சென்னை, ஜூலை 3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்விற்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, இந்திய கம்யூனிஸ்ட் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள் கடிதம் எழுதியுள்ளார்.
இளைஞர்களின் நம்பிக்கை: ஏழை, எளிய இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் மிகப்பெரிய வாழ்வாதார நம்பிக்கையாக இருந்து வருகின்றன. நடப்பாண்டு குரூப்-1 தேர்வுக்கு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக, வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாக்குறுதிக்கு மாறானது: ‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அரசாக தவெக செயல்படும், காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்’ என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு, தற்போதைய இந்த அறிவிப்பு முற்றிலும் நேர்மாறாக அமைந்துள்ளது.எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, குரூப்-1 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரித்து தேர்வை நடத்துமாறு டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
