மும்பை, ஜன.29 ஒன்றிய அரசின் புதிய 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மகாராட்டிராவின் நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஒன்றிய அரசின் புதிய 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மகாராட்டிர மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் விவசாயிகளின் நில உரி மையைப் பாதிக்கும் சட்டங்களை ரத்து செய்துவது, வன உரிமைச் சட்ட வாக்குறு திகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 25.1.2026 அன்று மும்பை நோக்கி பேரணியை தொடங்கினர். அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள இப்பேர ணியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். பழங்குடி விவசாயிகளின் இப்பேரணி நேற்று முன்தினம் (27.1.2026) மூன்றாவது நாளை எட்டியது. கசாரா மலைப்பகுதியைக் கடந்து தானே மாவட்டத்திற்குள் பேரணி நுழைந்தது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்
இதற்கிடையே மாநில முதல மைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு வார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இப்பேரணி நேற்று (28.1.2026) 4 ஆவது நாளாக மும்பையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
