முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!

6 Min Read

 ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, செயற்கை நிதி நெருக்கடியை நாளும் தவறாமல் தந்துவந்தாலும், அதையும் கடந்து சாதனை படைத்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு!
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலித்துக் கூறும் சான்றாவணமே இந்த இடைக்கால பட்ஜெட்!
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஒன்றிய  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, செயற்கை நிதி நெருக்கடியை  நாளும் தவறாமல் தந்துவந்தாலும், அதையும் கடந்து சாதனை படைத்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலித்துக் கூறும் சான்றாவணமே இடைக்கால பட்ஜெட்! முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடைக்கால பட்ஜெட் குறித்து அறிக்கை விடுத்துள்ளார்.

Contents

அவரது அறிக்கை வருமாறு:

நேற்று (17.2.2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026–2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரின் 142 நிமிட, அயராத உரை எப்படி நீண்ட ஒன்றோ, அதுபோல, ‘இடைக்கால பட்ஜெட்’ என்று பெயர் இருந்தாலும், அது ஒரு வியக்கத்தக்க புதுமையான ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக் குவியல் பட்டியலாகவே பரிமளித்தது!

வஞ்சகம் செய்யும் வகையறாக்களுக்கு
இடைக்கால பட்ஜெட் ஓர் இடித்துரை!

ஒன்றிய அரசு எவ்வளவு ‘‘செயற்கை நிதி நெருக்கடியை’’ ஒப்புவமையற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சிக்கு அளித்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்களிடம் நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்று கருதுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மற்ற மாநிலங்களில் சில வித்தைகளையும், கட்சி மாறிகளைக் கருவிகளாக்கி, வியூகங்களையும் வகுத்து, தங்களது காவி ஆட்சியை உருவாக்கினாலும், பெரியார் மண்ணான – சுயமரியாதைப் பாசறையான தமிழ்நாட்டை தம் வயப்படுத்த முடியவில்லையே என்ற எரிச்சலால், குறுக்கு வழியைப் பயன்படுத்தி, தங்களது நிதிப் பங்களிப்பைக் குறைப்பதையே ஒரு பழிவாங்கும் ஆயுதமாக ஆக்கி, ‘திராவிட மாடல்’ ஆட்சியை வலுவிழக்கச் செய்யலாம் என்ற அவர்களின் திட்டம் ‘‘ஒருபோதும் பலிக்காது, பலிக்க விடமாட்டோம்’’ என்பதை தனது எடுத்துக்காட்டான ஆளுமைத் திறன்மூலம் அகிலத்தையும் உணரச் செய்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு என்பதற்கு, இந்த இடைக்கால பட்ஜெட் வஞ்சகம் செய்யும் வகையறாக்களுக்கு ஓர் இடித்துரை என்பதாக அமைந்துள்ளது!

அந்த செயற்கை நிதி நெருக்கடியை ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு,  எப்படியெல்லாம் தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நாளும் தவறாமல் தந்துவருகின்றனர் என்பதைச் சரியான புள்ளி விவரத் தரவுகளாகத் தந்து, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலித்துக் கூறும் சான்றாவணமாகவே இந்த இடைக்கால பட்ஜெட் அருமையாக அமைந்துள்ளது!

யாரையும் தலைகுனிய விடாமல், தானும் தலைகுனியாத தன்னிகரற்ற ஓர் அரசாக உள்ளது!

‘அனைவருக்கும் அனைத்தும்’,

‘எல்லோருக்கும் எல்லாம்’  என்ற சமதர்ம – சமூகநீதி ஒளி வீச்சுடன் அமைந்த இந்த நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு அரசின்கீழ் வரும் எந்தத் துறை மக்களும், அவர்களது வாழ்வுரிமையை மிகவும் பத்திரமாகப் பேணிக் காப்பாற்றிடவும், அஞ்சி நடுங்கி, உரிமைக்குக் குரல் கொடுக்கச் சற்றும் தயங்காமல், ஒரு தன்மானத் தனித்தன்மை கொண்டு, யாரையும் தலைகுனிய விடாமல், தானும் தலைகுனியாத தன்னிகரற்ற ஓர் அரசாக உள்ளது!

தடைக்கற்கள் ஆயிரம் என்றாலும், அவற்றைத் தாங்கி – தாண்டி வெளிவரும் ஆற்றல் அரசு என்பதை இப்பட்ஜெட் கலங்கரை வெளிச்சம்போல் காட்டுவதில் முத்திரைப் பதித்துள்ளது!

இரண்டு முக்கிய எடுத்துக்காட்டுகள்!

இணையற்ற சாதனைக்கு இரண்டு முக்கிய எடுத்துக்காட்டுகள்.

  1. 22 ஆண்டுகளாக தீராத பிரச்சினையாக இருந்த அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், அவர்களது வேண்டுகோளை முந்தைய அரசு போல் புறந்தள்ளாது – ‘திராவிட மாடல்’ அரசு ஆக்கப்பூர்வ முடிவுகளை அறிவித்து, அரசு ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

(ஒரு சில பாக்கிகளையும் உரிய முறையில், உரிய நேரத்தில் முதலமைச்சர் நிச்சயம் அறிவிப்பார் என்பதாலேயே, இந்த மக்கள் அரசில், மக்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கும் செம்மொழி அரசு இது என்று நம்பிக்கையில்தான், சாலைகள்கூட இந்த அரசில் களங்களாகின்றன போலும்).

  1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்மூலம் மாதா மாதம் ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் பெற்று வரும் 1000 ரூபாய் தொகையை, தேர்தல் அறிவிப்பையொட்டியோ அல்லது சில சூழ்ச்சிகள் மூலமோ, சட்டமன்றத் தேர்தல் மாதங்களான மார்ச், ஏப்ரல், மே மாதம் மாதாந்திரத் தொகையை முடக்க நினைத்த, வன்ம வஞ்சகத்திற்கு ஆப்பு அடிப்பதுபோல, மூன்று மாதத் தவணைகளையும், கோடை கொடும் வெப்பம் இவ்வாண்டு – புவி வெப்ப மயமாதல் ஆவதிலிருந்து காக்க, குடும்பங்களுக்குக் கோடை நல முயற்சியாக 2000 ரூபாய் சேர்த்து, ஆக மொத்தம் 5000 ரூபாய் என்று – இன்ப அதிர்ச்சியை மகளிருக்குத் தந்து, அரசியல் கொள்கை எதிரிகளையும், குறுக்குசால் பிரச்சாரம் செய்ய நினைத்தவர்களையும் செயல்படுத்த முடியாமல் வியூகம் அமைத்து, அவர்களை நிராயுதபாணிகளாக்கி நிற்க வைத்துள்ளது!

தமிழ்நாடும், மக்களும்
மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்!

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசு, தமிழ்நாட்டுக்கு நிதிப்பற்றாக்குறையைச் செயற்கையாக ஏற்படுத்துகிறது. ஒப்புக்கொண்ட நிதியையே தர மறுப்பது, சிலவற்றைத் தாமதப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை நாளும் நடத்தியும்கூட, நமது முதலமைச்சர் நல்ல ‘மதியூகி’ என்பதால், பதறாமல் நிதி மேலாண்மையைச் சிறப்பாக நடத்தி வருவதால், செம்மாந்த செறிவான வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாடும், மக்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அவதூறுகளை அவர் தூசிகளாகத் தட்டி, தன் கடமை, ‘மக்களுக்கு நாளும் தொண்டு செய்வதே’ என்று காட்டுகிறார்கள்.

இவ்வளவு செயற்கை நிதி நெருக்கடியிலும், இந்தப் பழுதில்லா ஆட்சி தனித்த ஒரு என்ஜினாக – தன்னிகரற்ற வேகத்துடனும், தடம் புரளாத விவேகத்துடனும் ஆட்சியை நடத்தி வருவதால், அகிலமும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளுக்கு முண்டியடித்து முனைப்புக் காட்டி வர முந்துகிறது!

பொருளாதார அறிக்கை – தமிழ்நாடு எப்படி இரண்டாம் பெரிய சாதனை மாநிலமாக உள்ளது என்ப தைக் காட்டுகிறது!

மலைபோல் வரும் எதிர்ப்புகளை, அவதூறுகளைப் பனிபோல் கரைந்து ஓடச் செய்கிறார்!

‘புத்திமானே பலவான்’ என்ற பழமொழிக்கேற்ப, மலைபோல் வரும் எதிர்ப்புகளை, அவதூறுகளைப் பனிபோல் கரைந்து ஓடச் செய்கிறார் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர்.

‘கடன் பெற்றுள்ளார்களே’ என்று பொய்ப் போலிக் குற்றச்சாற்று கூறுவோர், பொருளாதார அரிச்சுவடி அறியாதார்.

கடனுக்கு உரிய வரம்புக்குள்தான் – திருப்பிக் கடனை அடைக்கும் வளமான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுத்துத்தான் உள்ளோம் என்பதை இந்தப் பட்ஜெட் உரையின் கடைசிப் பகுதி பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல பறைசாற்றியுள்ளது!

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது நீண்ட உரை பொருளாதார நிதிநிலைபற்றிய ஓர் அரிய சிறந்த பாடம் போல அமைந்துள்ளது!

அதுபோலவே, வேளாண் துறை தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். உழவுக்கு  உதவிடும் உயர்வகை சாதனைகளின் தொகுப்பாக அமைகிறது என்பதைப் பறைசாற்றுவதாக வேளாண் பட்ஜெட் உள்ளது – பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும்.

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, ரயில்வே பட்ஜெட்டை ரத்து செய்து, அதனுடைய முக்கியத்து வத்தை ஜீரோவுக்குத் தள்ளிவிட்டது.

ரயில்வே திட்டங்கள் எல்லாம் வெறும் காகிதத் திட்டங்கள்தானா என்று ஒன்றிய அரசை நோக்கி உச்சநீதிமன்றம் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதே!

வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட்
‘ஸ்டாலின்’ அரசின் தகத்தகாய ஒளிமுத்து!

ஆனால், உழவர் நலம் பேணிக் காத்து, வளர்ச்சி அடைய தனி பட்ஜெட் தருவது  நமது ‘திராவிட மாடல்’ ‘ஸ்டாலின்’ அரசின் தகத்தகாய ஒளிமுத்து!

முதலமைச்சர், அமைச்சர்கள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் த.உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

18.2.2026  திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *