கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்க!

2 Min Read
- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்க!  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அம்மையாருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அத்துமீறி அவரது இருப்பிடத்திற்குள் நுழைய முயன்றது தொடர்பாகவும் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று இத்தனை நாட்களாகத் தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் சொன்னது பொய் என்பது இன்று (24.11.2026) நீதிமன்றத்தில் வெளிப்பட்டுள்ளது.

ஜூலை மாதமே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்பதை இன்று தான் சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதுமாகும்!

இத்தனை நாள் பொதுவெளியிலும், பொது மக்களிடமும் மட்டுமல்ல, உயர்நீதிமன்றத்திலேயே ஓர் அரசு மறைத்திருக்கிறது, ‘புகார் எதுவும் இல்லை’ என்று பொய் சொல்லியிருக்கிறது என்பது வெட்கப்படத்தக்கது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதும் ஆகும்.

அய்ந்து மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருக்கிறார்; அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுவெளிக்கு இந்தப் பிரச்சினை வந்த பிறகும் அமைச்சர்களும், சில கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ‘அப்படியெல்லாம் புகார் இல்லை’ என்று மறுத்தார்களே… இப்போது அவர்களெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?

இந்த அரசும், அமைச்சர்களும் மக்களை என்னவென்று கருதுகிறார்கள்? மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குறித்த நிர்வாகத்துக்குப் பொறுப்புடையவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தானே? அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?

விலைவாசி பற்றிப் பேசினார் என்பதற்காகப் பொருளாதாரப் பேராசிரியர் மீது, வேறு ஒரு பொய் வழக்குத் தொடுத்து அதிகாலையில் கைது செய்த அரசு, தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.வின் முறைகெட்ட நடத்தைக்கும், குற்றத்துக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது வழக்குத் தொடுத்து, என்னென்ன சட்டப் பிரிவுகள் என்று சொன்னால் மட்டும் போதாது! அவர் இழைத்த குற்றத்துக்கு உடனடியாகக் கைது செய்ய வேண்டாமா?

தமிழ்நாடு அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெயருக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்சினையில் அய்ந்து மாதம் கடத்திய அரசு, இனியும் துளியும் தாமதிப்பதை ஏற்க முடியாது.

மகளிர் உரிமை என்பதும், பாதுகாப்பு என்பதும் வாய்ப் பேச்சு வீரம் அல்ல! செயல், செயல், செயல் – அதுவே அவசியம்!

கி.வீரமணி

         தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

24.11.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *