டிரம்ப் – ஜின்பிங் – புடின் இடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தை!

- Advertisement -

ஷென்சென், நவ. 19- ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் ஷென்சென் நகரில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைகிறது. இதில், கூட்டமைப்பின் 21 உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டின் ஒருபகுதியாக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான முதல் முத்தரப்புப் பேச்சு வார்த்தை இன்று நடைபெற உள்ளது.

உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மணிலாவில் இருந்து நேற்று (18.11.2026) ஷென்சென் நகருக்கு வந்தடைந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்திற்கு நேரில் வந்து டிரம்பை வரவேற்றார். பொதுவாக, வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்க சீன அதிபர் விமான நிலையத்திற்கு வருவது அரிதினும் அரிதானது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் சீன மக்கள் குடியரசின் நிறுவனர் மாவோ சேதுங், சோவியத் தலைவர் நிகிதா குருசேவை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றார்.

அதன் பிறகு முதல் முறையாக ஜின்பிங், டிரம்பை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். கடந்த செப்டம்பரில் ஜின்பிங் அமெரிக்கா சென்ற போது டிரம்பை இத்தகைய வரவேற்பு அளித்ததற்கு பதில் மரியாதையாக ஜின்பிங் அவரை வரவேற்று அபூர்வமான அணைப்புடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார். முன்னதாக, ஷென்சென் நகருக்கு வந்த ரஷ்ய அதிபர் புடினை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சாய் கியால் வரவேற்றார்.

கட்சியின் மூத்த தலைவர்கள் விமான நிலையத்தில் அரசு விருந்தினர்களை வரவேற்பதில்லை என்பதால் இதுவும் அரிதான நிகழ்வாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜின்பிங்கும், டிரம்பும் சுமார் 20 நிமிடங்கள் நலம் விசாரித்ததோடு, டிரம்பை வரவேற்க நின்ற சீன ஜே-10சி போர் விமானங்களின் அணிவகுப்பையும் இரு தலைவர்கள் கண்டுகளித்தனர். இதையடுத்து, மாநாட்டிற்கு வந்த உலகத் தலைவர்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் அளித்த இரவு விருந்தில் டிரம்பும், புடினும் கலந்து கொண்டனர்.

அப்போது மூன்று தலைவர்களும் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இன்று நடக்கும் முத்தரப்பு பேச்சில் உக்ரைன் மோதல், ஈரான் போர், அத்துடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

ஆனாலும் முதல் சந்திப்பிலேயே முக்கிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்பட வாய்ப்பில்லை என வெளியுறவு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகில் பதற்றமான மோதல், வர்த்தக சச்சரவுகளுக்கு மத்தியில் 3 முக்கிய வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் இக்கூட்டம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், டிரம்பை சந்திக்க ஷென்சென்னுக்கு வருவார் என்ற யூகங்களும் பரவலாக உள்ளன.

முத்தரப்பு பேச்சுவார்த்தை மட்டுமின்றி, ரஷ்ய அதிபர் புடினை தனிப்பட்ட முறையிலும் சந்தித்து பேச அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. டிரம்ப்-புடின் இடையேயான இந்தச் சந்திப்பு, 2025-ல் அலாஸ்காவில் அவர்கள் சந்தித்த பிறகு நடைபெறும் முதல் சந்திப்பாகும். அலாஸ்கா சந்திப்பில், உக்ரைன் போரை நிறுத்துவதற்கான எந்த உடன்படிக்கையும் எட்டப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *