதிர்பார்க்க வேண்டாம்!
அந்த வகையிலே, இன்றைக்கு மிக முக்கியமான ஒன்று, இரண்டு, மூன்று செய்திகளைச் சொல்ல வேண்டும். இப்போது ஒரு தீர்மானத்தைப்பற்றிச் சொல்கிறேன். பல தீர்மானங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்த சேலம் இரும்பாலை – இந்த இரும்பாலை இன்றைக்குத் தப்பித்திருக்கிறது என்று சொன்னால், தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக இருக்கிறது என்று சொன்னால், இதை வெறும் அலு மினியத் தகடாக ஆக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில் எல்லாம், இந்த இயக்கங்கள் தான், இதே இடத்திலே போராடின. அதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால், தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்கிறவர்கள் எல்லாம், நன்றி காட்டுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அய்யா சொன்னார், ‘‘நாம் நன்றியை எதிர்பார்க்க வேண்டாம்; உதவி பெற்றவர்கள் நன்றி சொல்லவில்லையே, அய்யோ அவர் நன்றி காட்டவில்லையே என்று பார்க்க வேண்டாம்’’ என்றார்.
பல நேரங்களில், நாம் தண்ணீர் பானை வைக்கிற மாதிரிதான். தாகம் எடுக்கிறவர், அந்தப் பானையில் உள்ள தண்ணீரைக் குடிப்பார். அவருடைய தாகம் தீர்ந்ததும், யார் தண்ணீர் பானை வைத்தது, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றா நினைப்பார்? பெரியார் சொன்னபடி, அதெல்லாம் அவர் நன்றி சொல்ல மாட்டார். இன்னும் சில இடத்தில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். தண்ணீர் பானையில் இருக்கிற குவளையை விட்டுவிட்டுப் போனாரே, அது போதும் – அதுதான் மிக முக்கியம். பல இடங்களில், குவளைக்கே ஆபத்து என்பதால்தான், ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் கூட நாம் பாத்ரூமுக்குப் போனால், ஒரு குவளையை சங்கிலியால் பிணைத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு நாணயமான நாடு – நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
எல்லா வகையிலும்
அறிவு கொளுத்துகின்ற இயக்கம்!
நமக்கு நாணயம் எப்படிப்பட்டது என்பதை அதிகாரப் பூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பெருமக்கள் வசதியானவர்கள் தான் முதல் வகுப்பு ஏசியில் போக முடியும். அந்த வசதியானவர்களே, அந்தக் குவளையை எடுத்துக் கொண்டு போய்விடுவானோ என்கிற நிலை. எனவே, எல்லா வகையிலும் அறிவு கொளுத்துகின்ற இயக்கம் இந்த இயக்கம்.
‘‘பொதுத் துறை நிறுவனங்களை நிறைய உருவாக்க வேண்டும்’’ – தந்தை பெரியார்
பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதிலே இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற தீர்மானம். நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றியத்தில் வாஜ்பேயி அவர்களுடைய தலைமையில் அமைந்த ஆட்சியிலே தான் அது ஆரம்பிக்கப்பட்டது. மிகப்பெரிய அளவிற்கு தந்தை பெரியார் அவர்களாலே உருவாக்கப்பட்ட சுயமரியாதை மாநாட்டில், திட்டமாக வரையறுக்கப்பட்டு தீர்மானமாக அன்றைக்கு நிறைவேற்றப்பட்டது. ‘‘இந்த நாட்டினுடைய பொது அமைப்புகள் முழுவதும், அது ரயில்வேக்கள் ஆனாலும், வங்கிகள் ஆனாலும், மற்றவை ஆனாலும் அவையெல்லாம் மக்கள் சொத்தாக இருக்க வேண்டும். அரசு உடைமையாக இருக்க வேண்டும். எனவே பொதுத்துறை என்பது ‘பப்ளிக் செக்டார்’ என்பது இருக்கிறதே, அது மக்கள் சொத்து – அப்படி அதை உருவாக்க வேண்டும்’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.
பொதுத்துறை நிறுவனங்களே காணாமல் போகக்கூடிய அளவுக்கு ஆகிவிட்டது!
அதுதான் மோடிஜி ஆட்சியினுடைய சாதனை!
அப்படியே நேரு அவர்கள், ஏராளமாக நிறுவனங்களை உருவாக்கினார். பிறகு அவை வளர்ந்தன. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அதற்காகவே தேர்த லிலே இந்திராகாந்தி அம்மையார் அவர்களை, கலைஞர் ஆதரித்தார். தந்தை பெரியாரும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள். அப்படிப்பட்ட நிலைகள் இருந்தன. இப்போது பொதுத்துறை நிறுவனங்களே காணாமல் போகக்கூடிய அளவுக்கு ஆகிவிட்டது. அதுதான் மோடிஜி ஆட்சியினுடைய சாதனை. அதுவும் மக்கள் கஷ்டப்பட்டு கட்டப்பட்ட, அமைக்கப்பட்ட சுரங்கம். அந்த நெய்வேலியைப் பார்த்தீர்களேயானால், கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சுரங்கத்தின் அரசுப் பங்குகளை தனியாருக்கு விற்பதற்குத் தயாராகி விட்டார்கள்.
இப்போது இருக்கிற விமான நிலையங்கள் எல்லாம், ஒரு காலத்தில் அரசினுடைய விமான நிலையங்கள். ஆனால், இன்றைக்கு அவை யாருக்கு போய்ச் சேரும்? அதானிக்குப் போய்ச் சேரும். அதேபோல வானில் பறக்கிற விமானம் யாருக்குப் போய்ச் சேரும்? டாட்டாக்களுக்கு போய்ச் சேரும்.
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் மறைமுகமாகத் தனியார் மயமாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்!
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் மறை முகமாகத் தனியார் மயமாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இந்த ஆட்சி, காவி ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி வந்த உடனே, மோடியை விட அறிவு நாணயம் மிக்கவர் யார்? அவர்களுக்குள்ளே வாஜ்பேயி அவர்கள்தான். அதனால், வெளிப்படையாக அவர் என்ன சொன்னார்? ‘‘நான் விற்பதற்காகவே ஓர் இலாகா அமைத்தேன்’’ என்று சொன்னார். ஆனால், மோடியோ பெயரை மாற்றிவிடுவார். பங்குகளை, இருப்புகளை விற்கிறேன் என்று சொல்லுவதில்லை. அதற்குப் பதிலாக வேறு பெயர் வைத்து, அதை அடிமாட்டு விலைக்கு விற்பார். அதுவும் டாட்டா, பணம் கட்ட முடியவில்லை என்பதற்காகத் தவணை கொடுப்பார். ஏனென்றால், அவர் ஏழை பாருங்கள், அவருக்குத் தவணை கொடுப்பார்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, அதற்காகத்தான் 7 ஆம் தேதி அன்று, நெய்வேலியில் என்னுடைய தலை மையிலேயே போராட்டம் நடைபெறும். ஏனென்றால் இதற்கு முன்பும்கூட பல ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் பங்குகளை விற்கக் கூடாது என்று சொன்னோம். அதனை வலியுறுத்தினோம். ஒத்தக் கருத்துள்ளவர்கள் எல்லாம் சேருகிறோம்.
போராட்டம், பிரச்சாரம் என்பது
நம் இயக்கத்தினுடைய வாடிக்கை!
எனவே, போராட்டம், பிரச்சாரம் என்பது நம்முடைய இயக்கத்தினுடைய வாடிக்கை. அந்த அடிப்படையிலே தான் நண்பர்களே, இந்த மிக முக்கியமான பல தீர்மானங்கள் இங்கே இருக்கின்றன. நேரத்தின் நெருக்கடியினாலே சில தீர்மானங்களை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். அவை மிக முக்கியமான இந்தக் காலகட்டத்திலே தேவை இருக்கக்கூடிய தீர்மானங்கள். அவற்றை நன்றாக நீங்கள் கவனிக்க வேண்டும். ஏனென்றால், திராவிட இயக்கத்தினுடைய, திராவிடர் கழகத்தினுடைய தீர்மானங்கள் என்பவை அத்தனை மக்களுக்கும் சிந்தனைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு செயலாக்கப்பட வேண்டியவையாகும்.
இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 9 ஆவது தீர்மானத்தைப் படிக்கிறேன் கேளுங்கள்.
கட்சிமாறிகளைக் கட்டுப்படுத்தச்
சட்டத் திருத்தம் தேவை!
‘‘அரசியல் கட்சிகளில் இணைந்து, சட்ட மன்றத் திற்கும், நாடாளுமன்றத்திற்கும் மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் பிரதிநிதிகள், நினைத்த மாத்திரத்தில் கட்சி மாறிச் செல்வதும், அதற்கு ஈடான பதவிகள் உள்ளிட்ட பலன்களைப் பெறுவதும் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் அவலங்களாகும். கட்சித் தாவல் தடைச் சட்டம், 1985 ஆம் ஆண்டே கொண்டு வரப்பட்டிருந்தாலும், புதுப் புது வழிகளில் இத்தகைய தாவல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த வகையில் தான் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது.
தேர்தலில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டுவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளித்து ஆட்சியமைக்க வழிகோலுவதும், கொள்கைகள், பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாமல் பத விக்காகவும், பணத்துக்காகவும், வேறு பல சுயநல காரணங்களுக்காகவும் மொத்தமாக ஒரு கட்சியை விட்டுவிட்டு ஓடுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயோ, மாதங்களிலேயோ பதவியை விட்டு விலகி, வேறு ஒரு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பதவியைப் பிடிப்பதுமாகச் சட்டத்தை வளைத்து, நெளித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு கட்சிக்கோ, ஓர் ஆட்சி அமைவதற்கோ ஆதரவளித்துத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றும் அவமதிக்கும் செயல் இது! இவர்கள் பதவி விலகுவதால், இன்னோர் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதற்குத் தண்டனையாக, அடுத்த 5 ஆண்டுகள் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட எந்தத் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாத வகையிலும், தேவையின்றி இடைத்தேர்தலைத் திணித்ததற்காக, அச் செலவுகளை ஈடுகட்டத் தண்டம் கட்டும் வகையிலும் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம்.’’
நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு – ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு!
இங்கே மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற கட்சிக்குச் சிலர் மாறுவதைப்பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டி ருக்கிறோம். இது ஒரு சிறிய பங்குதான். ஆனால், இந்தியாவிலேயே ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு – ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு. பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் படும்பாடுபட்டு உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் தவிர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு அந்த இடத்தில் மனுதர்மம் வந்து அமர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலக்கு. அந்த இலக்கை அடைவதற்காக ஒரு பெரிய திட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. நாமும் தமிழ்நாட்டிலே நடக்கக்கூடிய செய்திகளை மட்டும் நினைத்துக்கொண்டு இப்படி நடக்கிறதே? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதைவிட பெரிய ஆபத்து வந்திருக்கிறது. தீப் பிடித்தால் தான் அணைக்க வேண்டும் என்பதல்ல; தீப்பொறிகள் உருவாகும் போதே அதை அணைப்பதுதான் தான் மிகவும் முக்கியம். அதைச் சொல்லவேண்டிய கட்டத்திற்கு நாம் இருக்கிறோம்.
அமித்ஷா பார்முலா!
மோடி சொல்கிறார், ‘‘நாங்கள் எல்லா மாநிலங்களையும் வளைத்துவிட்டோம்; தமிழ்நாட்டைத்தான் வளைக்க முடியவில்லை. அண்மையில் நாங்கள் மேற்கு வங்காளத்தைக் கூட வளைத்துவிட்டோம் என்று சொல்வதற்கு ஓர் ஆயுதம்தான் தேர்தல் ஆணையம்; எஸ்அய்ஆர் என்று சொல்லக்கூடியதெல்லாம் இருக்கட்டும். அமித்ஷா பார்முலா என்று ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், ‘‘நீங்கள் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறுங்கள்; எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறுங்கள்; யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எல்லா தேனீக்களும் சேர்ந்து சேகரித்து வைத்திருக்கும் தேனை, அப்படியே கடைசியில் தேன் கூட்டை எடுத்துக் கொண்டு செல்வதைப் போல நாங்களும் அதுபோன்று செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்’’ என்று சொல்லக்கூடிய வகையிலே இருக்கிறார்கள்.
வருகின்ற ஆபத்துகளை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதுதான் திராவிடர் கழகம்!
மற்ற இடங்களில் எல்லாம் கட்சித் தாவல் நடக்கிறது. இந்தக் கட்சியில் இருந்து அந்தக் கட்சிக்குப் போவார்கள். அந்தத் தாவல்தான். ஆனால், மோடி, அமித்ஷா, பா.ஜ.க.. ஆர்.எஸ்.எஸ். ஆகியவை நடத்துவது இருக்கிறதே, அது கட்சித் தாவல் இல்லை நண்பர்களே, கட்சி உடைப்பு – கட்சி அணைப்பு. உடைப்பும் – அணைப்பும் சேர்ந்ததுதான். இது ஒரு புதிய கெமிஸ்ட்ரி. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஆபத்துகளையும் முன்னாலே சொல்லுவது இந்த இயக்கம்தான். வருகின்ற ஆபத்துகளையெல்லாம் சொல்கிறோம்.
‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, வரக்கூடிய அந்த ஆபத்து என்னவென்று சொன்னால், இதுதான்.
தேர்தலில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படக் காரணமான கட்சியை விட்டுவிட்டு, வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளித்து, ஆட்சியமைக்க வழிகோலுவதும், அதுவும் கொள்கைகள், பிரச்சினைகளின் அடிப்படையில் அல்லாமல், அவ்வாறு நடப்பது சரியா?
கொள்கையினால் மாறி, வேறு இயக்கத்திற்குச் செல்லும்போது,
யாரும் தவறு சொல்ல முடியாது!
இன்றைக்குக் காலையில், ஒரு செய்தியாளர் என்னிடத்தில் ஒரு குறுக்குக் கேள்வி கேட்டார். சரி, ‘‘இப்பொழுது கட்சித் தாவல்பற்றி சொல்றீங்களே, சில கட்சிகளில் இருந்து ஒ.பன்னீர் செல்வம், மற்றவர்கள் எல்லாம் தி.மு.க.வுக்கு வந்தார்களே, அப்பொழுது இதுபோன்று சொன்னீர்களா?’’ என்று கேட்டார். நான் அதற்குப் பதில் சொன்னேன், ‘‘சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்று கேட்டால், தெளிவாக அந்தத் தீர்மானத்திலேயே சொல்லி இருக்கிறோம். கொள்கையினால் மாறி, வேறு இயக்கத்திற்குச் செல்லும்போது, யாரும் தவறு சொல்ல முடியாது. அல்லது பிரச்சினைகளால் ஏற்பட்ட காரணங்களால், ஆனால், ‘குயிட் புரோக்கோ’ என்று சொல்லுவார்கள். அங்கே சென்றால், என்ன லாபம்? போய் லாபம் தேடவில்லை. லாபத்துக்காகவே போகிறான். அதற்கு முன்பே ஒரு ஒப்பந்தம், எழுதப்படாத ஒப்பந்தம், ரகசிய ஒப்பந்தம், வெளிப்படையாக அறிவிக்க கூடியது – போகும்போதே என்ன ஒப்பந்தம்? என்று சொல்லக்கூடிய அளவிலே வருகிற நிலை. இங்கே தீர்மானத்தில் சொல்லுகிறார்கள்,
‘‘பதவிக்காகவும், பணத்துக்காகவும், வேறு பல சுயநல காரணங்களுக்காகவும் மொத்தமாக ஒரு கட்சியை விட்டுவிட்டு ஓடுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயோ, மாதங்களிலேயோ பதவியை விட்டு விலகி, வேறு ஒரு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பதவியைப் பிடிப்பதுமாகச் சட்டத்தை வளைத்து, நெளித்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு கட்சிக்கோ, ஓர் ஆட்சி அமைவதற்கோ ஆதரவளித்துத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றும் அவமதிக்கும் செயல் இது! இவர்கள் பதவி விலகுவதால், இன்னோர் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதற்குத் தண்டனையாக, அடுத்த 5 ஆண்டுகள் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட எந்தத் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாத வகையிலும், தேவையின்றி இடைத்தேர்தலைத் திணித்ததற்காக, அச் செலவுகளை ஈடுகட்டத் தண்டம் கட்டும் வகையிலும் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம்.’’
திராவிடர் கழகம் மற்றவர்களுக்கு வழிகாட்ட கூடியதாக இருக்கிறது.
தூற்றலுக்கும் கவலைப்பட மாட்டோம் – தூறலுக்கும் கவலைப்பட மாட்டோம்!

மழைத் தூறல் இருந்தாலும், தூற்றல் இருந்தாலும் இந்த இயக்கம் தன்னை அடைத்துக் கொள்ளாது. ஆகவேதான், தூற்றலுக்கும் கவலைப்பட மாட்டோம். தூறலுக்கும் கவ லைப்பட மாட்டோம். எனவேதான், அதற்குப் பயப்படுகிறவர்கள் போகலாம்; அஞ்சாதவர்கள் இருக்கலாம். ஆகவேதான் சொல்ல வேண்டிய கருத்து மிக முக்கியமானது. அதைத்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
தோழர்களே! வடநாட்டில் இருக்கிற ஆபத்து இருக்கி றதே, அந்த ஆபத்து மிக மிக முக்கியம். நேற்றைய ‘விடுதலை’யில் விளக்கமாக அறிக்கையாக எழுதி இருக்கிறோம்,
நீங்கள் சில காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள் திரைப்படத்தில். வீட்டின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, நன்றாக சமைத்து வைத்துவிட்டு, அந்தப் பக்கத்தில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பல பேருக்கு ஒரு சீரியல் முடிந்த வுடன், உடனே இன்னொரு சீரியல் தொடர்ச்சியாக வர வேண்டும். ஒரு சேனலில் விளம்பரம் வந்தால், அடுத்த சேனலை மாற்றிப் பார்ப்பார்கள். அப்போது உள்ளே வருகிற திருடன், சமையலறைக்குச் சென்று, நிதானமாக சாப்பிட்டுவிட்டு, என்னென்ன எடுத்துக் கொண்டு போகவேண்டுமோ, அதையெல்லாம் எடுத்துக்கொண்டு, அவரும் சேர்ந்து பின்னால் அமர்ந்துகொண்டு கொஞ்சம் டிவி சீரியலை ஒரு பக்கம் ரசித்துவிட்டுப் போகிற மாதிரி, இன்றைக்கு ஒரு காட்சி! அது என்னவென்று சொன்னால், கட்சிகளை உடைப்பது என்பது நடந்து கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது என்பதை மட்டும் சொல்கிறேன்.
மழை ஒருவேளை கடுமையாகப் பொழிந்தால் கூட. இந்தச் செய்தி மிகவும் முக்கியமானது. உங்கள் மனதிலே படிய வேண்டும். ஊடக நண்பர்கள், செய்தியாளர்கள் அருள்கூர்ந்து இதையும் மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டிய ஒரு பொது சமூகக் கடமை அவர்களுக்கு உண்டு.
இந்தத் தகவலை மட்டும் எண்ணி பாருங்கள், 2014 இல் ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. – அப்பொழுது என்ன சொன்னார் மோடி?
‘‘சப்காசாத், சப்கா விகாஸ்’’
என்றார் மோடி!
திடீர்னு ஒரு சத்தம் கொடுத்தார், ‘‘குஜராத் மாடல்’’ என்றார். அதுவும் ‘டபுள் என்ஜின்’’ என்றார். டபுள் என்ஜின் என்னாயிற்று? என்று எல்லோருக்கும் தெரியும். நம்மு டைய மக்களுக்கும் வேலை இல்லாத் திண்டாட்டம் இருந்தது, அந்த காலத்தில். காங்கிரஸ் ஆட்சியினுடைய விளைவு அது என்று சொன்னார்கள். அன்றைக்குத் திடீர்னு ஒரு சத்தம். தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘சப்காசாத், சப்கா விகாஸ்’’ என்றார் பிரதமர் மோடி. ‘‘வளர்ச்சி, திட்டமிட்ட வளர்ச்சி!’’ ‘‘இன்க்ளூசிவ் குரோத்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தபோது, அதைக் காட்டியே ஓட்டு வாங்கிவிட்டார். அதற்குப் பிறகு வந்த தேர்தல்களில் எல்லாம், வாக்குச் சதவிகிதம் பா.ஜ.க.விற்கு குறைந்துகொண்டே வந்தது.
அதனுடைய விளைவு என்ன என்று சொல்லும்போது, இதை மட்டும் நன்றாகக் கவனியுங்கள்.
இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி என்கிற ‘மாயை’ – அது எப்படி உருவானது?
இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி என்கிற ‘மாயை’ – அது எப்படி உருவானது? கட்சித்தாவல் என்று நாம் சாதாரணமாக இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு நுட்பமாக உள்ளே நுழைந்தார்கள் என்பதற்கு அடையாளம், இங்கே பார்க்க வேண்டும்.
‘‘2016 இல் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரசைச் சேர்ந்த 43 எம்.எல்.ஏ.க்கள் விலகி, அருணாச்சல மக்கள் கட்சியில் இணைந்து, பிஜேபியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தனர்.
உத்தரகாண்ட்டில் (2016) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வைத்துச் செய்த முயற்சியால் அரசியல் நெருக்கடி உருவாகி, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்றம் மாநில அரசை மீண்டும் பதவியில் அமர்த்தியது.
மணிப்பூரில் (2017) சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றபோதிலும், தேர்த லுக்குப் பிறகு நடைபெற்ற கட்சித் தாவல்களின் மூலம், பாஜக ஆட்சியை அமைத்தது.
வரிசையாக இப்படிச் சொல்லிக் கொண்டுவருகிறேன் பாருங்கள், ஒரு வரியைக் கூட யாரும் மறுக்க முடியாது. இது கட்சித் தாவல் மட்டுமல்ல, பொது ஒழுக்கச் சிதைவு. பொது ஒழுக்கக் கேடு. ஜனநாயகத்துக்கு ஆபத்து. தேர்தல் நடத்துவதற்கே அர்த்தமில்லை என்று சொல்லக்கூடிய அந்த நிலை.
கருநாடகாவில் (2019) காங்கிரஸ் – ஜே.டி.(எஸ்.) கூட்டணி அரசில் இருந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால், அந்த அரசு கவிழ்ந்தது. பின்னர் அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து அமைச்சர்களாகவும் பதவி பெற்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் (2020) ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகியதுடன், அவருக்கு ஆதரவான 22 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகினர். இதன் விளைவாக காங்கிரஸ் அரசு வீழ்ந்து, பாஜக ஆட்சியை அமைத்தது.
கோவாவில் (2022) பா.ஜ.க. பெரும்பான்மை பலம் பெறாத நிலையில், சிறிய கட்சிகள், சுயேட்சையின் ஆதரவு பெற்று ஆட்சியமைத்தன. ஆனால், சில காலத்திலேயே காங்கிரசின் 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேரைக் கட்சி தாவச் செய்து ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டன.
மகாராட்டிராவில் (2022) உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆட்சியைக் கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவில் பிளவை உண்டாக்கி, அந்த அணியை பாஜக தன்னுடன் இணைத்துக் கொண்டது; ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக்கப்பட்டார். அடுத்த தேர்தலில், பா.ஜ.க.வே அதிக இடங்களைப் பெற்று முதலமைச்சர் பதவியை வைத்துக் கொண்டது.
எங்களைப் போன்ற கருப்புச் சட்டைக்காரர்கள் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்!
அந்தக் காலகட்டத்தில், ஆளுநர் மாளிகைக்கு விடியற்காலை நான்கு மணிக்குச் சென்று கதவைத் தட்டுவார்கள். ஆளுநரும் தயாராக இருப்பார். எதற்கு? பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு. இந்த வித்தைகள் எல்லாம் மறந்து போகும். ஏனென்றால், பல பேர் அரசியல் நடத்துவது பொதுமக்கள் மறதியை வைத்துத்தான். ஆனால், நினைவூட்டுவதற்குதான் எங்களைப் போன்ற கருப்புச் சட்டைக்காரர்கள் இந்த வேலையை செய்துகொண்டு இருக்கிறோம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, மகாராட்டிராவில் மிகப்பெரிய அளவிற்குப் பிளவை உண்டாக்கி, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் ஆக்கப்பட்டார். அடுத்தத் தேர்தலில், முதலில் ஒத்திகை; சின்னப் பிள்ளைகளை வண்டியில் ஏற்றி, கையில் கயிற்றைக் கொடுத்துவிட்டு, பின்னால் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்று, ஏக்நாத் ஷிண்டே உட்காந்திருந்தார். ‘‘தம்பி போதும், நீ கீழே இறங்கு, நான் வருகிறேன்’’ என்று சொல்லி, அதற்குப் பிறகு, மறுபடியும் பழைய அய்யரே வந்து விட்டார். பட்னாவிஸ் முதலமைச்சரானார்.
இதுபோல, அசாம், திரிபுரா, பீகார் மாநிலங்களிலும்.
பீகாரில் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நிதிஷ் குமார் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. எங்களைத் தவிர, வேறு யாரும் அவர் பெயரை உச்சரிப்பது கிடையாது. அவருக்கே அவர் பெயர் மறந்து போயிருக்கும்; மறதி அதிகம்.
தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்….
தேர்தல்களை நடத்தும் முறையில், தேர்தல் ஆணை யத்தின் உதவியுடன், தேர்தல் தேதிகள் அறிவிப்பது முதல் முடிவுகள் அறிவிப்பது வரை பா.ஜ.க.வுக்குச் சாதகமான சூழலை அமைத்துக் கொள்வது ஒரு வகை.
தேர்தலில் எக்கட்சி வெற்றி பெற்றாலும், அக் கட்சியினரை அப்படியே வளைத்து, பிளவுபடுத்தி, ஆளுநர்கள் மூலம் ஆட்சியமைக்கும் காலத்தை நீட்டிப்பது முதல் அதிகாலை பதவியேற்புகள் வரை ‘‘குதிரை பேரங்களை’’ வேடிக்கை பார்க்கவைப்பது மற்றொரு வகை.
பா.ஜ.க.விற்கு இப்போது மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடையாது!
சரி, இவர் அந்தக் கட்சிக்குப் போகிறார், இந்தக் கட்சிக்குப் போகிறார், என்பவை இருக்கட்டும்; ஆனால், ஆர்.எஸ்.எஸ். அதைச் செய்யும்போது, அதற்குப் பின்னணியில் ஒரு மிக முக்கியமான ஆபத்து ஒளிந்து கொண்டிருக்கிறது. என்ன அந்த ஆபத்து? என்றால், இப்பொழுது அவர்களுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடையாது. இப்பொழுது நிறைய அளவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், அது போதாது. ஏனென்றால், நம்முடைய மாநிலங்கள் போல இருக்கக்கூடியதில், தொகுதி வரையறை என்று திடீரென்று கொண்டு வந்து, மகளிர் மசோதா வையும் அதில் இணைத்து, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, அந்த மசோதாவை வெற்றி பெறச் செய்யலாம் என்ற அவர்களின் சூழ்ச்சியை, அன்றைக்கு நாம் முறியடித்தோம் – தமிழ்நாடுதான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான்…
அதிலே அவர்கள் வெற்றி பெறவில்லையே என்கிற ஆத்திரமும், கோபமும் அவர்களைச் சிந்திக்க வைத்தது. அதனால் என்ன செய்தார்கள் என்றால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தை நினைத்தவுடனே திருத்தலாம்; அரசியலமைப்புச் சட்டத்தையே தூக்கிப் போடலாம். அடிக்கட்டுமானத்தையே மாற்றலாம் என்று சொல்லக்கூடியதை வைத்துக்கொண்டு, இன்றைக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால், இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை வரவேண்டும் என்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆபத்தை அவர்கள் உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளனர். அதிலே வேகமாக, என்ன செய்தார்கள் என்றால், ஒவ்வொரு முறையும் கட்சிகளை மாற்றி, மாற்றி, மாற்றிக் கொண்டு வந்து, இன்றைக்கு எந்த அளவிற்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னால், நண்பர்களே! மேற்கு வங்கத்துக்கு அதற்காகத்தான் போனாார்கள்.
சனிப்பெயர்ச்சி மாதிரி, எம்.எல்.ஏ. பெயர்ச்சி, எம்.பி. பெயர்ச்சி எல்லாம் தொடர்ச்சியாக வருகின்றன!
மேற்கு வங்கத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கவேண்டும், ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்பது ஒரு பகுதி – ஒரு தோற்றம். அதைவிட மிக முக்கியமாக ஏற்கெனவே இருந்த எம்பிக்களை எல்லாம் அப்படியே இடப்பெயர்வு செய்துவிட்டார்கள். நம்ம ஊரில், ‘‘சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என்று சொல்வார்கள். புதன் அங்கேயே இருக்கிறார், செவ்வாய் மாறுகிறார்’’ என்பார்கள்.
இப்பொழுது அந்த சனிப்பெயர்ச்சி மாதிரி, எம்.எல்.ஏ. பெயர்ச்சி, எம்.பி. பெயர்ச்சி எல்லாம் தொடர்ச்சியாக வருகின்றன.
அப்படி வரக்கூடிய ஒரு சூழ்நிலையில், அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி நண்பர்களே,
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வலிமை பெற, நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 360 இடங்கள் வேண்டும். ஏற்கெனவே, 292 இடங்களை வைத்திருக்கும் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிளவுபட்ட 20 எம்.பி.க்களும் அண்மையில் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவிலிருந்து அண்மையில் விலகி ஏக்நாத் ஷிண்டே அணிக்குத் தாவியுள்ள 6 எம்.பி.க்களுமாகச் சேர்த்து, இப்போது 319 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.
பெரும்பான்மை வந்துவிட்டால், என்னாகும்?
இன்னும் கொஞ்சம்தான், அதையும் உண்டாக்கி விடுவார்கள், எப்படியும். அதற்குத்தான் பல பேரை தயாரித்திருக்கிறார்கள் நேரடியாக, மறைமுகமாக. இது சாதாரண குதிரை பேரம் அல்ல, மிக ஆபத்தானதாகும். அப்படி அவர்களுக்குப் பெரும்பான்மை வந்துவிட்டால், என்னாகும்? அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்தில் சொல்லப்பட்டு இருக்கிற ஒரு பகுதி, ஆரம்பமே என்னவென்றால், அதுதான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
‘‘WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC’’
இந்தியாவை நமக்கு நாமே உருவாக்கி கொண்டி ருக்கிறபோது, முழு இறையாண்மை உள்ள, சமதர்ம, மதச்சார்பின்மை உள்ள, ஜனநாயகக் குடியரசு அதுதான் இந்தியா!
பாசிசம் ஜனநாயக ரீதியாகவே வரும்!
இந்த அய்ந்து அம்சங்களும் கண்மூடிக் கண் திறப்பதற்குள்ளாக, மறந்துவிடும்; மின்னல் தாக்கி, கண்ணை இழந்தவனைப் போல, நம்முடைய நிலை எப்படி ஆகப்போகிறது என்று சொன்னால், நண்பர்களே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ஜனநாயகம் இருக்காது. பாசிசம் – சில பேருக்குப் பாசிசமா? பாயசமா? என்று புரியாது. அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஆனால், நமக்குப் பாசிசமும் புரியும்; பாயாசமும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, அந்தப் பாசிசம் ஜனநாயக ரீதியாகவே வரும்; ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது அப்படித்தான். ஹிட்லர் சர்வாதிகாரியானார் – ஜனநாயகத்தின் மூலம் சர்வாதிகாரியானார். நான் அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்த மாணவன். பார்லிமெண்ட் மூலமே வந்தார்; மிகப்பெரிய அளவிற்கு அப்படிப்பட்ட ஒரு பேராபத்து இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.
மனுதர்மம் தான்
அரசியலமைப்புச் சட்டமாக வரும்!
அதற்குத்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல். இந்தக் கோஷம் – ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கி றார்கள். ஆள் தூக்கிச் சட்டம் என்பார்கள். இப்போது அந்த ஆபத்துதான் வந்துவிட்டது. எனவேதான், சின்ன விஷயங்களுக்கு நாம் அதிகம் செலவு செய்கிறோம். ஆனால், அது பெரிய ஆபத்து! இந்தியாவில் அதிபர் முறை வரவேண்டும். ஜனநாயகம் – நாடாளுமன்றம் இருக்கக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டால், ஜனநாயகம் கிடையாது. இப்பொழுதே இறையாண்மை எங்கேயோ போய்விட்டது. சமதர்மம் கிடையாது; எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். குலதர்மம் தான் வரும் – மனுதர்மம் தான் அரசியலமைப்புச் சட்டமாக வரும்.
இந்த ஆபத்து, அது மட்டுமே இல்லை. அடுத்த படியாக,
SOVEREIGN, SOCIALIST, SECULAR
மதச்சார்பின்மை போய்விட்டது. எல்லோருக்கும் பாத்தீர்கள் என்றால், சிறுபான்மைச் சமுதாயம் வாழ முடியாது. ஆனால், பல பேருக்கு விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல, அங்கு போய்க்கொண்டிருக்கிற ஆபத்து அவர்களுக்குப் புரியவில்லை. காரணம், விளக்கு வெளிச்சமாக இருக்கிறது என்று சொல்லி, விட்டில் பூச்சிகள் போய் விழுந்தால், அதனுடைய வாழ்க்கை முடிந்தது. இதைச் சொல்ல வேண்டிய கடமை, தேர்தலுக்கு அப்பாற்பட்டிருக்கக்கூடிய நமக்கு உண்டு.
No Democracy, No Republic, Democratic Republic
ஏனென்றால், ஒரு குடியரசு என்று சொல்லும்போது, ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது வேறு வகையான குடியரசாக இருக்கலாம். அதையெல்லாம் அம்பேத்கர் போன்றவர்கள் கவ னத்தோடுதான் இதைச் செய்திருக்கிறார்கள். இந்த அடிக்கட்டுமானத்தையே குலைப்பது, அதுவும் ஜனநாயக வழியிலேயே குலைப்பது எல்லாம். நம்முடைய பிரதமர் மோடி அவர்களைப் பார்த்தீர்களேயானால், சில காட்சிகள் ஞாபகத்திற்கு வரும். பதவி ஏற்புக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
அரசியலமைப்புச் சட்டக் கல்வெட்டில்
தலை வைத்துக் கும்பிட்டார் பிரதமர் மோடி!
எல்லோரும் ஹிந்தியில் உறுதிமொழி கூறி பதவி ஏற்பார்கள்; பிரதமர் மோடி, மேடையிலிருந்து இறங்கி, ஒரு கல்வெட்டில் தலையை வைத்துக்கொண்டு கும்பிட்டார். அது என்ன கல்வெட்டு என்றால், அரசியலமைப்புச் சட்டக் கல்வெட்டுதான் அது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு இப்படி ஒரு பிரதமர், இதுவரையில் வரவில்லையே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இதோ பாருங்கள், என் கைகளில் உள்ள பெரிய புத்தகம், நன்றாகதான் இருக்கிறது. ஆனால், பல நாள்களாக இந்தப் புத்தகத்தை அலமாரியில் வைத்து, அதுவும் மழையில் அது நனைந்தால், மேல் அட்டை நன்றாக இருக்கும்; உள்ளே பிரித்துப் பார்த்தால், பக்கங்களையெல்லாம் கரையான் தின்றிருக்கும்.
அதுதான் இன்றைய நிலை. நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பன்மதங்கள், பல கலாச்சாரங்கள்,
பல மொழிகள்
இவற்றிற்கு வேலை இல்லை!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரும்பான்மை அவர்களுக்கு வந்துவிட்டால், ஹிந்து ராஷ்டிரம்; நோ செக்குலரிசம். பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இவற்றிற்கு வேலை இல்லை. என் மதம், இந்து மதம் என்ற ஆரிய மதம். அதுதான் எல்லாருக்கும்.
இப்பொழுதே ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது, அதனு டைய நூற்றாண்டு விழாவில், இந்தியாவில் இருக்கின்ற எல்லாரும் இந்துக்கள்தான். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்வார், ராமனைக் கும்பிட்டால், எந்தப் பிரச்சினையும் இல்லை எல்லா மதத்தினருக்கும், கிறிஸ்தவரா? கிருஷ்ணனைக் கும்பிட வேண்டும். அதுதான் இந்துத்துவா, இந்துத்துவா அரசு, இந்து ராஷ்டிரம், இந்து கலாச்சாரம் என்று அதைச் சொல்வார்கள்.
பெரியார் கண்ணாடியைப்
போட்டுப் பார்த்தால்தான், புரியும்!

மற்ற மதத்துக்காரர்களின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்தார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்கடுத்து பன்மொழிகள் முடக்கப்பட்டு, சமஸ்கிருத கலாச்சாரம். பார்ப்பனர்கள் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை வளைத்து, ஒரு பெரிய சூழ்ச்சியை செய்தார்கள். அரசியலமைப்புச் சட்டம் படித்த பலருக்கு இது தெரியாது. பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், இது புரியும்.
கலைஞர் இல்லை என்றால்,
எம்மொழி செம்மொழியாகி இருக்காது!
நம்முடைய தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைக் கொடுத்தார் கலைஞர் அவர்கள். கலைஞர் இல்லை என்றால், எம்மொழி செம்மொழியாகி இருக்காது. செம்மொழியாக தமிழ் வந்ததினால்தான், சமஸ்கிருதம் அதற்கு அடுத்து வந்தது. எங்களுக்கும் செம்மொழி தகுதி கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு முன்பு வரையில், பொய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எங்கள் சமஸ்கிருத மொழி, ‘செம்மொழி செம்மொழி’ என்று. அப்பொழுதுதான் அந்தக் குட்டு உடைந்தது. ஊழல் தெரிந்தது. பரவாயில்லை, கலைஞருக்கு ரொம்ப தாராள மனப்பான்மை – ஏனென்றால், தமிழர்கள் எப்போதுமே அடுத்தவர்கள் வாழ்வதற்கு அக்கறைக் காட்டக்கூடியவர்கள். உடனே வரட்டும், அவர்களுக்கும் அந்தத் தகுதி வரட்டும் என்று நினைத்தார் கலைஞர்.
அவமானத்தை ஆணி அடித்து வைத்திருந்தார்கள்!
ஆனால், அதற்கு முன்னாலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், ‘அபிஷியல் லாங்குவேஜ் ஆப் இந்தியா.’ அதிகாரபூர்வமான ஆட்சி என்று வரும்போது, ‘ஹிந்தி, இன் தேவ்நகரி ஸ்கிரிப்ட்’ இந்த வார்த்தை படித்த வக்கீல்கள் பல பேருக்குக்கூடத் தெரியாது. ஹிந்தி ஆட்சி மொழி சொல்லவில்லை. எந்த மாதிரி ஹிந்தி? ஹிந்தியில் பல ரகங்கள் உண்டு. தேவ்நகரி – தேவ பாஷை உள்ள நகரி. தேவ பாஷை என்றால், சமஸ்கிருதம். அப்படியென்றால், தமிழ் நீஷ பாஷை.
ஆகவே, பாஷையிலயே வேறுபாடு. அவ மானத்தை ஆணி அடித்து வைத்திருந்தார்கள். இன்றைக்கு சமஸ்கிருத கலாச்சாரம் வந்துவிடும். அதனால்தான் கீழடியை விட மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான், சரஸ்வதி நாகரிகம் என்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவுக்கு, நாகரிகம் – பண்பாடுக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது. அது போலவே மிக முக்கியமாக, பன்மதங்கள், பல கலாச்சாரம் – அதற்கு இடமில்லாத அளவுக்கு ஆகும்.
எனவேதான், இந்த ஆபத்து வரக்கூடிய அளவிற்கு, இந்த ‘ஆபரேஷன் 2 தேட்ஸ்’ என்று சொல்லக்கூடிய, மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி என்பதை நோக்கி, இப்போதே அந்த நாடாளுமன்றம் ஜூலையில் கூடுகிறபோதே உங்களுக்குத் தெரியும்.
நம்முடைய உரிமைகள்
காப்பாற்றப்பட வேண்டும்!
மகளிர் மசோதாவாக இருந்தாலும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அந்த ஆபத்து இருக்கிறது. எனவேதான், கட்சித் தாவல்கள் எந்த ரூபத்தில் இருந்தா லும், அது மாநிலத்தில் இருந்தாலும், அது ஒன்றியத்தில் இருந்தாலும், ஆபத்து என்று சொல்லி, ஓர் ஆபத்தைச் சொல்லி முடிக்கவே, இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. இன்னும் பல ஆபத்துகள் இருக்கின்றன. ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.’’ ஆகவே, அந்தப் பணியைச் செய்வது நம்முடைய வேலை. அதைச் செய்வதற்குதான் இங்கே வந்திருக்கிறோம். அதைத்தான் தொடர்ந்து, தமிழ்நாட்டிலே திராவிட இயக்கம் – ‘திராவிட மாடல்’ ஆட்சி சிறப்பாகச் செய்தது. அந்தக் கொள்கையைத் தொடர வேண்டும், தொடர்ந்தால்தான் எவருக்கும் வாழ்வு என்ற நிலை உண்டு என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்! ஏமாந்து விடாதீர்கள்! நம்முடைய உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்!
‘‘உறவுக்கு கை கொடுப்பது வேறு; உரிமைகளைப் பலி கொடுப்பது வேறு’’ இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
