போபால், நவ. 20 மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில், 75 சென்டிமீட்டர் நீளமுள்ள, வரலாற்றுக்கு முந்தைய யானையின் கீழ்த்தாடைப் புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டம் தியோரி தாலுகாவில் உள்ள பத்தாய் கிராமத்தின் நர்மதை நதிப் படித்துறையில் கடந்த 10-ஆம் தேதி, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் மண் அரிப்பினால் வெளிப்பட்டிருந்த விசித்திரமான பல் போன்ற அமைப்பை அவர்கள் கவனித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சுமார் 1.5 அடி ஆழத்திற்கு தோண்டிப் பார்த்தபோது, 75 செ.மீ நீளமும் 25 செ.மீ அகலமும் கொண்ட பெரிய கீழ்த்தாடைப் புதைபடிவம் முழுமையாகத் தெரியவந்தது.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள இந்த கண்டுபிடிப்புப் பகுதிக்கு உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. புதைபடிவத்திற்கு சேதம் ஏற்படாமல் இருக்க, அதனை அங்கிருந்து அகற்றாமல் அந்த இடத்திலேயே வைத்து சுற்றியுள்ள படிமங்களை நுண்ணிய ஆய்வுக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் நர்மதை பள்ளத்தாக்கின் பண்டைய சூழலியல் குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
