கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை வன்மையான கண்டனத் திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
கோவையில், கடந்த 21.5.2026 அன்று மாலையே ஒரு சிறு பெண் காணாமற் போனார் என்ற புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த சிறு பெண் (10 வயது) கடத்தப்பட்டதோடு, இரு மனித மிருகங்களால் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட் டுள்ளார்.
சூலூருக்கு அருகில் உள்ள கண்ணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குளக்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் அந்தப் பச்சிளம் பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது என்ற கொடுஞ் செய்தியைப் படிக்கும்போது, நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!
கடந்த மூன்று வாரங்களாகவே ஆங்காங்கு நடைபெற்ற கொலைகளும், சட்டம் – ஒழுங்குக்கு சவால் விட்ட நிகழ்வுகளுக்கும் பஞ்சமே இல்லை.
இதே காரணத்தை முந்தைய தி.மு.க. ஆட்சி மீது குற்றஞ்சாட்டித்தான் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான கட்சி, ஆட்சியைப் பிடித்தது என்பது உலகறிந்த உண்மை.
முதலமைச்சர் உடனடியாக காவல் துறையில் உள்ள உயரதிகாரிகளை அழைத்து கலந்தாலோசித்து, குற்றம் புரிந்த அந்தக் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, மிகக் கடுமையான – உச்சக்கட்டத் தண்டனையைப் பெற்றுத் தரும் வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசர, அவசியமாகும்!
இதுபோன்ற நிகழ்வுகள் இதுவே கடைசியானதாக இருக்கவேண்டும் என்பதால், மக்கள் பாதுகாப்புக்கு சட்டம் – ஒழுங்குக்கு உள்பட்ட பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.5.2026
