தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பரிதாப நிலை!

3 Min Read

சாத்தூர் தொகுதியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையில் நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்டோர் ‘ரோடு ஷோ’ (வாகன சாலை உலா) மேற்கொண்டதை சாமானிய மக்கள் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றது பேசுபொருளாகி இருக்கிறது. நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் மட்டும் அந்த வாகனத்தில் இரு புறமும் நடந்து வந்தனர்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சொந்தத் தொகுதியான நெல்லையை விட்டுவிட்டு, சாத்தூர் தொகுதியில் களமிறங்கி இருக்கிறார்!

‘தங்கள் சமூக வாக்குகள் அவர் பக்கம் வரும்’ என்று கணக்கிட்டுள்ளார். தேர்தல் பணிக்காக மட்டும் நெல்லையில் இருந்து சுமார் 10 குழுக்களை நயினார் நாகேந்திரன் இறக்கி பணியாற்றி வருகிறார். அவருக்கு அ.தி.மு.க.வும் உறுதுணையாக இருந்து வருகிறது. இருந்தாலும் நயினார் நாகேந்திரன் ‘வெளியூர்க்காரர்’ என்ற விமர்சனத்தை சாத்தூர் மக்களிடையே கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், சாத்தூர் மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் நோக்கில் நயினார் நாகேந்திரன் பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி வருகிறார்.

அந்த வகையில், பா.ஜ.க. தேசியத் தலைவரான நிதின் நபின் சாத்தூர் தொகுதியில் ‘ரோடு ஷோ’ சென்றார். அவருடன் நடிகர் சரத் குமார் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த ரோடு ஷோவின் போது நிதின் நபின், நயினார் நாகேந்திரன் ஆகியோர் வணக்கம் வைத்துக் கொண்டே சென்றாலும், அங்கிருந்த மக்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை. பொது மக்கள் அவரவர் பணிகளை செய்து கொண்டு இயல்பாகச் சென்றனர்.

நிதின் நபின் மற்றும் நயினார் நாகேந்திரனின் ‘ரோடு ஷோ’வில் மக்கள் கூட்டம் இல்லாமல் ‘காற்று வாங்கியது’ என்றே சொல்லலாம். இதனால் நயினார் நாகேந்திரன் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. தேசிய பா.ஜ.க. தலைமை முன்பாக கூட்டத்தைக் காட்ட முடியாதது நயினார் நாகேந்திரனுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்ெகனவே மக்களவைத் தேர்தலின் போது மதுரையில் ‘ரோடு ஷோ’ மேற்கொண்ட அமித்ஷாவுக்கு மதுரை ஏமாற்றத்தைத் தந்தது. உடன் வந்த பா.ஜ.க.வினரே பூக்களைத் தூவிக் கொண்டு வர அமித்ஷா கோபமாகப் பார்த்தவுடன் மதுரை பா.ஜ.க. வினர் ‘பூ’க்கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டனர்!

2024 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி  சென்னை பாண்டிபஜார் பகுதியில் ‘ரோடு ஷோ’ நடத்தினார். இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரமாண்டத்தைக் காட்டிய பிரதமரின் ‘ரோடு ஷோ’ தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பிசுபிசுத்துப் போனது! மேலும், அவர் ‘இம்முறை 400 இடங்களைத் தாண்டி வெற்றி பெறுவோம்’ என்பதை ஹிந்தியில் ‘‘சார் சொ பார்!’’ என்று கூற, மொழி தெரியாத பா.ஜ.க. ஆதரவாளர்கள் ‘சாக்கோபார்’ (குச்சி அய்ஸ்) என்று கத்தியதும் பெரிதும் நகைப்பிற்குள்ளானது!

இந்த நிகழ்வு தேசிய அளவில் பரபரப்பாகி, மோடியை அவமானத்திற்குள்ளாக்கி விட்டதாகவும் ஆகையால், அன்றைய தலைவர் அண்ணாமலை, தமிழிசை மற்றும் மூத்த பா.ஜ.க. பிரமுகர்களை சந்திக்காமலேயே பிரதமர் சென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ மேற்கொண்டால் அவருக்கும் – பிஜேபிக்கும் மக்கள் பெரு மதிப்பு கொடுத்து, பேராதரவு தருவார்கள்’ என்று எண்ணிய தமிழ்நாடு பா.ஜ.க.வினரால் கூட்டத்தை காட்ட முடியவில்லை. இந்த சிக்கல் பா.ஜ.க.வுக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

அறந்தாங்கியில் பிஜேபியின் தேசியத் தலைவர் நிதின் நபின் கடந்த ஏப்.13ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் நாற்காலிகளிலிருந்து எழுந்து வெளியேற ஆரம்பித்தனர்; ஒரு கட்டத்தில் வெறும் நாற்காலிகளே இருந்தன. அது ஒரு பரிதாபக் காட்சியாகும்.

இந்தப் பரிதாபக் காட்சியைத் தொலைக்காட்சிகளில் பார்த்த மக்கள் நகைக்காமல் என்ன செய்வார்கள்?

பிஜேபிக்குத் தமிழ்நாட்டின் ஆதரவு நிலை இதுதான்! ‘வீண் சவடால்’ எல்லாம் தந்தை பெரியார் மண்ணில் எடுபடாது – எடுபடவே எடுபடாது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *