நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா – மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக அல்ல!

5 Min Read

கபிஸ்தலம், ஏப்.21  நாடாளுமன்றத்தில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டு வந்த மசோதாக்கள் மகளிர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்காக அல்ல; அதை முகமூடியாகப் பயன்படுத்தி, அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தைக் கொண்டு வருவதற்கான திட்டமே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

கபிஸ்தலத்தில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர்

இன்று (21.4.2026) கபிஸ்தலத்திற்குத் தேர்தல் பரப்புரைக்காகச்  சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு

செய்தியாளர்: தி.மு.க. தலைமையிலான கூட்ட ணிக்கு வெற்றி வாய்ப்பு 234 தொகுதிகளில் எப்படி இருக்கிறது?

தி.மு.க. கூட்டணிக்கு
நூறு சதவிகிதம் வெற்றி  உறுதி!

தமிழர் தலைவர்: நூறு சதவிகிதம் வெற்றி உறுதி. இப்போது அடுத்த கேள்வி என்னவென்றால், சட்ட மன்றத்தில், எதிர்க்கட்சித் தகுதியைப் பெறக்கூடிய அளவிற்கு, எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவார்களா? என்பதுதான் இன்றைய மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வியாகும்.

எடப்பாடியார் அணிக்கு எந்தத் தொகுதியிலும் வாய்ப்பில்லை. காரணம், ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக ‘ஸ்டாலின் அலை’ வீசுகிறது.

மக்கள் உணர்வுகளை நேரில் பார்த்து
நான் சொல்கிறேன்!

மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். குறிப்பாக மகளிர் எல்லாவிதமான அனுபவங்களையும் பெற்ற காரணத்தினால், முகமலர்ச்சியோடு மீண்டும் மு.க.ஸ்டா லின் ஆட்சிதான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

குமரியில் தொடங்கி,  எல்லாத் தொகுதிகளுக்கும் சென்றுவிட்டு, இன்றைக்கு இங்கே வந்திருக்கின்றோம். நேரிலேயே, மக்களைப் பார்த்து, மக்கள் உணர்வுகளைப் பார்த்து நான் சொல்கிறேன், இது வெறும் அரசியல் ஆசையோ அல்லது ஆருடமோ அல்ல!

செய்தியாளர்: ஒன்றிய அரசு, மகளிர் மசோதாவை தனியாக தாக்கல் செய்யாமல், தொகுதி சீரமைப்பு மசோதாவுடன் சேர்த்து தாக்கல் செய்திருக்கிறதே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஒன்றிய மோடி அரசு,
மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது

தமிழர் தலைவர்: நல்ல கேள்வி இது! மகளி ருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா 2023 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டு விட்டது.  எப்பொழுது, எப்படி அதை நடைமுறைப்படுத்துவது என்பதுதான் பிரச்சினையாக இருந்து வந்தது. அதை எப்பொழுது வேண்டுமானாலும் நடைமுறைப்படுத்திச் செய்திருக்கலாம்.

ஆனால் அதைச் செய்யாமல், வேண்டுமென்றே அவர்கள் இதைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். எப்படி என்று சொன்னால், சில திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ‘‘ஒரு வில்லனைத் துரத்திக் கொண்டு, காவல்துறை துப்பாக்கி ஏந்திச் செல்லும்போது, அந்த வில்லன், அருகிலிருக்கும் ஒரு குழந்தையைத் தன் மார்புக்கு நேராகப் பிடித்துக்கொண்டு, குழந்தையை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவான்.’’ அதுபோன்று பிரதமர் மோடி, மகளிர் மசோதா என்ற குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு, மக்களிடம் வித்தைக் காட்டலாம் என்று நினைத்தார். ஆனால், அதற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தார் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியேற்றி, அந்த மசோதாவின் நகலை தீ வைத்து எரித்தார். இது தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. விடாது கருப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதை ஆக்கியதன் விளைவாகத்தான், ஒன்றிய மோடி அரசு, மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இப்பொழுதுகூட, பிரச்சாரத்தில் அதைத் திரித்துச் சொல்கிறார்கள். ஏனென்றால், தேர்தல் நடைபெறுகின்ற காலகட்டத்தில், நாடாளுமன்றத்தைக் கூட்டலாமா? தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வர மாட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, உறுப்பினர்கள் பெரும்பான்மையாக, அந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்கள். அந்த மசோதாவும் தோற்கடிக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் வரையறுத்துக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ப தற்காகத்தான், தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை!

அது வெறும் தொகுதி மறுவரையறை அல்ல; அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாகும். அதைச் செய்வதற்கான முன்னோட்டம், முகாந்திரமான வேலைதான், அவர்களின் இந்த முழு முயற்சி!

அவர்களின் தோல்வியை மறைக்கவேண்டும் என்பதற்காக, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை, எதிர்க்கட்சியினர் தோற்கடித்துவிட்டார்கள் என்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தி.மு.க. வில்சன் எம்.பி., கொண்டு வந்த
தனி நபர் மசோதா!

உடனடியாக, அதற்குப் பதில் சொல்லக்கூடிய அளவிற்கு, தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன் எம்.பி.,  பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தைக் கூட்டி பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்தலாம். அதில் ஒரே ஒரு திருத்தத்தை செய்யவேண்டும். அது என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இதுதான் அதில் இருக்கும் குறைபாடாகும்.

இட ஒதுக்கீட்டைப்பற்றி பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய அவசி யம் இல்லை.

உள்ளாட்சித் துறையில் செய்த பெருமை
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு உண்டு!

காரணம், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை, பெண்கள் கேட்காமலேயே, உள்ளாட்சித் துறையில் செய்த பெருமை மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு உண்டு.

ஆகவேதான், மேயர், சேர்மன், நகர மன்றத் தலைவர் போன்ற பதவிகளில், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, அதை என்றைக்கு வேண்டுமானாலும் செய்திருக்கலாம்; மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. அவர்கள் ஒரு பிரச்சார உத்தியாக, ஒரு சூழ்ச்சிப் பொறி யாக, கண்ணிவெடியாகத்தான் இதைப் பயன்படுத்தி னார்கள். அந்த வெடி, அவர்கள்மீதே வெடித்தது. தமிழ்நாட்டு மக்களோ அல்லது பெண்களோ இதில் ஏமாறமாட்டார்கள்.

அவர்களுடைய பம்மாத்து, மாய்மாலப் பேச்சுகள் ஒருபோதும் தேர்தலுக்குச் சரிப்பட்டு வராது!

உண்மையிலேயே அவர்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கி றோம், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டட்டும்; ஒரே நாளில், அதை நிறைவேற்றிக் காட்டட்டும்!

ஆகவே, அவர்களுடைய பம்மாத்து, மாய்மாலப் பேச்சுகள் ஒருபோதும் தேர்தலுக்குச் சரிப்பட்டு வராது. அவர்கள் எதிர்பார்த்த பயனை அளிக்காது!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *