நீதிக்கட்சியின் 111 ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று (நவம்பர் 20)
சமூக நீதிக்காகத் தோன்றிய இயக்கத்தின் நோக்கம் வென்றிட நாளும் உழைப்போம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
சமூக நீதிக்காகத் தோன்றிய இயக்கத்தின் நோக்கம் வென்றிட நாளும் உழைப்போம்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

- நீதிக்கட்சியின் 111 ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று (நவம்பர் 20) சமூக நீதிக்காகத் தோன்றிய இயக்கத்தின் நோக்கம் வென்றிட நாளும் உழைப்போம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- மாற்றத்துக்குக் காரணம் என்ன? யார்? எந்த இயக்கம்?
- நீதிக்கட்சிதான் திராவிடர் கழகமானது!
- வகுப்புவாரி உரிமை முதல் 69 சதவிகிதம்வரை!
- இன்றைய இளைஞர்களின் கடமை!
- உலகம் முழுமைக்கும் விரிவாக்குவோம்!
நீதிக்கட்சியின் 111 ஆம் ஆண்டு தொடக்க நாள் இன்று (நவம்பர் 20)! சமூக நீதிக்காகத் தோன்றிய இயக்கத்தின் நோக்கம் வென்றிட நாளும் உழைப்போம்! சுயமரியாதை, சமூகநீதி, பாலின உரிமைகளுக்கானக் களத்தை உலகம் முழுமைக்கும் விரிவாக்குவோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1911 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாண மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் 3 சதவிகிதத்தினராகவும், பார்ப்பனர் அல்லாதோர் 97 சதவிகிதமாகவும் இருந்தனர். ஆனால், 1901 முதல் 1911 வரையிலான பத்து ஆண்டுகளில், சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களில், 4,074 பேர் பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாத இந்துக்கள் வெறும் 1,035 மட்டுமே! மற்றவர்களில் இந்தியக் கிறிஸ்தவர்கள் – 306, முகமதியர்கள் – 69, அய்ரோப்பியர்கள் மற்றும் யூரேசியர்கள் – 225.
1911 ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை மாகாணத்தில், தங்கள் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை – தமிழ்ப் பார்ப்பனர்களில் 72 சதவிகிதம், தெலுங்குப் பார்ப்பனர்களில் 68 சதவிகிதம், நாயர்களில் 42 சதவிகிதம், இந்தியக் கிறிஸ்தவர்களில் 20 சதவிகிதம், நாடார்களில் 18 சதவிகிதம் பேர் தாய்மொழியில் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.
மாற்றத்துக்குக் காரணம் என்ன? யார்? எந்த இயக்கம்?
அதே சமயம் ஆங்கிலத்தில், தமிழ்ப் பார்ப்பன ஆண்களில் 22 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமானோர் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். தெலுங்குப் பார்ப்பனர்களில் 14.75 சதவிகிதம் பேரும், மல பாரைச் சேர்ந்த நாயர்கள் சுமார் 3 சதவிகிதம் பேரும், பலிஜ நாயுடுகளில் 2.6 சதவிகிதம் பேரும், வெள்ளாளர்களில் 2 சதவிகிதத்திற்குச் சற்று அதிகமாகவும் இருந்தது. கம்மவார், நாடார் மற்றும் ரெட்டி சமூகத்தினர் மத்தியில், ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்களின் விகிதம் அரை சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. மற்றவர்கள் நிலை இதனினும் குறைவே! பெண்கள் நிலையோ கணக்கிடும் அளவில்கூட இல்லை!
ஒரு நூற்றாண்டு கழித்து இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள்! இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? யார்? எந்த இயக்கம்?
ஈராயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த கல்வியைப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் பெற்றுக் கொடுத்த அந்த இயக்கம் தானே நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்! அதன் சாதனைகள் தானே கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகத்திலும் நிகழ்ந்த தலைகீழ் மாற்றங்களுக்குக் காரணம்!
அத்தகைய சிறப்புக்குரிய அமைப்பு உரு வாவதற்கான அடித்தளம் 110 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (நவம்பர் 20, 1916) தோன்றிய தென்னிந்திய மக்கள் சங்கம் (South Indian People’s Association) தான்! இன்று 111 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அது தான், ‘ஜஸ்டிஸ்’ என்னும் ஆங்கில நாளேட்டையும், ‘திராவிடன்’ என்னும் தமிழ் நாளேட்டையும், ‘ஆந்திரப் பிரகாசிகா’ என்ற தெலுங்கு ஏட்டையும் தொடங்கியது. இதன் மற்றொரு முன்னெடுப்பாகத் தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட South Indian Liberal Federation மலர்ந்தது.
இந்த அமைப்பு தொடங்கிய ‘ஜஸ்டிஸ்’ ஏட்டின் பேராலேயே பிறகு, ஆங்கிலத்தில் ‘Justice Party’ என்றும், தமிழில் அதுவே ‘நீதிக்கட்சி’ என்றும் வெகு மக்களால் அழைக்கப்படலாயிற்று.
சென்னை மாநகராட்சியின் தலைவரும், புகழ்பெற்ற தொழிலதிபராகத் திகழ்ந்தவருமான பிட்டி தியாகராயரும், திராவிடன் இல்லத்தைத் தொடங்கி நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனாரும், திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளை உருவாக்கிய சீரிய பகுத்தறிவாளரான டாக்டர் டி.எம்.நாயரும், பனகல் அரசர் ராமராய நிங்கர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பெருமக்களும் சேர்ந்து விதைத்த சமூகப் புரட்சி விதை தான், தந்தை பெரியார் என்னும் மக்கள் தலைவரால் வெகுமக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டு, சமூகநீதி – சுயமரியாதை என்னும் அடிப்படைத் தத்துவங்களுடன் கூடிய, அசைக்க முடியாத திராவிட இயக்கம் என்னும் ஆலமரமாக இன்று வளர்ந்துள்ளது.
நீதிக்கட்சிதான் திராவிடர் கழகமானது!
காங்கிரசில் தந்தை பெரியார் அவர்கள் ‘ஈ.வெ.ராமசாமி’யாக இணைந்த போதே, ‘அவர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இணைந்து அதை வழிநடத்த வேண்டியவர்’ என்று அவருக்கு அழைப்பு விடுத்தவர் டாக்டர் டி.எம்.நாயர். பின்னாளில் அதுதான் நடந்தது! சமூகநீதிக்காகவே காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார், வெளியில் இருந்தே பல காலம் நீதிக்கட்சியின் போக்கை நிர்ணயிப்பவராக இருந்தார். 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக்கட்சி, 1937 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றுச் சரிந்தது என்று பார்ப்பனர்கள் கருதியிருந்த காலத்தில், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதை மக்கள் இயக்கமாக மாற்றினார்.
பின்னர், பார்ப்பனரல்லாதார் என்னும் அடையாளத்திற்கு மாற்றாக, வரலாற்றுச் சான்று மிக்க ‘திராவிடர்’ என்னும் அடையாளத்தை முன்னிறுத்தி 1944 இல் ‘திராவிடர் கழக’த்தை உருவாக்கினார்.
வகுப்புவாரி உரிமை முதல் 69 சதவிகிதம்வரை!
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகுப்புவாரி உரிமையை மன்னராட்சி அல்லாத ஒரு மக்களாட்சியின் மூலம் கொண்டு வந்த முதல் அமைச்சரவை நீதிக்கட்சியின் பனகல் அரசர் அமைச்சரவைதான்! பார்ப்பனர்களின் சூழ்ச்சியினால், 1921, 1922 ஆகிய ஆண்டு களில் அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முடியவில்லை எனினும், தொடர்ந்து அதற்காக முயற்சித்து 1928-ஆம் ஆண்டு எஸ்.முத்தையா (முதலியார்) அவர்கள் வகுப்புவாரி அரசாணையைக் (கம்யூனல் ஜி.ஓ) கொண்டு வந்தார். இன்று 69 சதவிகித இடஒதுக்கீடாக, இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சமூகநீதி கோலோச்சுகிறது என்றால், அதற்கான அடித்தளம் நீதிக்கட்சி அமைத்ததுதான்.
பொது இடங்களில், கிணறுகளில் ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை உண்டு என்ப தற்கான அரசாணை, இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கம், அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் உருவாக்கம், பள்ளி கல்லூரி களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்க மறுத்தால் அக் கல்வி நிறுவனங்களின் அனுமதி ரத்து உள்ளிட்ட சமூகப் புரட்சிகளைச் சட்டத்தின் ஆட்சி மூலமாக நிறைவேற்றியது நீதிக்கட்சிதான்!
இன்றைய இளைஞர்களின்
கடமை!
கடமை!
இன்று மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்திற்கான கால்கோள் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசும், அதிகார வர்க்கமும் முயன்று வரும் சூழலில், 110 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமையாகும்.
அடிமைப்பட்டிருந்த ஆயிரமாண்டு வரலாறும், அதிலிருந்து மீண்டெழுந்த நூற்றாண்டு வரலாறும் இளைஞர்கள் கண் முன்னே இருக்கிறது. எது தேவை என்பதை முடிவெடுக்கவும், அதற்கான பாதையில் பயணிக்கவும் வேண்டியவர்கள் இளைஞர்கள்! அவர்களை நெறிப்படுத்த திராவிடர் கழகமும், திராவிட இயக்கங்களும் தொடர்ந்து பரப்புரை செய்யும் – சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும்! எவரையும் விட அதற்கான கடமை உணர்வும், கடப்பாடும் நமக்கு உண்டு!
உலகம் முழுமைக்கும் விரிவாக்குவோம்!
சமூக நீதிக்காகத் தோன்றிய இவ்வியக்கம் நிலைத்திட நாளும் நம் உழைப்பைத் தருவோம்!
சுயமரியாதை, சமூகநீதி, பாலின உரிமை களுக்கான களத்தை உலகம் முழுமைக்கும் விரிவாக்குவோம்!
திராவிடமே வெல்லும் எந்நாளும், எங்கேயும்!
வாழ்க நீதிக்கட்சி!
வாழ்க திராவிட இயக்கம்!
வாழ்க அதன் முன்னோடிகள்!
சென்னை தலைவர்,
20.11.2026 திராவிடர் கழகம்
