சத்துணவுத் திட்டத்தில் கை வைக்கக் கூடாது!

- Advertisement -

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிதாகச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாச் சீருடை வழங்குவதற்காக அவர்களின் அளவு விவரங்களைச் சமூக நல இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இதற்காக, ‘சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை’ அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் ‘எமிஸ்’ (EMIS) தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீருடை அளவுகளை எடுப்பதற்குச் சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை ‘எமிஸ்’ தளத்தில் கேட்பது ஏன் என்ற கேள்வி தற்போது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த விவகாரம், அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் சத்துணவுத் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நினைவூட்டுவதாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 30 ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் இருமுறை வழங்கப்பட்டு வந்த முட்டை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அங்கு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இறைச்சி மற்றும் முட்டை உண்பது தொடர்பான மத ரீதியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக முட்டை, மீன், இறைச்சி உண்பவர்கள் இந்துக்கள் இல்லை என்ற ரீதியில் மாணவர்களிடையே கருத்துகள் பரப்பப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, ‘முட்டை உண்ண விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியல்’ கணக்கெடுக்கப்பட்டது.இதில் பெரும்பாலான மாணவர்கள் ‘‘முட்டை சாப்பிட விருப்பமில்லை’’ எனத் தெரிவித்ததாகக் கூறி, மதிய உணவிலிருந்து முட்டை நீக்கப்பட்டது.

ஒரு நாயைக் கொல்லுவதாக இருந்தாலும், அதற்குப் பைத்தியம் பிடித்திருந்தது என்று சொல்ல வேண்டுமல்லவா!

முட்டைக்குப் பதிலாகக் கொண்டைக்கடலை, வேகவைத்த வேர்க்கடலை, சோயா போன்ற சைவ உணவுகள் சேர்க்கப்பட்டன. ஆனால், இந்த உணவுகள் பல குழந்தைகளுக்குச் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், மதிய உணவுக்கான நிதியைத் தலைமை ஆசிரியர்களிடம் நேரடியாக வழங்குவதால் அதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அங்குள்ள நாளிதழ்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் விலையில்லாச் சீருடை வழங்குவதற்கான கணக்கெடுப்பில் “சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள்” என்ற விவரத்தை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றக் கோரியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தைப் போலவே, எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் சத்துணவுத் திட்டத்தில் கைவைக்கவோ அல்லது முட்டை போன்ற சத்தான உணவுகளைக் குறைக்கவோ இது முன்னோட்டமாக அமையுமோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு இதற்கு இடம் கொடுக்காது என்று நம்புகிறோம்.

இன்றைக்குப் பார்ப்பனர்கள்கூட முட்டை சாப்பிடுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

முட்டை சைவ உணவு என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இளம் வயது மாணவர்களுக்குச் சத்துணவு மிக மிக முக்கியம். அதனை உணர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது தமிழ்நாடுதான்.

நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சித் தலைவராக வந்தபோது 1920 நவம்பரில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி பள்ளியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

1956ஆம் ஆண்டில் பச்சைத் தமிழர் காமராசர் – ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கினார். 65,000 மாணவர்கள் பயன் அடைந்தனர். 1982ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. 1989 முதல் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் சத்துணவுடன் கூடுதலாக வாரத்திற்கு இரு முட்டைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல வகை உணவு – முட்டையுடன் சேர்த்து வழங்கப்பட்டது.

திராவிட நாயகர் முத்து வேல் கருணாநிதி  ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் மட்டுமல்ல – காலை உணவுத் திட்டத்தையும் செயல்படுத்தினார். 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர்.

2026 செப்டம்பர் 22 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தினார்.

இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்துகிறோம்.

காலை சிற்றுண்டி சாப்பிடும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. எந்த நிலையிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

அப்படி ஏதாவது நடந்தால் ‘தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்குச் சமமாகும்!’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *