பெரியாரின் கொள்கை தான் வாழ்க்கை நெறி! அரங்கத்தை நிறைத்த மகளிர்! குழந்தைகள்!! திருச்சி மாவட்டக் குடும்பச் சந்திப்பு!

திராவிடர் கழகம்

“குருதிக் குடும்பத்தைவிட, கொள்கைக் குடும்பமே சிறப்பானது”, எனத் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அதைச் சொற்களால் மட்டும் அவர்கள் கூறுவதில்லை. நிஜ வாழ்க்கையில் அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மாவட்டங்களின் கழகக் குடும்பங்களையும் ஆசிரியர் அறிவார்.

ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களின் பெயரும் அவருக்குள் பதிவான ஒன்று. ஆலோசனையும், அறிவுரையும் பெற ஆசிரியரையே அவர்கள் நாடுகின்றனர். தங்கள் வீட்டுத் திருமணத்திற்குத் தமிழர் தலைவரே தலைமை தாங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். பெண்ணுக்கு மாப்பிள்ளையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணும் முடிவாகும் முன்பே இது உறுதியாகிவிடுகிறது.

“எங்கள் குடும்பத் தலைவர்” என அழைப்பதற்குப் பின்னால் ஆயிரம் காரணங்கள் அடங்கி இருக்கின்றன. நிகழ் காலத்தில் இருக்கும் தோழர்களை மட்டுமல்ல; இறந்த காலத்தில் இருந்த தோழர்களையும் நினைவில் ஏந்தி, அவர்களின் புகழைத் தம் பேச்சினூடே வெளிப்படுத்தி, அந்தக் குடும்பத்திற்கே சிறப்பு செய்வார் ஆசிரியர். மகளும், மகனும், பெயர்த்தியும், பெயரனும் அறியாத தங்கள் குடும்பத்தின் மூதாதையர்களின் செயல்பாடுகளை ஆசிரியரின் மூலம் அறிந்தோர் எண்ணற்றோர்.

இன்னும் சொல்வதானால், அப்படியான பெரியார் பெருந்தொண்டர்களின் வயதை நினைவில் கொண்டு, அவர்களுக்கு நூற்றாண்டு விழாவையும் கழகத்தின் சார்பில் நடத்தி, இயக்கக் குடும்பங்களுக்கு என்றென்றும் துணையாய் இருப்பவர் ஆசிரியர். ஒவ்வொரு தோழரின் மரணமும் “இறப்பு” என்பதாக அல்லாமல், அது கழகத்தைப் பொருத்தவரை பெரும் “இழப்பு” என்றே கருதுபவர் ஆசிரியர். இரங்கல் அறிக்கை எழுதுவது, குடும்ப உறுப்பினர்களிடம் அலைபேசியில் பேசுவது, அருகாமை தோழர்களை இறுதி நிகழ்விற்குச் செல்ல அறிவுறுத்துவது, வாய்ப்பு இருந்தால் அந்தப் பகுதிக்குச் செல்லும் போது, நேரடியாக வீட்டிற்குச் செல்வது என ஆசிரியரின் வாழ்வியல் தொடர் மனிதநேயச் செயல்பாடுகள் தான்!

இந்தச் “சலிப்பற்ற நடவடிக்கைகள்” நமக்குத் தான் வியப்பைத் தருகின்றன. ஆசிரியரைப் பொறுத்த வரை இது ஓர் இயல்பான வாழ்க்கை முறை! ஒருமுறை திருச்சியில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஊருக்குப் புறப்பட வேண்டும். அதிகபட்சம் ஒரு மணி நேரப் பயணம். ஆனால் மதியம் ஓய்வு கூட எடுக்காமல் சற்று முன்னதாகவே கிளம்பிவிட்டார்.

காரணம் இயக்கப் பெண்மணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து, அவர்களைப் பார்த்துச் செல்ல வேண்டும் எனத் திட்டமிடுகிறார். அப்படிச் சென்றால் கூடுதலாக 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதை அறியாதவரல்ல ஆசிரியர். எனினும் தோழர்களின் உடல் மற்றும் மனநலன் பொருட்டும், அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலும், மதிப்புக் கொடுக்கும் தன்மையிலும் ஆசிரியர் எவ்வளவு நேரத்தையும், எவ்வளவு கிலோமீட்டரையும் கடந்து வர தயங்கியதே இல்லை. அதற்கு ஈடுஇணையும் கிடையாது. அதனால் தான் தலைவர் என்று மட்டும் அழைக்காமல், “குடும்பத் தலைவர்” என அழைக்கிறார்கள்.

திராவிடர் கழகம்

பிள்ளைகள் வளர்ப்பு என்பது, எப்போதுமே பெற்றோர்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. அதில் நண்பர்களின் பங்கு உண்டு, சமூக மனிதர்களின் பங்கு உண்டு, திரைப்படங்களின் பங்கு உண்டு. இவற்றின் மூலம் ஏற்படும் கெடுதல்களில் இருந்து மீட்டெடுத்து தான், பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டும். அதிலும் இன்றைக்குக் கூகுள், யூடியூப், வாட்சப், இன்ஸ்டாகிராம் என வளர்ந்த நிலையில், பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்குப் பெரும் “போர்” சூழல் நிலவுகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறார்கள், இளைஞர்கள் நெறி தவறி போகும் நிலை நிறையவே உருவாகி வருகிறது.

இதற்கு மாற்றுத் தீர்வு தான் என்ன? தனி மனிதர்களால், சமூக வலைத்தளங்களுக்கு எதிராகப் போராட முடியுமா அல்லது அதைப் பயன்படுத்தாமல் தான் இருக்க முடியுமா? இப்படியான சூழலில் சமூகம் சிக்கி இருக்கும் நிலையில் தான், “பெரியாரின் கொள்கை ஒரு வாழ்க்கை நெறி” என்பதை நாம் உரத்துச் சொல்ல வேண்டியுள்ளது. தந்தை பெரியார் என்பவர் “கடவுள் இல்லை” என்று கூறியவர் எனப் பார்ப்பனீயமும், அதன் பத்திரிகைகளும் பரப்பி வைத்திருக்கின்றன.

அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. பெரியார் நூற்றுக்கணக்கான கருத்துகளைப் பேசியிருக்கிறார். அதிலொன்று தான் கடவுள் இல்லை என்பது. இந்த ஒன்றே ஒன்றை, அந்த தொண்ணூற்றி ஒன்பதிலும் போட்டு மூடிவிட துடிக்கிறார்கள். அதேநேரம் ஓரளாவது படித்தவர்கள் “தந்தை பெரியார்” என்கிறார்கள். அறவே படிக்காதவர்கள் “அவரா பெரியார்?” என்கிறார்கள். எனினும் அனைவரின் வளர்ச்சிக்கும் அவர்தான் காரணம் என்பது கல்லின் மீது எழுதப்பட்ட எழுத்து.

தந்தை பெரியாரை நன்கு உள்வாங்கினால் கொள்கைகள் மட்டுமின்றி, தனி மனித ஆற்றல், சிறப்பான அணுகுமுறை, மனிதநேய செயல்பாடுகள், மேன்மையான பழக்க வழக்கங்கள், தனித்த நாகரிகம் என ஒரு மனிதருக்கான இலக்கணங்கள் அனைத்தையும் பெறலாம். மேலே பிள்ளைகள் வளர்ப்பிற்கான சிரமங்களைக் குறுப்பிட்டிருந்தோம். அதேநேரம் அந்தச் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களைப் பெரியார் கொள்கையின் பால் கொண்டு வந்துவிட்டால், அவர்களே சிறந்த பிள்ளையாக உருவாகிவிடுவார்கள்.

காரணம் பெரியார் கொள்கை என்பதும், ஒழுக்கம் என்பதும் தனித்தனிச் சொற்கள் அல்ல; இரண்டும் ஒன்றுதான். அதனால் தான் தந்தை பெரியார் கொள்கையே ஒரு வாழ்க்கை நெறி என்று அழைக்கிறோம். 1) “பிறர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஒருவர் எதிர்பார்க்கிறாரோ, அதேபோல தானும் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும். 2) பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. 3) ஒரு மனிதருக்குக் கொள்கை முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்றால், முதலில் ஒழுக்கம் தான் முக்கியம் என்பேன்”, எனப் பெரியார் கூறுகிறார். ஆக இந்த மூன்று கருத்துகளும் தான், தனி மனிதரையும், சமூகத்தையும் ஆரோக்கியமாக உருவாக்கும் கொள்கைக் காரணிகள் ஆகும்.

திராவிடர் கழகம்

அதனால் தான் இந்தச் சமூகத்தைத் தந்தை பெரியாரின் கொள்கை வசம் கொண்டு வர வேண்டும் எனப் போராடி வருகிறோம். மற்றபடி ஒரு தனி மனிதர் கொள்கைக்கு வந்துவிட்டால், அது பெரியாருக்குப் பெருமை கிடையாது; திராவிடர் கழகத்திற்குப் புகழ் கிடையாது. அந்த மனிதர்களுக்குத் தான் இலாபம். எனவே தான் ஒரு குடும்பத்தில் அனைவரையும் பெரியார் கொள்கையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்கிறோம்.

எனவே தான் இயக்க நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வர வேண்டும் எனக் கூறுவது. உங்கள் பிள்ளைகளை, உங்கள் ஒருவரால் மட்டும் வளர்க்க முடியாது; இதுபோன்ற பொது நிகழ்வுகள் ஆயிரமாயிரம் செய்திகளை, அவர்களுக்கு எளிதாகக் கடத்திவிடும். பல மணி நேரம் அறிவுரைகள் சொல்வதைவிட, இயக்க நிகழ்ச்சிகளின் அனுபவம் அதிகப் பக்குவத்தை ஏற்படுத்தும்.

எனவே தான் ஆசிரியர் அவர்கள் குடும்பச் சந்திப்புகள் அதிகம் நிகழ வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். அந்த வகையில் 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 09.30 மணிக்குத் தொடங்கி, மதியம் 01.30 வரை திருச்சி மாவட்டத் திராவிடர் கழகக் குடும்பச் சந்திப்பு, திருவெறும்பூரில் நடைபெற்றது. எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே தோழர்கள் திரண்டனர். குறிப்பாகக் குழந்தைகளும், மாணவர்களும், மகளிரும் அரங்கத்தையே நிறைத்துவிட்டனர்.

நடனம், பாடல்கள், சிலம்பம், கராத்தே, உரைவீச்சு, இசை நாற்காலி, பொழுபோக்கு விளையாட்டுகள், மனமகிழ் நிகழ்ச்சிகள் எனப் பெரும்பாலும் மகளிர், குழந்தைகளை மய்யப்படுத்தி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அய்ந்து வயது முதல் எண்பது வயது வரையுள்ள அனைத்துத் தோழர்களுக்கும் நிகழ்ச்சிகள் இருந்தன. வந்திருந்த அனைவருமே பங்கேற்பாளர்கள் தான்!

நிகழ்வில் கலந்து கொண்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் விதமாகத் தந்தை பெரியார் குரலில் பேசி மகிழ்வித்தார். அதில் 5 மாணவர்களை அழைத்து, “தந்தை பெரியாரைச் சந்தித்தால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள்?”, எனக் கேட்டு, அதற்குப் பெரியார் குரலிலேயே அழகாகப் பதிலுரைத்தார். மருத்துவர் சரோஜா அவர்களும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக் குறித்துக் கருத்துக் (Feedback) கூறிய மகளிர், நீண்ட நாட்கள் கழித்து வாய் விட்டுச் சிரித்ததாகவும், மனநிறைவாய் இருந்ததாகவும், உற்சாகமாய் பேசினார்கள். நமது கொள்கைப் பயணத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டங்கள், மாநாடுகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். அந்த நீண்ட நெடிய பயணத்தில், இந்நிகழ்ச்சி என்பது ஓர் இளைப்பாறுதல். இனி வரும் காலங்களில் தோழர்களின் பயணம் இன்னும் வேகம் பெறும்.

“ஆடி முடித்த பிறகு களைப்பாக இல்லை என்றால், சரியாக ஆடவில்லை என்று பொருள்”, எனக் கூறுவார்கள். அதேபோல ஒரு நிகழ்வு முடிந்தால், அது நம் மனதை விட்ட அகல சில நாட்கள் ஆக வேண்டும். அதுவே சிறந்த விழா! இதுவும் அந்த வரிசையில் இடம்பிடித்தது. தொடர்ந்து விருத்தாசலம் கழக மாவட்டம், இந்தக் குடும்பச் சந்திப்பை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதுவும் நம் “குடும்பத் தலைவர்” தலைமையில் அது மகிழத்தக்கதாய் இருக்க போகிறது. அவர்களுக்கும் முன்னதாக நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

திராவிடர் கழகம்

நிகழ்வில் பங்கேற்ற திருச்சிக் குடும்பத்தார்: இரா.விஜயராகவன், வி.பேபி, பி.அனுராதா, மல்லிகா. பி.இர.அரசெழிலன், க.அம்பிகா, ஜி.பி.அனுஜா, க.அ.யாழினி, க.புனிதா, பு.வி.கியூபா, எஸ்.மேக்னா, ஞா.ஆரோக்கியராஜ், க.அ.தமிழரசன், ஆ.அறிவுச்சுடர், அ.சிவானந்தம், சி.கனகராசு, மு.சேகர், வெ.ரூபியா, சி.நிர்மலா, ம.சங்கிலிமுத்து, எம்.மணியம்மை, எம்.சங்கீதா, இரா.தமிழ்ச்சுடர், விடுதலை க. கிருட்டிணன் கே.இராமமூர்த்தி, ஆர்.யாழினி, ஆர் குர்த்தீஷ், சு.சாந்தி, சு.அறிவுச்செல்வன், எம்.பாண்டி, சு.அன்புச்செல்வன், க.பாண்டி, வி.அம்மணி, அ.இராமச்சந்திரன், ஆர்.தவமணி, ஆர்.டி.டார்வின், ஆர்.டிதமிழழகன், சு.இராஜசேகர், ஜி.அமுதா, ஏ.ஜி.இரணியன், ஏ.ஜி.யாழ்மதி, சே.வசந்தி, ஆர்.பேபி, எம்.ஆர்.காவியா, எஸ்.வெற்றி, வி.விதார்த், வி.வானதி,

அ.கோ.அன்பழகன், ஆ.பாண்டிக்குமார், அ.இரா.தமிழமுதன், ர.இராஜேஸ்வரி, ச.பாலகங்காதரன், பி.ஸ்டாலின், ச.பாரததேவி, ச.கணேசன், மா.கனகராஜ், மு.லோகநாதன், பெ.இராஜேந்திரன், ரா.வளர்மதி, வி.தீபா, ஆர்.வெண்ணிலா, கே.தேன்மொழி, மா.செந்தமிழினியன், சு.பன்னீர்செல்வம், சு.அண்ணா இராமலட்சுமி, பா.லெ.மதிவாணன், வே.அசோகன், இரா.மோகன்தாஸ், சோம.இளங்கோவன் சரோஜா இளங்கோவன், சந்துரு இளங்கோவன், சி.பொற்செழியன், பி.மலர்மன்னன், எம்.ஆனந்தி, ஆ.அசேக்குமார், அ.தமிழ்க்கவி, அ.அன்புலதா, சி.இராஜேந்திரன், அ.கு.யாழ்மதி, டார்வின், வீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: வி.சி.வில்வம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *