தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய புத்தகத்தை வெளியிட்டது
புதுடில்லி, ஜூலை 8 தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அண்மையில் வெளியிட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு, தற்போது புதிய திருத்தப்பட்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை குறித்த சர்ச்சை
கடந்த பிப்ரவரி மாதம் NCERT வெளியிட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘நீதித்துறையில் ஊழல் மற்றும் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றிருந்தது. அதில், நீதிமன்றங்களில் பெருமளவில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது குறித்தும், நீதித்துறையில் ஊழல் மற்றும் ஒழுங்கீனங்கள் நிலவுவது குறித்தும் எழுதப்பட்டிருந்தது. இது கல்வி மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாட்டின் மிக உயரிய அமைப்பான நீதித்துறை குறித்து, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இத்தகைய எதிர்மறையான கருத்துக்கள் இடம் பெற்றதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிஞ்சு மனங்களில் இது நீதித்துறை குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அந்தப் பாடப்புத்தகத்தை வெளியிட உடனடியாக தடையும் விதித்து அதிரடி உத்தரவிட்டது.
திருத்தப்பட்ட புதிய புத்தகம் வெளியீடு
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, NCERT நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு அந்தச் சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகளை புத்தகத்தில் இருந்து முழுமையாக நீக்கியுள்ளது.தற்போது அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு, முறையாக மறுபதிப்பு செய்யப்பட்ட புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை NCERT அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
