அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராகப் பார்ப்பனர் நியமனமா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பான பிரச்சினை என்னாவது

3 Min Read

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனமா?
அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சியில் இருப்போருக்கு அதிகம் அல்லவா?
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நியமனங்களைத் திரும்பப் பெற வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனமா? அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சியில் இருப்போருக்கு அதிகம் அல்லவா? அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராகப் பார்ப்பனர் நியமனமா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமன தொடர்பான பிரச்சினை என்னாவது? தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நியமனங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, தங்கள் விருப்பத்திற்கும், முன்னுரிமைக்கும் ஏற்ப அதிகாரிகளை இடம் மாற்றுவதும், அரசின் விதிகளுக்குட்பட்டு புதிய அதிகாரிகளை நியமிப்பதும் இயல்பு. அரசு அலுவலர்களாக இல்லாதோரையும் சிறப்பு அதிகாரிகளாக நியமிப்பது உண்டு. ஆனால், அண்மையில் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு நேற்று முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்று ஒருவரை நியமித்துள்ளது சரியான நடவடிக்கை அல்ல.

அவரது நம்பிக்கைகள் அவரது உரிமை;
அவற்றுக்கு அரசில் என்ன வேலை?

அவர் முதலமைச்சர் அவர்களின் ‘ஆஸ்தான ஜோதிடர்’ என்று அறியப்படுபவர். ஜோதிடம், தியானம் என்றே தன்னை ஊடகங்களிலும், பொது வெளியிலும் அறிமுகப்படுத்திக் கொண்டவர்.  அப்படிப்பட்ட ஒரு ஜோதிடரை அரசின் செலவில் சிறப்பு அலுவலராக நியமித்துப் பக்கத்திலேயே வைத்துக் கொள்வது, இது மதச்சார்பற்ற அரசு என்பதற்கு ஏற்புடைய செயலல்ல… அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமை களை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சி மன்றத்தின் தலைமைக்கும் உண்டு – கூடுதலாகவே உண்டு.

 

வரவேற்கத்தக்க அண்மைச் செய்தி
ஜோதிடர் நியமனம் ரத்து!

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ‘ரிக்கி ராதன் பண்டிட்’ நியமிக்கப்பட்ட அரசாணையைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.   முதலமைச்சின் ஆஸ்தான ஜோதிடருக்கு ஏன் அரசுப் பதவி என நேற்று முதலே எதிர்ப்புக் கிளம்பியது. சட்டமன்றத்தில் விசிக, தேமுதிக, மஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.   தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையடுத்து, ஜோதிடரைச் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்த அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. முதலமைச்சரின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது.

 

அறிவியலுக்குப் புறம்பான ஜோதிடத்தை அரியணையில் அமர்த்துவது விரும்பத்தக்கதல்ல!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு
51 ஏ(எச்) அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை அடிப்படைக் கடமையாக்குகிறது. ஆனால், அதற்கு மாறாக அறிவியலுக்குப் புறம்பான ஜோதிடத்தை மாநில முதலமைச்சரே முன்னிறுத்துவது சரியானதல்ல.

இந்த நியமனம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இனி இத்தகைய நடவடிக்கைகள் தொடரக் கூடாது.

இந்த நியமனத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டித்திருப்பதையும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் நேற்று முதலே சமூகச் சிந்தனையாளர்கள், பொதுமக்களின் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதையும், சட்டமன்றத்திலேயே பல்வேறு கட்சியினரும் இதனைக் கண்டித்திருப்பதையும் வரவேற்கிறோம். தமிழ்நாடு பெரியார் மண் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன இந்த எதிர்ப்புகள்! இதனைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதே, புதிய அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் நல்லது.

மற்றொரு புறம், தந்தை பெரியாரால் தொடங்கப் பெற்று 50 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதி மன்றத்திலும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தின்படி, பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசால் நியமிக்கப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு முதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையாரா?

இதன்மூலம் ஈராயிரம் ஆண்டு ஜாதி – தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டும் பணி நடந்தது. அதில் இன்னமும் கூட பல்வேறு தடைகள் இருக்கின்றன; நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்த கட்டங்களில் புதிய நியமனங்கள், அர்ச்சகர் பயிற்சிகள் தொடர வேண்டிய தேவை இருக்கிறது. இந்தச் சூழலில் இந்து சமய அறநிலையத் துறைக்கு முதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையார் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

இந்த நியமனம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதுவரையில் நாம் பெற்று வந்துள்ள வெற்றியையும், ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தையும் எக் காரணம் கொண்டும் நாம் இழந்து விட முடியாது. மிக முக்கியமான கால கட்டத்தில் மிகுந்த கவனத்துடன் இப்பிரச்சினைகளை அணுக வேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

13.5.2026   

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *