சென்னை, மார்ச் 16– தேர்தல் செலவுகளுக்கு அச்சப்பட்டு, பழனிசாமி தேர்வு செய்திருந்த வேட்பாளர்களில், 19 பேர் பின்வாங்கியது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தே.ஜ. கூட்டணியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, பழனிசாமி ஏற்கனவே தேர்வு செய்துவிட்டார். மார்ச் 18ஆம் தேதி, பழனிசாமி உள்ளிட்ட 5 அல்லது 6 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
அதைத்தொடர்ந்து, தொகுதி பங்கீடை சுமுகமாக முடித்து, இரண்டாம் கட்ட பட்டியலை, வெளியிட, பழனிசாமி திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த பட்டியலில் விருதுநகர், மதுரை, கடலுார், திருப்பூர், திருச்சி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் தேர்வாகி இருந்த, 19 பேர் திடீரென, நாங்கள் போட்டியிடவில்லை என, பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
விஜய் கூட்டணிக்கு வரவில்லையென்றால், நான்கு முனை போட்டியாக, தேர்தல் களம் மாறும். இதில் வெற்றி பெற, அதிக செலவுகளை செய்யும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால், செலவுகளில் ஒரு பகுதியை ஏற்க, தலைமை மறுத்து விட்டது. இதனால், மொத்த செலவும், வேட்பாளர்கள் தலையில் விழுந்து விட்டது. இதற்கு பயந்து தான், போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், மாற்று வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் பழனிசாமி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் வருசநாடு அருகே வெள்ளிமலை பகுதியில்
அய்ந்து வாக்காளர்களுக்காக
ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது
தேனி, மார்ச் 16- தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை பகுதியில், வெறும் அய்ந்து வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி, வாக்காளர்களின் வசதிக்காகவும், ஜனநாயக உரிமையை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்காக கூட தனி வாக்குச்சாவடி அமைப்பது, தேர்தல் ஆணையத்தின் மக்கள் நலக் கவனத்தை வெளிப்படுத்துகிறது.
இது போன்ற ஏற்பாடுகள், நாட்டின் எந்த மூலையிலும் உள்ள வாக்காளர்களின் குரல் தேர்தலில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்கின்றன.
தேர்தல் நெருங்கும் வேளையில் அதிரடி
கோவையில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பரிசு மழை!
கோவை, மார்ச் 16- தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கோவையில் வாக்காளர்களைக் கவரும் வகையில் அ.தி.மு.க.வினர் பரிசுப் பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் வாக்காளர்களுக்குப் பொருட்களை வழங்க முடியாது என்பதால், அ.தி.மு.க.வினர் முன்கூட்டியே இந்த விநியோகத்தைத் திட்டமிட்டனர். கோவை ஓசூர் சாலையில் உள்ள ‘இதயம் தெய்வம் மாளிகை’ (அ.தி.மு.க. அலுவலகம்) வளாகத்திற்கு வருமாறு மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ரகசியத் தகவல் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வார்டு வாரியாக ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்ட பெண் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.\ வாக்காளர்களுக்குப் பயனுள்ள வகையில் பின்வரும் அய்ந்து வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது:
ஆடம்பரமான ஹேண்ட் பேக்குகள், தண்ணீர் பாட்டில்கள், ஹாட் பிளாஸ்க்குகள் உள்ளிட்ட பொருட்கள். இது குறித்துப் பேசிய பயனாளிகள், “ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் பொருட்களை வழங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் வழக்கத்தை விடக் கூடுதலாகவும், ஆர்வமாகவும் பொருட்களை வழங்கியுள்ளனர்,” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துபாய்/ரியாத், மார்ச் 16- மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தத் தேர்வு ரத்து நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது.
12ஆம் வகுப்பு: மார்ச் 1, 3, 5, 7, 9 ஆகிய தேதிகளிலும், மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு: ஏற்கனவே மார்ச் 3, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகளும், மார்ச் 7 முதல் 11 வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய இந்த அறிவிப்பின் மூலம், வளைகுடா நாடுகளில் உள்ள பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
