புதுடில்லி, நவ.19 வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.அய்.ஆர்.) மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைச் சட்டவிரோதமாக நீக்கியுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு உதவும் வகையில் செயல்படுவதாக, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.கோபால கவுடா, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நடவடிக்கை நாட்டின் இறை யாண்மை மீதான தாக்குதல் என்றும், தேர்தல் ஆணையம், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முரணான வகையில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒரு ஜனநாயக நாட்டில்,
மக்களே மேலானவர்கள்!
மக்களே மேலானவர்கள்!
“நாடு முழுவதும் எஸ்.அய்.ஆர். என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிலிருந்து 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கு வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு உதவும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் நாட்டின் இறையாண்மையையே பறித்துக் கொண்டிருக்கிறது. இது மிகப்பெரிய துயர மாகும்.
வயது வந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். ஒரு ஜனநாயக நாட்டில் உச்சநீதிமன்றமோ, தேர்தல் ஆணை யமோ மேலானவை அல்ல; நாட்டு மக்களே மேலானவர்கள்” என்று அவர் கூறினார்.
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்ற ஹரிச்சந்திர பக்சிபத்ராவின் 93ஆவது பிறந்தநாள் விழாவில் உரை யாற்றியபோது நீதிபதி வி.கோபால கவுடா இவ்வாறு தெரிவித்தார்.
எஸ்.அய்.ஆர். நடவடிக்கைகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் இருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் ஆட்சேபனைகள் குறித்து வெளிப்படுத்தி, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளி தழில் வெளியான புலனாய்வுச் செய்தியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு தேவைப்படுவதை, இந்தப் புலனாய்வுச் செய்தியில் வெளியான பல்வேறு தகவல்கள் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், அச்செய்தி வெளி யானதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததும், பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ததும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களுக்கு வலுசேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
பல முக்கிய உண்மைகளைத் தேர்தல் ஆணையம் தவறாக எடுத்துரைத்திருக்கக் கூடும்!
எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்து மே 27ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியது. இத் தீர்ப்பைப் பெறுவதற்காக, இந்தத் திருத்த நடைமுறை தொடர்பான பல முக்கிய உண்மைகளைத் தேர்தல் ஆணையம் தவறாக எடுத்துரைத்திருக்கக் கூடும் என்றும் அப்போது அவர் குற்றஞ்சாட்டினார்.
நல்ல சூழல் உருவாகும் என்று தான் நம்புவதாகவும், செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான அந்தப் புலனாய்வுச் செய்தி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என்றும் இந்தியாவின் ஜனநாயகக் குடியரசுக்கு அடிப்படையாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இப் புதிய தகவல்களை உச்சநீதிமன்றம் ஆழமாக ஆராயும் என்று தாம் நம்புவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
எச்சரிக்கை
“வாக்காளர்களின் பெயர்களை நீக்குவ தற்காகவோ, அரசியல் கட்சிகள் மொத்தமாகப் படிவம் 7 விண்ணப்பங்களை அளித்து தனிநபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு வழிவகை செய்வதற்காகவோ எஸ்.அய்.ஆர். நட வடிக்கை மேற்கொள்ளப்படவில்லை” என்றார். ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் காப்பதற்கு நீதித்துறையின் தலையீடு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், எஸ்.அய்.ஆர். நடவடிக்கையின் அனைத்து அம்சங்களையும் உச்சநீதிமன்றம் நுணுக்கமாக ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
