வரலாறு பேசட்டும்!
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்!
எதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சுகிறது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கீழடி, ஆதிச்சநல்லூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்காக ஒன்றிய பாஜக அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி 8 மாதங்கள் ஆகின்றன. இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதமே அனுப்பப்பட்டுவிட்டன. நவம்பர் மாதத்தில் இந்தியத் தொல்லியல் துறைத் தலைவரின் கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டும், இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே உகந்த காலமாகும். இந்த காலத்தை தவறவிட்டால்: பருவமழையினால் களப்பணிகள் முற்றிலும் தடைபடும். முக்கிய வரலாற்று ஆய்வுகள் காலதாமதமாகும். 2025-2026ஆம் நிதியாண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகும் சூழல் ஏற்படும்.
ஒன்றிய அரசின் இந்தத் தயக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல; இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்ப்பது. எதைக் கண்டு பாஜக அரசு அஞ்சுகிறது?” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், “கீழடி பேசட்டும், வரலாறு மேலெழட்டும்! அகழ்வாராய்ச்சிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள்” என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து
ஜூன் 6 முதல் மீண்டும் தொடக்கம்!
நாகப்பட்டினம், மார்ச் 3- நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கப்பல் போக்குவரத்து
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. எனினும், கடல் சீற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜூன் 6ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து முறைப்படி மீண்டும் தொடங்குகிறது.
பயணிகளுக்கான கட்டணம் மற்றும் அவர்கள் எடுத்துச் செல்லும் சரக்குகளின் அளவில் எந்த மாற்றமும் இல்லை; பழைய நடைமுறையே தொடரும். தற்போதுள்ள கப்பலுடன் கூடுதலாக, புதிய கப்பல் ஒன்றை இயக்குவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான அனைத்து அரசு சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன.
இந்தப் புதிய கப்பல் இந்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “பருவநிலை மாற்றத்தால் நிறுத்தப்பட்ட இந்த சேவை மீண்டும் தொடங்குவது, இரு நாட்டு பயணிகளுக்கும் வர்த்தக ரீதியாகவும் சுற்றுலா ரீதியாகவும் பெரும் உதவியாக இருக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து மற்றும் ரயில் நிலையம் இணைப்பு பாலம்
இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வருகிறது – சி.எம்.டி.ஏ
சென்னை, மார்ச் 3– கிளாம்பாக்கம் ரயில் நிலையம் –- பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை ரூ.79 கோடியில் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த மார்ச் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முதல் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் வரையும் ஜி,எஸ்,டி சாலையை கடக்கவும் ஆகாய நடைபாதை ரூ.79 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
279 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமுடன் அமைக்கப்படுகிறது.இந்த ஆகாய நடைபாதை பணிகளுக்கான ஆலோசகராக அய்அய்டி மதராஸ் சார்ந்த நகர்ப்புறமயமாக்கல், கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் (CUBE) நியமிக்கப்பட்டு அவர்கள் தெரிவித்த ஆலோசனைப்படி பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தவும் பயணிகள் வசதிக்காகவும் சாலையை கடக்க இரு முனைகளிலும் 6 நகரும் படிக்கட்டுகள், 4 லிப்ட்கள் மற்றும் வழுக்காத தரைத்தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது குறித்து சி.எம்.டி.ஏ அதிகாரி ஒருவர் கூறியது: பயணிகள் வசதிக்காக 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் ஆகாய நடைபாதை கட்டப்பட்டு வருகிறது இந்த நடைபாதை பணிகள் ஓரளவு நிறை வடைந்திருக்கும் நிலையில் மார்ச் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
