‘‘பிற மத நூல்களைப் படித்தேன் என்கிறீர்கள். அதைக் கொண்டு உங்களது ஒப்பீட்டு ஆய்வு எப்படி இருக்கிறது?
நான் அப்படி ஒப்பிட்டுப் பார்க்க விரும்புவதில்லை. காரணம், ஒப்பிடுவதால் விமர்சனங்கள்தான் அதிக மாகும். யாரும் விமர்சனங்களை விரும்புவதில்லை என்பதால், யாருடைய உள்ளத்தையும் காயப்படுத்த நான் முனைவதில்லை. எனவே சில அம்சங்கள் தெரிந்தால் கூட கண்டும் காணாதது போல கடந்து விடுகிறேன்.
ஒன்றில் ஒரு சிறப்பும், இன்னொன்றில் இன்னொரு சிறப்பும், வேறொன்றில் வேறொரு சிறப்பும் இருக்கும். அதுபோலவே ஒன்றில் ஒரு குறை, இன்னொன்றில் இன்னொரு குறை இருக்கத்தான் செய்யும். நமக்குத் தெரிந்து விட்டது எது சிறப்பு எது குறை என்று. ஆனால் அதை வெளிப்படையாகப் பேச முடியாது.
நாம் பெற்ற பிள்ளைகளின் சிறப்பும், குறைகளும் நமக்குத் தெரியாதா? ஆனால் அவற்றை உடனுக்குடன் வெளிப்படையாகப் பேசி விடுகிறோமா என்ன? அப்படிப் பேசிவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை நிலையே மாறிவிடும் என்று உணர்கிறோம்தானே? ஆக, நம் பிள்ளைகளை குறித்தே கூட அவர்களிடம் குறை இருந்தாலும் நாம் வெளிப்படையாகப் பேசாமல் நாசூக்காகத்தானே அணுகுவோம்? அதைத்தான் பொதுவெளியிலும் செய்ய வேண்டும்.
என்றாலும் நல்வழிப்படுத்துவதற்காக நம் மக்களை அவ்வப்போது கண்டிப்பதுண்டுதானே?
ஆமாம். அதை மென்மையாகத்தான் சொல்ல முடியுமே தவிர, முன்பு போல தற்காலத்தில் வலிமையாகவெல்லாம் சொல்லிவிட முடியாது.
அதுபோல, அவ்வப்போது நீங்கள் மென்மையாகச் சொல்கிறீர்கள் அப்படித்தானே?
ஆம், அப்படித்தான். “இந்த இடத்தில் கொஞ்சம் பாருங்கள்; இது சரியா என்று நீங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுக் கடந்து விடுகிறேன்.
அப்படியெல்லாம் நீங்கள் சுட்டிக் காட்டும் பொழுது அவர்களது வெளிப்பாடு எப்படி இருக்கும்?
சிலர் விமர்சனங்களை விரும்புவதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், தமது சமய நம்பிக்கைகள் குறித்த ஆய்வு செய்வதையேகூட அவர்கள் விரும்புவதில்லை. சமயங்கள், சமய நூல்கள்,குருமார்கள், மதபோதகர்கள் சொல்வனவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதில் கேள்வியே கேட்கக்கூடாது என்பதாகத்தான் அவர்களது தீர்மானம் உள்ளது.
நீங்கள் சொற்பொழிவாற்றச் செல்லும் இடங்களில் இது போன்ற தருணங்களை எப்படிக் கடக்கிறீர்கள்?
நீ அதைப் பின்பற்றாதே என்று யாரிடமும் நான் சொல்வதில்லை. “எனக்கு அதில் ஏற்பு இல்லை; எனவே நான் அதைப் பின்பற்றுவதில்லை; எனக்கு அது வேண்டாம்” என்று மட்டும் உரையிலேயே சொல்லிவிடுவேன். அதை பல பேர் அகங்காரம் என்றும், நீ என்ன முடிவு சொல்வது என்றும் கூட விமர்சிப்பார்கள். என்னளவில் அது எனக்கு சரியெனப் படவில்லை என்று சொல்லிவிட்டு, அத்தோடு நிறுத்தி விடுவேன்.
அவ்வையார் உடைய பாடல் என்று சொல்கிறோம். ஆய்வுப்படி, அவ்வையாரிலேயே எத்தனையோ அவ்வையார் இருக்கின்றனர். “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகினை…” என்ற வரியை மேற்கோள்காட்டி, “அப்படி வான்கோழியைக் குறை சொல்ல ஒளவையாருக்கு உரிமை இல்லை; ஆண் மயில் தன் பெண்ணினத்தையும், ஆண் வான்கோழி தன் பெண்ணினத்தையும் கவர்வதற்காகத்தான் சிறகுகளை விரிக்கின்றதே தவிர அவ்வையாரைக் கவருவதற்காக விரிக்கவில்லையே? வான்கோழியின் பெட்டைக்கு வான்கோழியின் இறகு தான் தேவை. மயில் அளவுக்கு இறகு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே?
வான்கோழியின் பெண்ணுக்கு மயில் இறகு கவர்ச்சியைத் தராது. அதனால்தான் உலகம் ஒழுக்கமாக இருக்கிறது. இதை ஓர் உவமையாகச் சொன்னால், சரி, ஓர் உவமையைச் சொல்லிவிட்டார்கள்… என்று மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும்… அவ்வையார் சொல்வதில் ஏராளமான நல்லவை இருக்கின்றன… அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்… இந்த இடத்தில் அவ்வையார் கொஞ்சம் சறுக்கும்போது, அவ்வையார் சொன்ன எதையுமே விமர்சனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற ஒன்றை நான் ஏற்கமாட்டேன்” என்று சொல்வேன்.
மாணிக்கவாசகர், “காதார் குழையாட வண்டின் குழாம் ஆட” என்று பாடுகிறார். வண்டின் குழாம் எப்படி ஆடும் ? தலை நிறைய பூ இருந்தால் வண்டு ஆடாதே? காலையில் யார் பூ வைத்திருப்பார்? காலையில் குளிக்க வரும் பெண் தலையில் புதுப்பூ வைத்திருக்க மாட்டாளே?
ஆக, இவையெல்லாம் கவிதையில் போகிற போக்கில் வரும் சொற்பயன்பாடுகள். அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பதை – சண்டையிடுவதைத் தவிர்த்து விட்டு, கவிதை என்று வரும் பொழுது இரண்டொரு சொற்கள் கூடுதலாக வரத்தான் செய்யும் என்ற புரிதலை இயல்பாகக் கொண்ட நிலையில் கடந்து விட வேண்டும்.
அதுபோல ஆழ்வார் பாடும்பொழுது, “சிவபெருமான் பக்தர்களைக் கொன்றால் கூட என்ன? அவர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வருகிறது” என்கிறார். அவர் திடீரென அப்படி ஆகிவிட்டார் கொஞ்சம் அவரை விட்டு விடுங்கள். அவரது சொற்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்படி எடுப்பதில் நியாயம் இல்லை.
ஆழ்வார் நமக்கு வேண்டியவர்தான். ஆனால் அவர் சொல்லும் இந்த அம்சம் நமக்கு வேண்டாம். மாணிக்கவாசகர் நமக்கு வேண்டியவர்தான் அவர் சொல்லும் இந்த அம்சம் நமக்கு வேண்டாம். ஏனெனில் நாம் அதையும் தாண்டி பயணப்பட்டுப் போக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
கம்பனாக இருக்கட்டும்; வேறு யாராக இருக்கட்டும் யாருடைய ‘படைப்புகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதே எனது கூற்று. யாருக்கும் அடிமைப்படாதீர்கள். யாரையும் அடிமைப்படுத்தாதீர்கள். உங்களது விடுதலை உணர்வை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.
இந்தச் சிந்தனை ஓட்டத்திலேயே பயணித்து வரும்பொழுது, இன்று நம் தமிழ்நாட்டில் எல்லாமே சுமூகமான நிலையில் நடந்து வருகிறது. ஆனால் அகில இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுவாகவே மதங்களுடைய – அது இந்து, இஸ்லாம், கிறித்துவம் என எந்த மதமாக இருக்கட்டும்; முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது ஒரு தீவிரவாதப் போக்கு வெகுவாகத் தென்படுகிறதே? இதிலிருந்து விலகுவதற்கு அல்லது இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்கு என்ன வழி?
இப்போது இல்லைங்க. தமிழ்நாட்டை வடநாடு ஆள முடியவில்லை என 50 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே அவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். அதற்கு காங்கிரஸ் என்றோ அல்லது பாஜக என்றோ பெயர் இருக்கலாம். அவையெல்லாம் பிராண்ட் மட்டுமே.
வடக்கில் இருப்பவர்கள், “இந்த தமிழ்நாட்டை நம்மால் ஆள முடியவில்லை; நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை” என்பதைக் கண்டறிந்து கொண்டனர். அதை இந்திரா காந்தி வேறு வகையாகக் கையாண்டார். “நம்மால் இவர்களை வைத்துக் கொள்ள முடியாது; நாம் சொல்வன வற்றையெல்லாம் இவர்கள் கேட்க மாட்டார்கள்” என்று கருதி, “இவர்களோடு மல்லுக்கட்டுவதைவிட, அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய்விடலாம்” என்று கருதிய அவர், “எனக்கு இவ்வளவு எம்.பி. கொடு; நீ இத்தனை எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொள்; நீ பாட்டுக்கு எதையாவது செய்து கொள் ” என்பது போல பட்டும் படாமலும் அவர் ஒதுங்கிக் கொண்டார்.
இப்போது இருப்பவர்களும் முதலில் எப்படி யாவது ஒன்றிய அரசின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றுதான் வந்தார்கள். ஆனால், “இந்தியா முழுக்க வெற்றி பெற முடிகிறது; இந்த தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற முடியாது” என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய அவமானமாக உள்ளது. அது மான உணர்ச்சியாகி, கோபமாக வெளிப்பட்டு விட்டது.
எனவே இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது தேர்தல் அல்ல; படையெடுப்பு. எல்லா வகையிலும் இவர்களை ஒடுக்கியாக வேண்டும் என்ற வேட்கை அடிப்படையில் அவர்கள் தீவிரமாகவே தமிழ்நாட்டை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். படையெடுப்பு என்று வரும்பொழுது மதக்கலவரம், சகிப்புத் தன்மையின்மை போன்ற சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். இந்தத் தெளிவு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது என்று தெரியவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் தமிழ்நாடு அரசியலை நன்கு கவனித்தால், ராமதாஸின் இயக்கம், வைகோ உடைய இயக்கம் என தமிழர்களின் அத்தனை இயக்கங்களும் உடைக்கப்பட்டுவிட்டன; எல்லாமே பிளந்து இரண்டு இரண்டாக நிற்கின்றன என்பதைக் காண்பீர்கள். ஆக, முறையாகத் திட்டமிடப்பட்ட ஒரு போர் அணிவகுப்புதான் நடக்கிறது என்பதை இதிலிருந்து நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.’’
(நிறைவு)
