மணிலா, நவ. 18- குவாட் அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று (17.11.2026) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007ஆம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் மணிலாவில் நேற்று (17.11.2026) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:
அடுத்த 10 மாதங்களில் சீனாவுக்கு இணையாக அமெரிக்காவில் அரிய வகை கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும். அமெரிக்கா மட்டுமன்றி இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அரிய வகை கனிமங்கள் உற்பத்தியை அதிகரிக்க அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரிய வகை கனிமங்களின் விற்பனை சங்கிலி தொடர்பாக குவாட் நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் செயல்பட்டால் அந்த நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும். அந்த நாட்டிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். குவாட் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு, குவாட் செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பு, குவாட் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய 4 புதிய அமைப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
குவாட் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நடப்பாண்டில் குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் 4 முறை கலந்தாலோசனை நடத்தி உள்ளனர். நான்கு நாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுவடைந்து வருகிறது.
இந்தியாவின் நம்பகமான கூட்டமைப்பாக குவாட் செயல்படுகிறது. கடல்சார் பாதுகாப்பு, விநியோக சங்கிலி, புதிய தொழில்நுட்பங்கள், பேரிடர் மேலாண்மையில் குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இன்றைய கூட்டத்தின் மூலம் குவாட் கூட்டமைப்பு மேலும் வலுப்படும். நமது புரிதல் உடனான ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்திய, பசிபிக் கடல்சார் பாதுகாப்புக்கான தீர்வுகளை குவாட் வழங்கும். குவாட் கூட்டமைப்பின் இலக்குகளை நம்மால் வெற்றிகரமாக எட்ட முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பின்னர் மூடிய அறை யில் 4 நாடுகளின் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடல்சார் பாதுகாப்பு, அரிய வகை கனிமங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
