மகாராட்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள ஜோதிபா கோவிலில் வரிசையில் நிற்பவர்கள் பணம் கொடுத்தால் அவர்களை தனியாக அழைத்துச்சென்று சாமியைப் பார்க்க வைக்கும் நடைமுறை நீண்ட காலமாகவே உள்ளதாம்! இப்படி சென்ற இருவர் சாமியைப் பார்த்துவிட்டு பணம் கொடுக்க மறுத்ததால் 10 அர்ச்சகர்கள் ஒன்று சேர்ந்து பணம் கொடுக்காதவர்களை மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது காணொலியாக தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
கோவில் அர்ச்சகர்கள் வரிசையில் நிற்பவர்களிடம் ரூ.ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை வாங்கிக் கொண்டு வரிசையிலிருந்து வெளியேற்றி முன்னால் அழைத்துச் சென்று சாமி சிலையைக் காண்பிப்பார்கள்.
நாசிக்கைச் சேர்ந்த இரண்டுபேரை அணுகி அர்ச்சகப் பார்ப்பனர்கள் ‘இருவரும் இருபதாயிரம் கொடுத்தால் நேராக சாமியைப் பார்த்துவிட்டு செல்லலாம்’ என்று கூறியுள்ளனர். அவர்களும் தாங்கள் செல்லவேண்டிய ரயில் புறப்படும் நேரம் நெருங்கி விட்டதால் ‘‘பணம் கொண்டு வரவில்லை, கைப்பேசியில் ஜி–பே மூலம் அனுப்புகிறோம்’’ என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஓர் எண்ணைக் கொடுத்து அதில் பணம் அனுப்பக் கூறியுள்ளனர்.
அதில் அவர்கள் பணம் அனுப்பிய பிறகு இருவரையும் சாமி சிலைக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், பணம் குறிப்பிட்ட எண்ணிற்குச் செல்லவில்லை என்று அர்ச்சகர்களுக்குத் தெரியவர, அவர்கள் அந்த இருவரையும் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ‘‘நெட்வொர்ட் சரியில்லாமல் இருக்கும் கொஞ்ச நேரம் கழித்து பணம் உங்களுக்கு வந்துவிடும்’’ என்று கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் நாசிக் செல்லும் ரயிலைப் பிடிக்கவேண்டும் என்றும் கூறி செல்ல முயன்றுள்ளனர். இதனை ஏற்க மறுத்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் அந்த இருவரையும் ‘பணம் கொடுத்து விட்டு இங்கிருந்து செல்லுங்கள்’ என்று கூறி சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் 10க்கும் மேற்பட்ட அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து அந்த இருவரையும் சரமாரியாகக் கைகளால் தாக்கியும், கால்களால் உதைத்தும் உள்ளனர். ஒரு அர்ச்சகப் பார்ப்பான் அங்கிருந்த செங்கல்லை எடுத்து அவர்களைத் தாக்கியுள்ளார். அங்கிருந்த மற்ற பக்தர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். அங்கு காவல் பணியில் நின்ற காவலர்கள் அவர்களைக் காப்பாற்றமுன் வரவில்லை.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார். தற்போது இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இது தொடர்பாக, கோலாப்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் கூறும் போது ‘‘அந்த இருவரும். இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை’’ என்றும், ‘‘அவர்கள் எழுத்துமூலம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றும், ‘‘இந்த காட்சிப் பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றும் கூறியுள்ளார்.
பக்தி என்பது எந்தத் தரத்தில் இருக்கிறது? கோயில் வழிபாடு என்ற பெயரில் சுரண்டல் தொழில் எந்தக் கேவலத்தின் எல்லைக்குச் சென்றுள்ளது என்பதற்கு இதைவிட வேறு எந்த எடுத்துக்காட்டுத் தேவை?
‘‘கோயில்களுக்குப் போவது ஒரு வகை ஃபேஷனாகி விட்டது; பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை அதாவது ‘பிசினஸ்’ மனப்பான்மை காணப்படுகிறது’’. என்று சொன்னவர் நாத்திகர் இல்லை; சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தான்!
(‘தினமணி’ 7.9.1976)
கோடானு கோடி மக்கள் வறுமையில் வாடி உழலுகையில், குழவிக் கல்லை நட்டு வைத்துக் கோயில் கட்டுவதும், ‘காணிக்கை’ என்ற பெயரில் பக்தியை மய்யப்படுத்திப் பணம் சுரண்டுவதும் இந்த 2026இலும் ஏற்கத்தக்கதுதானா?
பக்தர்களிடம் ஏதோ ஒரு வர்த்தக மனப்பான்மை என்பதைவிட ‘பக்தியின் பெயரால் சுரண்டல்’ நடைபெறுகிறது என்பதே சரியானதாகும்.
பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள் – இதுபோன்ற சுரண்டல்கள் முடிவுக்கு வரும்.
‘கடவுளை மற – மனிதனை நினை’ – தந்தை பெரியாரின் அரும் பொருள் நிறைமொழி!
