
மொழிபெயர்ப்பு – தொகுப்பு:
பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன்
28.2.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பெங்களூர் வசந்த நகர் மில்லர்ஸ் சாலை, கருநாடக அரசுக்கு சொந்தமான ‘தேவராஜ் அர்ஸ் பவன்’ அரங்கில் நடைபெற்றது. மாநில கழகத் துணைத் தலைவர் எஸ்.குணவேந்தன் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று, ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
கருநாடக மாநில ஓய்வுபெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் – பேராசிரியர் ரவிவர்ம குமார் – சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் ஆகியோர் கன்னடத்தில் உரையாற்றினர்.
ஆய்வரங்கம் 1இல், “சுயமரியாதை இயக்கம்: நிகழ்காலமும் எதிர்காலமும்” – என்ற தலைப்பிற்கு பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையேற்றார். இந்த தலைப்பில் மா.வள்ளி சங்கர், சு.குமணராசன், நாகேஷ் அரளகுப்பே ஆகியோர் உரையாற்றினர்.
ஆய்வரங்கம் 2இல், “உலக மயமாகும் பெரியார் கொள்கைகள்” என்ற தலைப்பில், முன்னாள் அமைச்சர் பி.டி.லலிதாநாயக், வி.ஆர்.சுதர்சன், ஜானகெரே வெங்கட்ராமையா, நாகரத்தினா, பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவு விழாவிற்கு, கருநாடக வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா, முன்னாள் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவர் எஸ்.காந்தராஜ், பேராசிரியர் கே.எஸ்.பகவான், நடிகர் சேத்தன் அகிம்சா, தி.மு.க. பொறுப்பாளர் ந.இராமசாமி, டி.நரசிம்மமூர்த்தி, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றிய பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமிழில் உரையாற்றினார். செயலாளர் முல்லைக்கோ, முத்துமணி நன்னன் நன்றி கூறினர்.
பேராசிரியர் ரவிவர்மகுமார்

சுயமரியாதை இயக்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசுவதைப் பெருமையாகக் கொள்கிறேன்.
நான் சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தபொழுது, எனக்கு பேராசிரியர் நஞ்சுண்டசாமி, பேராசிரியர் எ.எம்.தர்மலிங்கம் ஆகியோர் வகுப்பெடுத்தனர். இவர்கள் இருவரும்தான் எனக்கு இந்த பெரியார் கொள்கை, சுயமரியாதைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினர். பேராசிரியர் எ.எம்.தர்மலிஙகம் இல்லத்தில் ஒரு முறை பகுத்தறிவாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஜாதி வேறுபாடு ஒழியவேண்டுமானால், ஜாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள் நடைபெற வேண்டுமென விவாதிக்கப்பட்டது. பெண்கள் சம உரிமை பெற வேண்டுமானால், விதவைத் திருமணங்கள் தேவை என்று பேசினர். நான் இந்நிகழ்ச்சியால், பெரியார் சுயமரியாதை கொள்கையில் ஈர்க்கப்பட்டேன்.
1973 அக்டோபர் மாதம் பெங்களூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் பேசினார். சிலர் செருப்பை வீச முயன்றனர், எதிர்ப்பு எழுந்தது. அரங்கம் முழுதும் நிறைந்து விட்டது. பெரியார் பேசுவதற்கு முன், சுவாமிநாதன் என்பவரின், மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. தன் மேஜிக் மூலம் வாழைப்பழம் காணாமல் போவது போன்றவற்றைச் செய்து காண்பித்தார். தந்தை பெரியாரின் நிகழ்ச்சியை பார்த்த பின்னர் எ.எம்.தருமலிங்கம் அவர்களோடு இணைந்து இக்கொள்கையை ஏற்றுக் கொண்டேன்.
என் துணைவியார் பேராசிரியர் சாந்தாபாய் அவர்களை இராகு காலத்தில் திருமணம் செய்து கொண்டேன். கருநாடகாவில் ஜாதி ஒழிப்பு நடைபெற வேண்டுமானால் நாம் ஒரு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென – ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டேன். பிறகு ஜாதி மறுப்புத் திருமணம் – சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்பாக ஒரு சங்கத்தை நிறுவினேன்.
1973ஆம் ஆண்டு டவுன்ஹாலில் பெரியார் பேசும் பொழுது, கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி – என்ற வாசகத்தை கூறினார்கள். கருநாடகத்தில் பகுத்தறிவுக் கொள்கைகள் பரவுவதற்கு மைசூர் பேராசிரியர் இராமதாஸ், பேராசிரியர் நஞ்சுண்டசாமி, பேராசிரியர் பட்டன் ஷெட்டி போன்றவர்கள் பெரிதும் பணியாற்றி உள்ளனர். தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது கருநாடகத்தில் சுயமரியாதைக் கொள்கை குறைவாகத்தான் பரவியுள்ளது.
பெரியார், பார்ப்பனர்கள் எழுதி வைத்துள்ள புராணங்களை நன்றாகப் படித்து – பின்னர் வினாக்களை எழுப்பினர். கணபதி எனப்படும் கடவுள் எலியின் மீது எவ்வாறு அமர முடியும்? எலி இறந்து விடாதா? போன்ற சிந்தனைக் கருத்துகள் மக்களிடையே சிந்தனையை தூண்டியது.
1977இல் மே மாதம் டில்லியில் பிற்படுத்தப் பட்ட சமூகத்தின் இடஒதுக்கீடுக்காக, ‘காகா காலேல்கர்’ கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற ஒரு பேரணி, கூட்டம் நடத்தப்பட்டது. நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மொரார்ஜிதேசாய் பிரதமராகயிருந்த காலத்தில் ‘மண்டல் கமிஷன்’ அமைக்கப்பட்டது. மக்கள் தொகையில் 70 சதவிகிதமாக உள்ள பிற்படுத்தப்பட்ட இனத்திற்கு இடஒதுக்கீடு தேவை என்பதற்காக அமைக்கப்பட்ட இக்கமிஷன் பரிந்துரைகள், அமல்படுத்த பல போராட்டங்களை நடத்தியவர்கள் தலைவர் வீரமணி ஆவார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மண்டல் கமிஷன் நிறைவேற போராட்டங்கள் நடைபெற்றன.
பெரியாரின் கொள்கைகளை கருநாடகத்தில் செயல்படுத்த “கர்நாடகா மாணவா மண்டபா” என்கிற அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்திக் கொண்டுள்ளோம். நானே 400 சுயமரியாதைத் திருமணங்களை நடத்தியுள்ளேன்.
கருநாடகத்தில் சுயமரியாதைக் கொள்கைகளைப் – சமூக நீதியை – பெண் உரிமையை – சமத்துவத்தைப் பரப்ப எங்கள் முயற்சி தொடரும் என்று கூறி முடிக்கின்றேன்.
பேராசிரியர் கே.எஸ்.பகவான்

சுயமரியாதைப் போராட்டம் என்பது நம்ம மக்களுக்கு, இந்த நேரத்தில் தேவையான அவசியமாகிறது. நான் பெரியார் போராட்டம் தொடங்கியபோது பிறக்கவில்லை. மனுதர்மத்தில் நம்மை சூத்திரன் என்று இழிவாக உள்ளது. மனுதர்மம் கூறியது, நமக்கு சுயமரியாதை இல்லை என்பதே ஆகும். மனுதர்மத்தை ஏற்றால், நான் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டதாகும்.
ரிக்வேதம் 10ஆம் அதிகாரத்தில் திருமணம் இப்பெண்ணை முதலில் கந்தர்வன், அக்னி, பிராமணன் ஆகியோர் திருமணம் செய்த பின்னர் நான் இவளை உனக்கு திருமணம் செயது வைக்கிறேன் என்று பார்ப்பன புரோகிதர் கூறுகிறார். சூத்திரனுக்கு ஆஸ்தி கொடுக்கக் கூடாது சூத்திரனுக்கு திருமணம் செய்யும் உரிமை இல்லை என்கிறது மனுதர்மம். நம் மக்களுக்கு அவமானம் என்பதே இல்லை. நம் மக்களுக்கு விஞ்ஞான அறிவே இல்லை. பெரியார் கொள்கை என்பது விஞ்ஞானபூர்வமானது. மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதே பெரியாரின் அடிப்படைக் கொள்கையாகும். மூடநம்பிக்கை ஒழிப்பில்தான் பகுத்தறிவு பிறக்கிறது.
நடிகர், முற்போக்கு சிந்தனையாளர்
சேத்தன் அகிம்சா
சேத்தன் அகிம்சா

தந்தை பெரியார், அவர் வாழும் போது இருந்ததைவிட, அதிகமாக பரவியுள்ளார். உலகம் முழுதும் பெரியார் புகழ் பரவியுள்ளது. பெரியார் மறைந்த பின் அவர் பெருமை மிகுந்துள்ளது. நாம் ஒரு சுயமரியாதை இயக்கத்தில் உள்ளதால் ஜாதி இல்லை, மத வெறி இல்லை. பெரியார் ஒரு மிகப் பெரிய சிந்தனையாளர்.
பெரியார் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அவரை இழிவுபடுத்தி விளம்பரம் செய்திருந்தனர். பெரியாருக்கு மிகவும் அதிக பரிசு கொடுத்தனர். நம் சமுதாயத்தை யார் இழிவுபடுத்தினார்களோ அவர்களே திருந்தும்படி பிரச்சாரம் செய்தனர். பெரியார் 80 வயதிலும் சிறை செல்கிறார். நாம் சிறை செல்லத் தயாரா? பசவண்ணர் பெருமை கூற ஒரு சமுதாயமே உள்ளது.
இன்றும் பெரியாரை இகழ்கின்றனர். ஏன்? அவர் கருத்து நம்மை அழிக்க நினைக்கிறது என்று மேல் ஜாதி மக்கள் எண்ணுகின்றனர்.
தெய்வத்தை நம்புவதற்கு காரணம்; அதனால் நன்மை கிடைக்கும் – லாபம் கிடைக்கும் என்று நம்புகின்றார்களே, ஹிந்துக்கள் எல்லாம் சமம் என்று சொல்ல முடியுமா?
இன்றும், தமிழ்நாட்டில் பெரியார் கொள்கை வாழ்கிறது. ஆட்சி செய்கிறது.
‘திராவிட மாடல்’ என்பதே நமக்கு பெருமையாக உள்ளது. திராவிடம் என்பதே பெரியார் கொள்கையே ஆகும். “திராவிடயிசமும் நம்முடையதாகும்” வீரமணி அவர்களின் தலைமைக்கு-பேச்சுக்கு தலைவணங்கி, அவர் நடத்தும் சிஸ்டம் போன்ற அமைப்பு ஒரு பெருமைமிக்கதாகும்.
யாராகயிருந்தாலும், மனிதனாயிருக்க, தந்தை பெரியாரை, அம்பேத்காரை பின்பற்றுவோம்.
ஜெய் கருநாடகா!
கருநாடக மாநில பிற்பட்டோர் ஆணைய முன்னாள் தலைவர் காந்தராஜ்

நான் தலைவர் வீரமணியின் மாணவன், கருநாடக மாநிலத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதைப் போராட்டம் கடந்த 100 ஆண்டுகளாக – பல சாதனைகளை கடந்து வந்துள்ளது. 1879இல் பிறந்த பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்து, இந்த சுயமரியாதை இயக்கத்தை நடத்தியுள்ளார். சுயமரியாதை போராட்டம் எங்கு தோன்றுகிறது என்றால் – சம உரிமை, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை, சமுதாயத்தில் எந்த மனிதனும் தவறு செய்வதில்லை. ஆனால், மேல் ஜாதியினர் நாம் தவறு செய்ததாக தண்டனை கொடுத்தனர். சமுதாய அடிப்படை உரிமைகள் பெற பெரியார், அம்பேத்கர் போராட்டம் நடத்தினர். பெரியார் Original Thinker யாரைப் பார்த்தும் – பெரியாரின் எழுத்தைப் படித்தும் போராடவில்லை.
நீ தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று கூறியதை எதிர்த்தார். சாமியார் ஒருவர் ஒரு துண்டை ஆசீர்வாதம் செய்து கொடுத்தால் நன்மை கிடைக்கும் என்பது மூடநம்பிக்கையாகும்.
சாமியார்கள் பூஜை செய்தால் படிப்பு, வீடு கட்டல், பெருமை கிடைக்கும் என்பது தவறான எண்ணமாகும்.
“பிராமணிசம்” என்றால் அதர்மம், அநீதி என்று பொருள் ஆகும். பார்ப்பனரிடத்தில் நியாயம் எதிர்பார்க்க முடியாது. நம் 100 ஆண்டு சாதனை இனி என்னவாகும். இந்த சுயமரியாதைப் போராட்டத்தை இன்னும் தொடர வேண்டும். பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே வந்ததற்குக் காரணம் இடஒதுக்கீடு மற்றும் சுயமரியாதை உணர்வாகும். நாம் 97 விழுக்காடு இருந்தாலும் நம்மிடமும் தப்பு உள்ளது. அதுதான் மூடநம்பிக்கை என்பதாகும். இந்த மூடநம்பிககையிலிருந்து வெளியே வரவேண்டும்.
பெரியாரின் உண்மை சிஷ்யர் வீரமணி. அவரைப் பார்ப்பது பெரியாரைப் பார்ப்பதுபோல் உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவிலிருந்து யாரும் வெற்றி பெறக் கூடாது. அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அடிமைகளாகிவிட்டனர். பெரியார் கொள்கை மட்டுமே Social Justice-அய் கொண்டு வரும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்தரங்கை
தொடங்கி வைத்து உரையாற்றினார்
தொடங்கி வைத்து உரையாற்றினார்
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாணடு நிறைவு மாநாடு பெங்களூருவில் நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மராட்டிய மாநிலத்தில் இரண்டு தினங்கள் நடைபெற்றன. மொழிகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் கருத்துகள் ஒன்றேயாகும். கருநாடகத் தலைவர் மு.சானகிராமன் அவர்களையும், செயலாளர் முல்லைக்கோ அவர்களையும் பாராட்டுகிறேன்.
நம் நாட்டில் மனுதர்மத்தினால் ஜாதிய அமைப்பு முறை உண்டாகி – சமுதாயத்தை அசிங்கமானத் தன்மையில் (in Dirty Basis) பிரித்து வைத்துள்ளது. நம் நாட்டில் சமுதாய சமத்துவம் ஏற்படாமைக்குக் காரணம் இந்த ஜாதிய அமைப்பு முறையேயாகும். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பதே நம் சமத்துவக் கொள்கையின் அடையாளமாகும். மனு என்பவர் யார்? அவர் கூறிய தர்மப்படி – பிராமணன் முகத்திலிருந்து பிராமணன் (பார்ப்பான்) பிறக்கின்றான்; தோள்களிலிருந்து ஷத்திரியன் பிறக்கின்றான், தொடையிலிருந்து வைசியன் பிறக்கின்றான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறக்கின்றான் என்பதுதானே மனுதர்மம் கூறும் நீதியாகும். இதைத்தான் டாக்டர் டி.எம்.நாயர், மருத்துவர் என்ற முறையில் இது எவ்வாறு சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினர்.
நாம் இந்த மனுதர்மக் கொள்கைக்கு எதிராக போராடி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும். இந்த ஜாதிய வேறுபாட்டுக்கு அடிப்படை எங்கு உள்ளது என்பதை தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கண்டுபிடித்தனர். அதுதான் மனுதர்மம் என்கிற மூலத்தைக் கண்டுபிடித்தனர். ஜாதிய முறை, ஜாதிய அமைப்பு மனித சமுதாயத்தின் எதிரிகளாகும். இவ்வமைப்பு முறைதான் மனிதனை மனிதன் வெறுப்பதற்கும், இழிவுபடுத்துவதுற்கும் காரணமாகும்.
ஜாதி ஒழிப்புதான் (Eradication of Caste System) தீண்டாமையை, வேற்றுமையை ஒழிப்பதற்கான ஒரே மருந்தாகும். ஜாதி ஒழிப்பு என்பது தீண்டாமையை ஒழிப்பது மட்டுமல்ல; மனிதநேயத்தின் தொடக்கமாகும். சமதர்ம சமுதாயத்தை, ஜாதியற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டுமானால், மனுதர்மத்தை, இந்துத்துவா கருத்துகளை ஒழிக்க வேண்டும்.
மனுதர்மம்தான் பெண்ணடிமை, பெண் இழிவை சமுதாயத்திற்கு அளித்ததாகும். மனுஸ்மிருதி, “நமோசூத்ரா” என்பதன் மூலம் நம்மை இழிவுபடுத்தி – பெண்களை இழிவுபடுத்தி – பெண்களுக்கு சம உரிமை கல்வியில், சொத்தில் இல்லை என்ற மூடநம்பிக்கையை ஏற்படுத்தியதாகும்.
மனுதர்மம் ‘மாயா சிருஷ்டா’ என்கிற தத்துவத்தை அறிமுகம் செய்தது. இத்தகு பிற்போக்குக் கருத்துகளை கூறுவதுதான் பகவத் கீதாவாகும். இத்தகு இழிவுகளை ஒழிக்க தந்தை பெரியாரும், அம்பேத்கரும் பாடுபட்டனர்.
மூடநம்பிக்கை ஒழிப்பை, பெண் உரிமையை தந்தை பெரியார் 1929இல் செங்கல்பட்டு மாநாட்டிலேயே வலியுறுத்தினார். பெயர்களுக்கு பின்னால் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கினார். இதுதான் சமத்துவ சமுதாயத்திற்கான நுழைவு வாயிலாகும் (Entrance to Equality). இன்றைய தினம், இந்திய அரசியல் சட்டம் 51A பிரிவு – மக்கள் அனைவரும், சகோதரத்துவத் தன்மை, பல பிரிவுகளாக பிரிந்திருப்பது என்பதை ஒழித்து ஒன்றிணைக்கும் கருத்தை வலியுறுத்துகிறது (abolish of social diversity) 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னதை இன்று அரசியல் சட்டம் சொல்கிறது.
இத்தகைய சமத்துவம் (equality) கூடாது என்பதுதான் மனுதர்மத் தத்துவமாகும். இதைத்தான், இன்று நாடு முழுவதும் செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவமாகும்.
ஆர்.எஸ்.எஸ். தத்துவம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது – திராவிட இயக்கத் தத்துவம் அரசியல் சட்டத்திற்கு ஆதரவானதாகும். கலைஞர் தன் ஆட்சியில் – பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வந்து – 1929இல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டு கொள்கை தீர்மானத்தை செயல்படுத்தினார். காஞ்சி சங்கராச்சாரியார் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கக் கூடாது, இந்து மதத்திற்கு இச்சட்டம் எதிரானது என்று கூறினார். பெண்களுககு சொத்துரிமையும் – கல்வியும் கொடுப்பது மகாபாவம் என்று கூறியதுதான் சங்கராச்சாரி கொள்கையாகும்.
சுயமரியாதை திருமணம் (Self Respect Marriage) பெண் உரிமையின் முக்கிய ஒரு அங்கமாக கருதப்படுகிறது. தமிர்நாட்டில் அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்தவுடன், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்கினார். தற்பொழுது நடக்கும் திருமணங்கள் மட்டுமல்ல, இதற்கு முன் எப்பொழுது நடைபெற்றிருந்தாலும், அத்திருமணங்கள் செல்லும் என்று தெளிவாக சட்டமாக்கினார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரில், கழகத் தோழர் கதிரவன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு நான் பேசும்போது இந்த சுயமரியாதைத் திருமணம் – அண்ணா சட்டசபையில் சட்டமாக்கியது போன்ற செய்திகளை – கருநாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பிற்படுத்தப்பட்டோரின் தலைவர் தேவராஜ் அர்ஸ் அவர்களிடம் நான் சொன்னபோது – “எனக்கு இச்செய்திகள் தெரியாது, தெரிந்திருந்தால் – நான் முதல்வராகயிருந்தபொழுது இச்சட்டத் திருத்தம் செய்திருப்பேன்” என்று கூறினார். மேலும் அடுத்து நான் தான் (தேவராஜ் அர்ஸ்) ஆட்சி அமைப்பேன், அப்பொழுது இதை முதல் சட்டமாகச் செய்வேன் என்று என்னிடம் கூறினார். ஆனால் அடுத்த தேர்தலுக்கு தேவராஜ் அர்ஸ் அவர்கள் உயிரோடு இல்லாமல் போனது நமக்கு இழப்பாகும்.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே நாடு – என்கிற இந்துத்வா கொள்கை சமூக நீதிக்கு – சமி உரிமைக்கு – பெண் உரிமைக்கு – சமுதாய ஒற்றுமைக்கு எதிரானதாகும். எனவே, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் – சனாதன தர்ம எதிர்ப்பை முதன்மையாக, முன்னிறுத்தி செயல்படுவோம் என்றுரைத்தார்.
– தொடரும்
