திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மூலம் உலகுக்கே தமிழை, எளிய முறையில் கற்றுக்கொள்ள, கணினி முதலியவற்றில் பயன்படுத்த வைத்து, உலக நாடுகளில் தமிழ் எளிதில் பரவும் வகையில் கொண்டு சென்றவர் தந்தை பெரியார். (‘பகுத்தறிவு இதழ்’, 13.1.1935).
‘‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
‘‘எம் மொழி செம்மொழி’’ என்ற உரிமையைப் பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அது மட்டுமல்லாமல், மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய மொழி வாழ்த்தின் சில முக்கியப் பகுதிகளைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ மொழி வாழ்த்தாக ஆக்கி, அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட ஆணை பிறப்பித்தார். (அரசு ஆணை எண்: 1393 (தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை) நாள்: 17.6.1970).
தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது!
ஆனால், அதனைத் தவிர்க்கும் வகையில், இன்றைய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்திருக்காமல், கண்ணை மூடிக் கொண்டு அவமதித்த காரணத்தால், அதற்குத் தனியாக ஓர் ஆணையே பிறப்பிக்கவேண்டிய அவசியம் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு ஏற்பட்டது. பின்னர், அதை மாநிலப் பாடலாக அறிவித்தும் ஆணையிட்டது தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க. அரசு! (அரசு ஆணை எண்: 272 – தமிழ் வளர்ச்சித் துறை நாள்: 17.12.2021).
இருந்தும், தொடர்ந்து தமிழ்மொழி, தமிழ்நாட்டிலேயே மதிக்காத வகையில், அரசு நிகழ்ச்சியில் பாடுவது தவிர்க்கப்படுவதைவிட, பெருத்த வேதனையும், வெட்கமும் வேறு ஏது?
ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது?
அந்தப் பாடலை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில், தற்போது துணைவேந்தராக உள்ளவர் நடந்து கொண்ட முறை பலரின் கண்டனங்களைப் பெற்றது. மீண்டும் பதவி நீடிப்புக்காகவோ, ஆளுநரைக் ‘குளிர்’விப்பதற்காகவோ, அதனால் ஏற்படும் பயனை எதிர்ப்பார்த்தும்தான் அவ்வாறு நடந்துகொண்டார் என்று பேசிக் கொள்ளப்படுகிறதே! அது ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது?
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டிலேயே மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவது, ஒரு மன்னிக்கப்படக் கூடாத குற்றம். அதை முதலில் பாட வற்புறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்தபோது, ‘‘இதில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். முதலில் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் பாடுவதுதான், அரசு நிகழ்ச்சிகளில் நடைமுறையாக இருக்கவேண்டும்! இதற்காக பிரத மருக்கு, இரண்டுமுறை கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்கது!
ஆனால், சட்டமன்றத்தில் ஆளுநர் வரும்போது மேற்கண்டவாறு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்து பாடப்படுவதில்லை என்பது ஏற்கத்தக்கதா?
சட்டமன்ற நடவடிக்கையும் ‘அரசு நிகழ்ச்சிதான்’ என்பதை உணர்த்தியாக வேண்டும் – அதை உணராதவர்களுக்கு!
தனிச்சட்டமாகவே ஆக்கவேண்டும்!
இதற்குச் சிறந்த வழி, இதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதைவிட, தனிச்சட்டமாகவே ஆக்கப்பட வேண்டும். இதனைக் கடைப்பிடிக்காததை ஒரு குற்றமாக அந்தச் சட்டத்தில் பிரிவுகள் தெளிவுடன் அறிவிக்கவேண்டும்.
அதற்குப் பிறகு, அரசு யாரையும் ‘‘கெஞ்ச வேண்டிய’’ அவசியமும் இல்லை.
முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சியில் இப்படி ஒரு சட்டத் திருத்தம், புதிய சட்டமாக வந்தால், அவரது ஆட்சிக்கும் பெருமை சேர்க்கும்!
சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.8.2026
