‘‘சேலம் செயலாற்றும் காலம்’’ என்று தலையங்கம் தீட்டினார் அறிஞர் அண்ணா!
நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் மாற்றிய அதே
நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் மாற்றிய அதே
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
‘‘சேலம் செயலாற்றும் காலம்’’ என்று தலையங்கம் தீட்டினார் அறிஞர் அண்ணா! நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் மாற்றிய அதே சேலத்தில், ஜூலை 4 இல் கழகத்தின் பொதுக்குழு! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சமூகநீதியை வென்றெடுத்து – பார்ப்பனரல்லாதார் என்ற பெரும்பான்மை மக்களான மண்ணின் மைந்தர்களுக்கு, ஜாதி, வருண தர்ம, மனுதர்ம ஆதிக்கக் கொடுங்கரத்தால், கல்வி, அரசுப் பணிகள் மறுக்கப்பட்டதை மாற்றவும், நூற்றுக்கு மூன்று பேரான பார்ப்பனர்கள் தங்களது கல்வி, ஏக போக வசதி காரணமாகவும், வெள்ளைக்காரக் கம்பெனி – பிறகு பிரிட்டிஷ் அரசின் வெள்ளை அதிகாரிகளின் நெருக்கத்தாலும், ‘இந்தியர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு’ என்ற போர்வையில், ‘தங்கள் வகுப்புக்கே எல்லாம்’ என்று நிகழ்த்தி வந்த சமூக அநீதியை ஒழிக்கவும், உழைக்கும் மக்களை, சூத்திர, பஞ்சம மக்களை அடிமைகளாக ஆக்கி வைத்த நிலையை மாற்றவும், அரசியல் களத்தில் இறங்கி, உரிமைகளைப் பெறவும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (S.I.L.F.) என்ற பெயரில், 1916 இல் சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் போன்ற முக்கியத் தலைவர்களால், தொடங்கப்பட்ட மகத்தான இயக்கம்தான் நீதிக்கட்சி.
சுமார் 17 ஆண்டுகள் நேரிடையாகவும், பின்னர் சுயேச்சை அரசுக்குத் தனது ஆதரவுக் கொடைமூலமும் ஆண்டு வந்த நீதிக்கட்சி, 1937 தேர்தலில், அன்றைய தேசியப் போர்வையில், பார்ப்பனர்கள் தங்களது அதி காரத்தை நிலைக்க வைக்கப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தோல்வி அடைந்தது.
சுயமரியாதை இயக்கம் என்ற
தனி சமூகப் புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்!
தனி சமூகப் புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்!
முன்பே, காங்கிரஸ் கட்சியில், சி.இராஜகோபாலாச்சாரி யார், டாக்டர் வரதராஜூலு (நாயுடு) ஆகியோர் வற்புறுத்தலால் சமூகநீதி, சுதந்திரச் சிந்தனையாளரான பகுத்தறிவுத் தந்தை பெரியார் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலமுள்ளதாக்கி உழைத்து, பின்னர் சமூகநீதியை காங்கிரஸ் மூலம் வென்றிடலாம் என்ற தமது ஆசை, வெறும் கானல் நீர் வேட்டைதான்; பார்ப்பனர்கள் ஒருபோதும் அதற்கு இணங்கமாட்டார்கள் என்பதை 1920 முதல் 1925 வரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருப்பூர், காஞ்சிபுரம் போன்ற மாநாடுகளின்மூலம் புரிந்துகொண்டு, காங்கிரசை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கம் என்ற தனி சமூகப் புரட்சி இயக்கத்தை உருவாக்கினார். தனது வார ஏடான ‘குடிஅரசு’ மூலமும் தனது பிரச்சார வலிமைகளைக் காட்டினார்.
வீழ்ச்சியுற்ற நீதிக்கட்சி எழுந்து,
தெம்புடன் நடமாடக் காரணி ஆனார்!
தெம்புடன் நடமாடக் காரணி ஆனார்!
நீதிக்கட்சியின் தேவையும், சேவையும் எவ்வளவு அளப்பரியது என்பதை உணர்ந்து, தோற்றுத் தொய்வ டைந்திருந்த அந்த நீதிக்கட்சிக்கு, அதன் சமூகநீதிக் கொள்கைக்காக தனது ஆதரவினை தாமே முன்வந்து வழங்கி, அது நடத்திய மதுரை, கோவை மாநாடுகளில் கலந்துகொண்டு, வீழ்ச்சியுற்ற அக்கட்சி எழுந்து, தெம்புடன் நடமாடக் காரணி ஆனார்.
டாக்டர் நாயர் போன்றவர்கள் அக்காலத்தில் ‘‘தந்தை பெரியார் (அன்று ஈ.வெ.ரா. நாயக்கர்) போன்றவர்கள் எங்களது கட்சிக்கு வந்ததால்தான் அவரது கொள்கை வெற்றி பெற முடியும்’’ என்று முன்பே விடுத்த வேண்டுகோள், பின்னாளில் முதலமைச்சரான பனகல் அரசர் போன்றவர்கள் மூலம் வெற்றி பெற்றது.
நொறுங்கி, நொந்து கிடந்த இயக்கம், எழுந்து களம் காண, அரசியலை மறுத்த தந்தை பெரியாரை ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராக – அவர் , ஹிந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, சிறையில் இருந்தபோதே, தேர்ந்தெடுத்தனர்.
ஆச்சாரியார் ஆட்சி 1939 இல் வெளியேறும் நிலை ஏற்பட்டது – ஹிந்தித் திணிப்பு அறப்போராட்டம் உள்பட பல காரணங்களால்!
பதவியேற்க மறுத்தார் தந்தை பெரியார்!
எதிர்க்கட்சியின் தலைவரான தந்தை பெரியார் ஆட்சியமைக்க வெள்ளைக்கார கவர்னர் எர்ஸ்கின் பிரபு போன்றவர்கள் வற்புறுத்தியும், ஆச்சாரியார், ‘நீங்கள் பதவி ஏற்றால், நானும் உங்களுடன் இருந்து உதவுவேன்’’ என்று தந்தை பெரியாரிடம் கூறியும், திட்டவட்டமாக பதவியேற்க மறுத்து, ‘‘கட்சியை ஒரு வலுவுள்ள மக்கள் இயக்கமாக மாற்றி, லட்சியப் பாதையில் பீடுநடை போட வைப்பதே எனது இலக்கு’’ என்றார்.
அதன்படி, 1938–இலிருந்து 1944 வரை அக்கட்சிக்குப் புத்தாக்கம் தந்து, புதிய இயக்கமாய் மாற்றிடத் திட்டமிட்டு, சேலத்தில் ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற எதிர்மறைப் பெயரைத் தவிர்த்து, வரலாற்றுப் பெருமைவாய்ந்த ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றி, புதிய திருப்பத்தை, வரலாற்றை உருவாக்கினார்.
சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட
இளைஞர் அண்ணா!
இளைஞர் அண்ணா!
அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நகரம்தான் சேலம். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை எம்.ஏ.) அவர்கள், அய்யாவின் ஈரோட்டுக் குருகுலத்தில் முதல் தளபதியானார்.
தனது ‘திராவிட நாடு’ வார ஏட்டில், திருப்பம் ஏற்படுத்திய சேலம் மாகாண மாநாடுபற்றி, ‘‘சேலம் செயலாற்றும் காலம்’’ என்ற தலைப்பில் ஓர் அருமையான தலையங்கம் எழுதினார்.
தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் சொல்வார்; ‘‘சேலம் எனது தாய்வீடு’’ என்று, அந்த சேலத்தில்தான் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டினை நாம் நடத்தி, அம்மாநாட்டிற்கு அப்போது தி.மு.க.வின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்தோம். அப்போது அவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
சேலத்தில், ஜூலை 4 இல் கழகப் பொதுக்குழு!
அதே சேலம் மாநகரில், இன்றைய மாறுபட்ட அரசியல் சூழலிலும், நமது கொள்கை லட்சியப் பயணம் தடம் மாறாது, தளர்வுகள் இன்றி, ‘‘களப் போர் வீரர்கள் என்றும், களம் காணத்தான்’’ என்ற நியதிக்கு இணங்க, வருகிற ஜூலை (2026) 4 ஆம் நாள், திராவிடர் கழகத்தின் பொதுக்குழு நடைபெற உள்ளது. முக்கியமான காலகட்டத்தில், பல அதிமுக்கிய முடிவுகள் எடுத்து, கருஞ்சட்டை இராணுவம் அதன் இலக்கை நோக்கிய களத்தில் என்றும் நின்று வென்று காட்டும் ஓர் இராணுவக் கட்டுப்பாடுமிக்க ஓர் இயக்கம் என்பதை நிறுவும் நாள்.
தமிழ்நாடு என்றும் பெரியார் மண்தான்; சமூகநீதி பூமிதான் – உரிமைக்கு உயிர் கொடுக்கும் போராட்ட உணர்வின் பாசறைக் கோட்டை என்பதை உறுதி செய்ய, நமது வருங்காலப் பணி – வேலைத் திட்டம், களம், புதிய திருப்பங்களோடு வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாக, இயக்கம் என்பது திட்டமிட்டு செயலாற்றும் தீரர்களின் கோட்டமே என்றாக்கிட தீர்மானிக்கும் பொதுக்குழுவாக அது இருக்கும்.
பெரியார் உலகப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன, ‘‘உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம்’ என்ற இலக்குக் குறி தவறாது நடைபெறுகிறது ‘‘பணி மலை!’’
தமிழ்நாட்டைக் காவி மயமாக்க முனைந்து, புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளாலும் பலிக்கவில்லை; உள்ளதை இழந்து, வந்தவர்களும் தமக்குப் பயன்பட மாட்டார்கள் என்பதால், ஏமாற்றமடைந்து ‘எரிச்சல் ஏகாந்திகளாக’ ஆனார்கள்.
வரலாற்றில் வைர வரிகளை உருவாக்கும்!
‘நாம் பதவி தேடுவோர் அல்ல – கொள்கை நாடுவோர் என்பதை மீண்டும் நமது நிலைப்பாட்டின் நியாயங்கள் எப்படி வரலாற்றில் வைர வரிகளை உருவாக்கும்’ என்பதை அகிலமும் அறிய வைக்கும் பொதுக்குழுவாக அது இருக்கும்.
முக்கிய முடிவுகள், அடுத்தடுத்த களங்களில் நமது உயிர்க் கடமைப் பணிகள் – போராட்டம் நமது ரத்தவோட்டம் என்பதைக் காட்ட, குறைந்தபட்சம் ஆயிரம் இளைஞர்கள் பட்டியலோடு வாருங்கள் – உங்களை இயக்கத்திற்குத் தாருங்கள்!
ஜூலை 4 – நமக்கு ஒரு முக்கிய
வரலாற்றுக் குறிப்பாகும் நாள்!
வரலாற்றுக் குறிப்பாகும் நாள்!
விரைந்து கடமையாற்ற, வென்று காட்ட, விரைந்து சேலத்தில் கூடுவோம்!
செயல்வீரர் கூட்டம் நாம் என்று செம்மாந்து நிரூபிப்போம்!
ஆயத்தமாகுங்கள், ஜூலை 4 – நமக்கு ஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பாகும் நாள்!
சந்திப்போமா? சந்திப்போமா?
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.6.2026
