திருப்பூர், மே 21- சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆளும் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் யூ-டியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களைக் குறிவைத்து, சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளன.
போலிப் புகார்
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போலிப் புகார்களை அளித்து பக்கங்களை முடக்க முயல்வது, கணக்குகளை ஹேக் செய்ய ஓடிபி (OTP) மற்றும் மர்ம லிங்க்குகளை அனுப்பி ஊடுருவ முயல்வது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக வலைதள அரசியல் நெறியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்றுக் கருத்துடைய ஊடகங்களை முடக்க நடக்கும் இந்த டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து, காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இது குறித்து பிரபல சமூக வலைதள பக்கமான ‘ஸ்ட்ரேஞ்ச் டாக்ஸ்’ (Strange Talks) நெறியாளர் வெளியிட்டுள்ள காணொலிக் காட்சிப் பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“கடந்த 17.5.2026 அன்று மாலை எங்களது பக்கத்தில் ஒரு புலனாய்வு காட்சிப் பதிவை வெளியிட்டிருந்தோம்.
அதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததையும், தற்போது திடீரென அவை நடிகர் விஜய்யின் தவெக ஆதரவான பக்கங்களாக மாற்றப்பட்டு, அவரை தேசிய அளவிலான தலைவராக முன்நிறுத்த முயல்வதையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி யிருந்தோம்.” என்று நெறியாளர், ஸ்ட்ரேஞ்ச் டாக்ஸ் கூரீயிருந்தார்.
இந்தப் புலனாய்வு காணொலிக் காட்சிப் பதிவு வெளியான அடுத்த அரை மணி நேரத்திலேயே, தங்களது சமூக வலைதள பக்கங்களை முடக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக தொடங்கின என்று அந்த நெறியாளர் தெரிவித்துள்ளார்.
யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்குவதற்காக தொடர்ந்து போலிப் புகார்கள் (Mass Reports) அனுப்பப்பட்டு வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குள் நுழைய முயன்று, அதற்கான ஓடிபி மற்றும் மர்ம லிங்க்குகள் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளன.
அச்சுறுத்தல்
மைக்ரோசாப்ட் கணக்கு மூலமாக யூ-டியூப் பக்கத்தை ஹேக் செய்ய ‘ஒன்-டைம் பாஸ்வேர்டு’களை (OTP) அனுப்பி சோதனை செய்துள்ளனர். “ஒரு வேளை அவர்கள் அனுப்பிய லிங்க்கை நாங்கள் தவறுதலாக கிளிக் செய்திருந்தால், எங்களது ஒட்டுமொத்த சேனலும் ஹேக் செய்யப்பட்டிருக்கும்” என்று அவர் தங்களது டிஜிட்டல் அச்சுறுத்தலை விவரித்துள்ளார்.
‘ரூட்’ நிறுவனம் மீது சந்தேகம்!
இந்த திட்டமிட்ட சைபர் தாக்குதலுக்குப் பின்னணியில், த.வெ.க. அரசு அமைய தேர்தல் உத்திகளை வகுத்து உறுதுணையாக இருந்த ‘ரூட்’ (Root) நிறுவனம் இருக்கலாம் என அந்த நெறியாளர் தனது காணொலிக் காட்சிப் பதிவில் பலத்த சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், “எங்கள் சேனல் முடக்கப்பட்டாலும், மீண்டும் மக்களுக்காக உண்மைகளை வேறொரு சேனல் மூலமாவது பதிவிட்டுக் கொண்டேதான் இருப்போம்” என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மாற்றுக்கருத்துடைய ஊடக குரல்களை நசுக்க நடக்கும் இந்த டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து, காவல்துறை சைபர் கிரைம் பிரிவு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே தற்போதைய சமூக ஆர்வலர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
