ஆரியத்திற்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா!’’
அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார், கோட்சேவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர்!
இதுதான் ஆரிய தத்துவம் – இதுதான் பார்ப்பனியம் – இதுதான் ஆரியம்!
சென்னை, மே 18 அவர்களுக்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா’’ – அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார், கோட்சேவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர். இதுதான் அவர்களுடைய தத்துவம் – இதுதான் பார்ப்பனியம் – இதுதான் ஆரியம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே 16.5.2026 அன்று காலை 10 மணியளவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
இம்மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நீட் தேர்வினால் பல நேரங்களில் பெற்றோர்களே தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இங்கே சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மிகச் சரியாக சொன்னார், இதைவிட கொடுமை வேறு உண்டா? என்று.
கோச்சிங் சென்டர்காரரே ‘டிகிரி சான்றிதழ்’ கொடுத்துவிட்டுப் போகலாமே?
எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வு என்றால், பிளஸ் 2 படிப்பு எதற்கு? 12 ஆண்டுகள் வெறுமே நேரடியாக கோச்சிங் சென்டருக்கே அனுப்பி, கோச்சிங் சென்டர்காரரே ‘டிகிரி சான்றிதழ்’ கொடுத்துவிட்டுப் போகலாமே?
அதற்கடுத்து, MAT என்று சொல்லக்கூடிய மேனேஜ்மெண்ட். அதற்கடுத்து JE தேர்வு – பொறியியல் துறையையும் விட்டு வைக்கவில்லை. ஆகவே, JE Advance for IIT. அய்.அய்.டி. என்ற ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்று அதற்குப் பெயர் சொல்வார்கள். ஆனால், அது ‘‘அய்யர், அய்யங்கார் டெக்னிக்கல்’’தான்.
எல்லா துறைகளிலும் அதனுடைய நுழைவு வாயில் மாதிரி நீட் இருக்கிறது!
ஆகவே, அது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம். அதுமட்டுமல்ல, GATE தேர்வு – NEET – GATE என்று பொறியியல் துறையில். அப்புறம் கட்டடவியல் படிப்பை இன்றைக்கு நிறைய பேர் படிக்கிறார்கள். அந்த ஆர்க்கிடெக்சர் படிப்பை எடுத்துக்கொண்டால், அதிலேயும் NETA என்று சொல்லக்கூடியது. ஆக, IISER BSMS, NEXT Msc என்று National Institute of Fashion Technology (NIFT) இப்படி எல்லா துறைகளிலும் அதனுடைய நுழைவு வாயில் மாதிரி, வெளியில் தெரிகிறது. இப்போது அதிகமாக மக்கள் மத்தியில் இருப்பது இது மட்டும்தான். இதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்தையே இருண்ட காலமாக ஆக்குவதுதான் நீட்!
ஆக, ஒட்டுமொத்தமாக சுருக்கமாகச் சொன்னால், மனுதர்மப்படி உயர் ஜாதிக்காரர்களை தவிர, ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் யாரும் படிக்க முடியாது. அதற்காகத்தான் அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படைத் தகுதியையே குறைத்து, என்ன செய்தார்கள் என்றால், 15(4) ஒரு தவறான விளக்கம் கொடுத்தார்கள். அந்தத் தவறான விளக்கம் என்னவென்றால், ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் என்று சொல்லி, உயர்ஜாதிக்காரர்களுக்கே கொடுக்கக்கூடிய அளவிற்குக் கொண்டு வந்தார்கள். மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், வழக்கு உயர், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றால், நீதிபதிகள், ‘‘Have a good reliable quantum – Quantify Data’’ இருக்கா? என்று கேட்பார்கள். இதெல்லாம் கணக்கு எடுத்திருக்கீங்களா? என்று. ஆனால், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் மட்டும் அந்தக் கேள்வி கிடையாது. ஆக, எவ்வளவு பெரிய சூழ்ச்சி. இது ஒன்றுக்காக மட்டுமல்ல நண்பர்களே, இந்த இயக்கம் போராடுவது – மாணவர்களின் எதிர்காலத்தையே இருண்ட காலமாக ஆக்கி வைப்பதற்கு, முன்னோட்டம்தான் – அடிப்படைதான் இந்த நீட்.
எனவே, நீட் தேர்வு என்பது முற்றாக, வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, இதிலே காம்ப்ரமைஸ், இதிலே சமாதானம், இதிலே சமரசம் எதுவும் கிடையாது என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு பெரிய ஆபத்து நடுவிலே வந்திருக்கிறது. என்ன அந்த ஆபத்து என்று சொன்னால், பல்கலைக்கழகங்கள்தான் அவர்களுடைய வாய்ப்பு. அந்த பல்கலைக்கழகங்களே இப்போது தேவையில்லை. அதற்குப் பதிலாக, எங்கள் மத்தியிலேதான், மிக முக்கியமாக நாங்கள் நடத்துவோம் என்று சொல்லி, புதிய மசோதா –புதிய ஒரு ஆபத்து! செய்தியாளர்கள், மற்றவர்கள், அறிஞர்கள், கல்வி அறிஞர்கள், நம் வீட்டுத் தலைவர்கள் இதைப் பற்றி அறிக்கை விட வேண்டும். அதில் கவனத்தைக் கொண்டு போக வேண்டும். ஏனென்றால், எதையும் முதலில் கூர்ந்து பார்க்கக்கூடிய பார்வை எங்களுக்குத் தான் உண்டு. எங்களுக்கு இந்த வேலையைத் தவிர, வேறு வேலையே கிடையாது.
விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்!
இங்கே சிறப்பாகச் சொன்னார் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள், நினைவூட்டினார்கள். புதிய சட்டம் ஒன்று வந்திருக்கிறது. என்ன அந்தச் சட்டம் தெரியுங்களா? இது அடுத்த ஆபத்து – மிகப்பெரிய ஆபத்து – சாதாரண ஆபத்து அல்ல! விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (Viksit Bharat Shiksha Adhishthan) இதைச் சொன்னாலே வயிற்று வலி வரும். இதைக் கேட்கிறவர்களுக்கு, என்னைப்பற்றி சந்தேகம் வரும், மொட்டையாகப் படித்தால். ‘‘நன்றாகத்தானே இருந்தார், திடீரென்று இவருக்கு என்னாயிற்று?’’ ஏனென்றால், அவ்வளவு ஹிந்தித் திணிப்பு அவ்வளவு மோசம்.
கூட்டுக்குழுவையெல்லாம் அவர்கள் பூட்டுக் குழுவாக்கி விடுவார்கள்!
இந்த விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (Viksit Bharat Shiksha Adhishthan) மசோதா, நம்முடைய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்; இதைப்பற்றி அவர் நாடாளுமன்றத்தில் தெளிவாகப் பேசுவார். இப்பொழுது அது கூட்டுக்குழுவில் இருக்கிறது. கூட்டுக்குழுவையெல்லாம் அவர்கள் பூட்டுக் குழுவாக்கி விடுவார்கள். எந்தக் கூட்டுக் குழுவையும் அவர்கள் உருப்படியாக பார்த்ததில்லை. பல சடங்குகளில், அது ஒரு கூடுதல் சடங்கு. அப்படித்தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், ‘‘பந்தியில் பரிமாறுகிறவன் நம்மாளாக இருந்தால், எந்த மூலையில் உட்கார்ந்தால் என்ன?’’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது மாதிரி அவர்கள் ஆளைப் போட்டு வைத்து, அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்கள்.
அய்.அய்.டி. போன்ற இடங்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள்!
முற்றாக இந்த நாடாளுமன்றக் குழுவில் இருக்கிறதே யுஜிசி – பல்கலைக்கழக மானியக் குழு இருக்கிறது பாருங்கள், அந்த மானியக் குழுவில், ஒடுக்கப்பட்டவர்கள் வந்தவுடனே, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயம் – எஸ்சி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் வந்தபோது, அய்.அய்.டி. போன்ற இடங்களில் அவர்களை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களுடைய மனதை நோகடிக்க முடியுமோ, அதைச் செய்கிறார்கள் அதனால் அவர்கள், மனச்சோர்வு அடைந்து, தற்கொலைகள் எல்லாம் நடைபெறுகின்றன.
காந்தியார், கோட்சேவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர்
அதை எதிர்த்து, வெளிப்படையாகவே வடநாட்டில், உயர் ஜாதிக்காரர்கள் கிளர்ச்சி செய்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அதனுடைய தாக்கம்தான் இது. யுஜிசியையே கலைக்க வேண்டும். அவர்களுக்குப் பயன்படுகிறபோது காந்தியார், ‘‘மகாத்மா’’ – அவர்களுக்குப் பயன்படாதபோது, காந்தியார், கோட்சேவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர். இதுதான் அவர்களுடைய தத்துவம் – இதுதான் பார்ப்பனியம் – இதுதான் ஆரியம்! இதைச் சொல்வதற்கு எங்களை விட்டால், வேறு நாதி இல்லை; அதை நான் மிக வருத்தத்தோடு சொல்கிறேன், பெருமையோடு அல்ல! ஆனால், தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கு. அதற்குத்தான் இந்த அணி!
அரசியல் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; அதைவிட, மிக முக்கியமானது இது என்று சொல்லக்கூடிய வகை யில் இருக்கிறது. ஆகவே, இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாமதமாக வந்தாரா என்பது முக்கியமல்ல; வந்தாரா என்பதுதான் முக்கியம்!
நம்முடைய சகோதரர் எழுச்சி தமிழர் அவர்கள் இங்கே வந்தார். சில நேரங்களில், எங்களுக்குள்ளே விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இவர் பேசிய பிறகுதான், அவர் பேசவேண்டும் என்று. அவர் தாமத மாக வந்தார், அதற்குப் பல காரணங்கள் இருக்கும். தாமதமாக வந்தாரா என்பது முக்கியமல்ல; வந்தாரா என்பதுதான் முக்கியம்.
ஏனென்றால், எல்லாரும் இவருக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்தி களுக்காகத்தான். அவர்தான் எப்பொழுதுமே செய்தித் தலைப்பாக அதிகமாக இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்குத் தெளிவாக உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், நண்பர்களே இரண்டு விஷயம்.
மற்ற தொழில் செய்வதற்குத்தான்
முதலீடு வேண்டுமே தவிர, இந்தத் தொழில் செய்வதற்கு முதலீடே வேண்டாம்!
என்னிடம், ஒரு இளைஞர் கேட்டார்; அவர் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு உள்ளவர். ‘‘சார் நீங்கள் நீட் தேர்வைப்பற்றியெல்லாம் பேசுறீங்களாமே, நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் புதிதாகப் பட்டம் வாங்கிய ஒருவர் வந்து, ‘‘நான் தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இப்பொழுது அதற்கு நிறைய உதவி செய்கிறார்கள் என்று சொன்னார்கள். என்ன தொழில் செய்தால், லாபகரமாக இருக்கும் என்று’’ என்னிடம் கேட்டார். நான் உடனே தயங்காமல் சொன்னேன், ‘‘நீட் தேர்வு தொழில் செய்யலாம்’’ என்றேன் என்றார் அவர்.
அதுதான் இப்பொழுது லாபகரமான தொழில். ஏனென்று கேட்டால், ராஜஸ்தானைப் பாருங்கள்; மற்ற மாநிலங்களில் பாருங்கள்; மற்ற தொழில் செய்வ தற்குத்தான் முதலீடு வேண்டுமே தவிர, இந்தத் தொழில் செய்வதற்கு முதலீடே வேண்டாம். புரோக்கர்கள் தான் வேண்டுமே தவிர, வேறு ஒன்றும் தேவையில்லை.
அதுமட்டுமல்ல, சில நேரங்களில், மற்றவர்களைத் தேட வேண்டும். இப்பொழுது அப்படியில்லை, NTA – National Testing Agency என்று சொல்லக்கூடிய தேர்வாணைய முகவர். அந்தக் குழுவினுடைய யோக்கி யதை என்னவென்பதைப் பார்க்க வேண்டுமானால், இன்றைக்கு அவர்களைத்தான் சிபிஅய் கைது செய்தி ருக்கிறது. எந்த ஆண்டாவது, நீட் தேர்வு முறைகேடு இல்லாமல் நடந்திருக்கிறதா? 10 ஆண்டுகள் ஆகின்றதே, நீட் தேர்வைப் பற்றி வாதாடுகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குச் சவால் விட்டுச் சொல்லுகிறேன் நான், ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்தது என்று விரலை மடக்க முடியுமா? யாராலும் விரலை மடக்க முடியாது.
(தொடரும்)
