புதுடில்லி, பிப்.7 குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருந்த சீன எல்லைப் பிரச்சினை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமர் மோடி 4.2.2026 அன்று மாலை பதிலுரை அளிக்கவிருந்தார். ஆனால், அமளி காரணமாக பிரதமரின் பேச்சு ரத்து செய்யப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் (6.2.2026) மக்களவையை எதிர்க்கட்சியினர் முடக்கிய நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்கும் வரை அமளி தொடரும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (6.2.2026) காலை மக்களவை கூடியவுடன் பதாகைகளுடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்த நிலையில், முதலில் பகல் 12 வரை ஒத்திவைக்கப் பட்டு, பின்னர் பிப். 9 காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியினரின் அமளியை கண்டித்து பேசிய அவைத் தலைவர் ஓம் பிர்லா, “பட்ஜெட் தொடரின் 19 மணிநேரம் 13 நிமிடங்கள் அமளியால் வீணாகியுள்ளது. மக்கள் தங்களின் பிரச்சினையைப் பேசுவதற்காகவே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கங்களை எழுப்புவதற்கு அல்ல. அவையை சுமுகமாக நடைபெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
