நெய்வேலி, ஏப்.20 தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், இல்லம் தேடி வரும் கல்வி, மருத்துவம், வயதானவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தரும் தாயுமானவர் திட்டம் ஆகியவைகளைப் பற்றி மக்களிடம் விவரிக்கும் போது, ‘‘அரசைத் தேடி மக்கள் போய்க்கொண்டிருந்ததை மாற்றி, மக்களைத் தேடி அரசு செல்வதை சாத்தியப்படுத்தியது திராவிட மாடல் அரசு’’ என்று தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துப் பேசினார்.
நெய்வேலி தொகுதி தி.மு.க. வேட்பாளர்
சபா.இராஜேந்திரன்
நெய்வேலி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், 17.04.2026 அன்று மாலை 5 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் அருகில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் சபா.இராஜேந்திரன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவர் சரியாக மாலை 5.15 மணிக்கு நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். பேண்ட் செட் வாத்தியங்களுடன், புலி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேள தாளத்துடன் கழகத் தலைவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. கருப்பு, சிவப்பு செயற்கை மலரிதழ்கள் கழகத் தலைவர் மீது தூவப்பட்டன.
மூன்று புத்தகங்கள் அறிமுகம்!
அதைத்தொடர்ந்து, ‘‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், ஏன்?’’, ‘‘அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது, ஏன்?’’, ‘‘மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும், ஏன்?’’ ஆகிய மூன்று புத்தகங்களை மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்புத்தகங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. மக்கள் விரும்பி வாங்கிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, நிகழ்வுக்கு வருகை தந்திருந்த வேட்பாளர் கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து, கழகத் தலைவரின் முன்னிலையில் மக்களிடம் தனக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமையேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, நெய்வேலி நகரத் தலைவர் இசக்கிமுத்து, நெய்வேலி நகரச் செயலாளர் ரத்ன சபாபதி, மாவட்டக் காப்பாளர் அரங்க. பன்னீர்செல்வம், தேர்தல் பொறுப்பாளர் பெரம்பலூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், ‘‘இந்தத் தேர்தலை வழக்கமான ஒரு தேர்தலாகக் கருதக்கூடாது. நடிகர்கள் சிலர் வருவார்கள். ஏன் இந்த முறை இவர்களுக்கு ஓட்டுப் போட்டால் என்ன? என்ற சிந்தனை உங்களுக்கு வந்துவிடக் கூடாது’’ என்று தொடக்கத்திலேயே எச்சரிக்கை செய்தார். மேலும் பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டில் எல்லோரும் உறவினர்! எல்லோரும் ஓர் நிறை! என்ற நிலையிலே தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்கிறது. பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை வழியிலே நடக்கின்ற ஆட்சி இது’’ என்று குறிப்பிட்டு, மக்கள் நிற்க வேண்டிய பக்கம் எது என்பதைச் சுட்டிக் கட்டினார். தொடர்ந்து, ‘‘105 ஆண்டுகளுக்கு முன்னால், பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதிக்கட்சி தான்! பல நாடுகளில் கூட இந்த சிறப்பு இல்லை. அதன் நீட்சிதான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி!’’ என்று கூறி, ‘சமூக நீதி’ ‘பெண் விடுதலை’ போன்ற கருத்தியலில் உறுதியாக நிற்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பக்கம் நிற்க வேண்டியதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். அடுத்து, இப்போது கூட நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு, தொகுதி மறு வரையறை மசோதாவை நிறைவேற்றும் சூழ்ச்சி நடக்கிறது. ஆகவே, மகளிர் இட ஒதுக்கீடு 2029 வரையிலும் நடைமுறைக்கு வருமா? என்று சொல்ல முடியாது. ஆனால், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் உள்ளாட்சித் துறைகளில் பெண்களுக்கு 50% நடைமுறையில் உள்ளது’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும் கலைஞர் உரிமைத்தொகை பற்றி பேசிய அவர், ‘‘பெண்களின் உழைப்பை அங்கீகரித்து அந்த உழைப்புக்கான உரிமையைப் பெறுவதற்காக மாதந்தோறும் ரூபாய் 1,000/- வங்கிக் கணக்குக்கு அனுப்புவது ‘திராவிட மாடல்’ அரசைத் தவிர வேறு உண்டா?’’ என்று வீரியமான ஒரு கேள்வியைக் கேட்டு, ‘‘100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் நிலைமை எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? அதற்குப் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் போன்றவை எல்லாம் எப்படி பயன்படுகின்றன? கல்வியும், மருத்துவமும் வீடு தேடி வருவதும், வயதானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதும்’’ வேறு எங்காவது உண்டா? என்றும் வினவி, ‘‘அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமைகள் மாறி, மக்களைத் தேடி அரசு செல்லும் நிலைமையை சாத்தியப்படுத்தி இருப்பது, நமது ‘திராவிட மாடல்’ அரசு தான்’’ என்று பலத்த கைதட்டல்களுக்கு இடையே கூறினார்.
தொடர்ந்து, ‘‘இதற்கு மாற்றாக அ.தி.மு.க. – பா.ஜ க. மற்றும் சில மின்மினிப் பூச்சிகள் இருக்கின்றன. இவையெல்லாம் நிரந்தரமல்ல’’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ‘‘யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அடையாளம் காட்டுவதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்’’ என்று, உதயசூரியன் சின்னத்தை அடையாளம் காட்டி, தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அங்கிருந்து புறப்பட்டு, குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து, பரப்புரை செய்வதற்காக மாலை 6:30 மணிக்கு, குறிஞ்சிப்பாடி தந்தை பெரியார் சிலை அருகில் கழகத் தலைவர் வருகை தந்தார். அப்போது, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். கழகத் தோழர்கள் ஆசிரியர் வாகனத்தின் மீது தோன்றியபோது, சிவந்த ரோஜா இதழ்களை அவர் மீது தூவி அவரை வரவேற்றனர். நெய்வேலி மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் உதயசங்கர், செயலாளர் ராமநாதன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், நகர கழகத் தலைவர் தா.கனகராசு, ஆயிகுப்பம் வள்ளல் குமார், வழக்குரைஞர் வனராசு, வழக்குரைஞர் புனிதன், குறிஞ்சிப்பாடி நகரத் துணை தலைவர் சீதாராமன், மாவட்ட மகளிரணித் தலைவர் தமிழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
கழகத் தலைவர் உரை
கழகத் தலைவர் தமது உரையைக் கேட்க, ஏராளமான பெண்கள் வருகை தந்திருப்பதை கண்டு, ‘‘ஒரு காலத்தில் ‘தாய்மார்களே…’ என்று சொல்வோம். ஆனால், எதிரில் பெண்களே இருக்க மாட்டார்கள். இன்றைக்குத் தாய்மார்களே… என்று சொல்கிறோம். ஏராளமாக இருக்கிறார்கள். அதுவும், ஆண்களை விட அதிகமாகவே இருக்கின்றனர்’’ என்று முடிப்பதற்குள் பெண்கள் உட்பட அனைவரும் சிரித்து விட்டாலும், சிந்திக்கவும் செய்தனர். தொடர்ந்து, ‘‘இதற்கெல்லாம் காரணம், தந்தை பெரியாரின் கொள்கை! சமுகநீதி கொள்கை!’’ என்று குறிப்பிட்டார்.
ஜாதி, மத, பேதம் அகன்றது!
மேலும் அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி பேசினார். அதில், ‘உரிமை’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டு, அதற்கு திராவிடவியல் விளக்கம் கொடுத்து, மாதாமாதம் அந்தத் தொகையை வருவதைச் சுட்டிக்காட்டி, பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டத்தை குறிப்பிட்டு, அது எந்த அளவுக்கு பெண்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது என்பதையும், மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் ஜாதி, மத, பேதமெல்லாம் அகன்று விடுகின்றன என்ற சமூகப் புரட்சியும் அதில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, மக்களை வியப்பில் ஆழ்த்தினார். மக்கள் படபடவென கைகளைத் தட்டி, அந்த வியப்பை வெளிக்காட்டினர்.
தொடர்ந்து, வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றி பாராட்டிப் பேசினார். பிரதமர் மோடி விவசாயிகளை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்றும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயத் துறைக்கு, விவசாயிகளுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்றும் ஒப்பிட்டுப் பேசி, உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டினார். தொடர்ந்து, 22 லட்சம் விவசாயிகளுக்கு கலைஞர் இலவச மின்சாரம் வழங்கியதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு அடுத்து வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மீட்டர் பொருத்தப்படாத பம்ப்செட் அமைத்து தரவிருப்பதைச் சுட்டிக்காட்டினார். விவசாயப் பெருமக்கள் அதிகம் கூடியிருந்ததால் உற்சாகத்துடன் கைகளைத் தட்டினர்.
இந்த வயதில் நாங்கள் எதற்காக
இப்படி அலைகிறோம்?
மேலும் அவர் நடப்பு அரசியலைப் பேசினார். நிறைவாக தனக்கு வயது 93 என்று குறிப்பிட்டு நிறுத்தினார். மக்கள் ‘‘ஆகா…!’’ என்று வியந்தனர். ‘‘இந்த வயதில் நாங்கள் எதற்காக இப்படி அலைகிறோம்? எங்களுக்காகவா? இல்லை, ஒரு ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவா? அதுவும் இல்லை, உங்களுக்காக! உங்கள் சந்ததிகளுக்காக! அவர்களின் சுயமரியாதையான வாழ்க்கைக்காக!’’ என்று சொல்லி அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி, பலத்த கைதட்டல்களுடன் தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.
பங்கேற்றோர்
சுமலதா, குணசுந்தரி, சத்தியா மலர், மங்கலட்சுமி, அப்பியம் பேட்டை செந்தில், வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், மறுவாய் திருநாவுக்கரசு மற்றும் ஒன்றிய திமு.க. செயலாளர்கள் பொறியாளர் சிவக்குமார், நாராயணசாமி, நகர தி.மு.க. செயலாளர் சங்கர், அவைத்தலைவர் ராமர், ம.தி.மு.க. நிர்வாகிகள் திராவிட அரசு, சட்டநாதன், விடுதலை சிறுத்தைகள் ஜோதிமணி மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள் என ஏராளமான கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

