தற்போது மண்டல பூஜைக்கான சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறப்பிற்குப் பிறகு பக்தர்கள் வருகை பாதியாக குறைந்துள்ளது. அதே போல், கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் கோயில் உண்டியல் வசூலும் சரியத் தொடங்கி உள்ளது. மக்களின் வருகை மற்றும் உண்டியல் வசூலைக் கணக்கில் கொண்டால் கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தணிக்கைப் புள்ளி விவரங்களின் படி இது தெரியவந்துள்ளது.
கோயிலுக்கு வருபவர்களின் என்ணிக்கை குறைந்துவரும் செய்தியை மறைக்க அவ்வப்போது ஊடகங்களில் மூலம் விளம்பரச்செய்திகளை ஒளிபரப்பி உண்மையை மறைத்தாலும், தேவஸ்தான நிர்வாக புள்ளி விவரங்கள் திருப்பதி கோயிலில் மக்களின் வருகை முன்பு இருந்ததைப் போல் இல்லை என்பதையே காட்டுகிறது.
கடவுள் நம்பிக்கையின் அடையாளங்களாகவும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கூடும் ஆன்மிகத் தலங்களாகவும் விளங்கும் திருப்பதி, சபரிமலை ஆகிய கோயில்களில், அண்மைக் காலமாக பக்தர்களின் வருகை கணிசமாகக் குறைந்து வருவது ஆன்மிக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் மாறிவரும் வாழ்நிலைச்சூழல் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் இறைநம்பிக்கை குறைந்து, நாத்திகப் போக்கு அதிகரித்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருப்பதி கோயிலில் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் உண்டியல் வசூல் ரூ.2.92 கோடியாகச் சரிந்தது; வெளியூர் பக்தர்கள் வருகை சரிந்ததால் உண்டியல் காணிக்கை குறைந்ததாகத் தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன. இது கடந்த 5 ஆண்டுகளில் வெகுவாக குறைந்த மக்கள் கூட்டம் ஆகும்.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் தரிசனத்திற்காக இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வராதது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி இணையப் பதிவுகளைக் காட்டி அரசையும், தேவசம் போர்டையும் ஒப்பந்த நிறுவனம் ஏமாற்றி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சபரிமலையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யவும் இணையத்தின் வழி முன்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு இந்தப்பணி தரப்பட்டது. தேவசம் போர்டு ஆணைப்படி அந்த நிறுவனம் நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே இணையத்தின் மூலம் அனுமதி வழங்குகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இணையத்தில் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையையும், நேரடியாக சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கையையும் அதிகாரிகள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். இதில், இணையத்தில் முன்பதிவு செய்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு வராமலேயே, போலி விவரங்களைக் கொடுத்து சிலர் மொத்தமாக இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து முடக்குவதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த நிறுவனமும் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது
இதனால் சபரிமலைக்கு வர விரும்பும் நபர்களுக்கு இணைய வழி நுழைவுச் சீட்டு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், போலி இணைய பதிவுகளைப் பயன்படுத்தி வேறு சில முறைகேடுகள் நடக்கிறதா என்ற கோணத்திலும், அரசை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு செயல்படும் நபர்கள் குறித்தும் காவல்துறையினரும், தேவசம் போர்டு அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இணைய முன்பதிவு முறையில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவும், போலியாகப் பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளதாம்.
நாள்தோறும் இதே போன்ற மோசடிகள் திருப்பதியிலும் நடக்கிறது, அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் செல்வதால் அங்கு நடக்கும் மோசடிகள் வெளியே வரவில்லை. ஆனால் சபரிமலையில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் மக்கள் வருகை புரிவதால் இந்த மோசடி உடனடியாக வெளியே வந்து விட்டது.
சக்திவாய்ந்த அய்யப்பன் என்று கூறுவார்கள். ஆனால் மோசடி நபர்கள் அய்யப்பனை விட சக்திவாய்ந்தவர்களாக உள்ளனர்.
ஆக, கோயில்கள் இப்பொழுது வியாபார நிறுவனங்களாக மாறி விட்டன. வியாபாரம் என்றால் போலிகளும் ‘தில்லுமுல்லு’களும் நடப்பது சர்வ சாதாரணம்தானே!
