நாகர்கோவில், நவ. 18- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நிறைய பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் முறையான ரசீது இல்லாமல் ‘கோடி அர்ச்சனை’ என்ற பெயரில் ரூ.20 வீதம் பணம் வசூலிக்கப்படுவது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பான காட்சிப் பதிவு அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி அறநிலையத்துறை துறை அமைச்சர் ரமேஷிடம் புகார் சென்றது.
அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்த அமைச்சர் ரமேஷ், கோடி அர்ச்சனை என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அது உண்மை என தெரியவந்தது.
தொடர்ந்து, ஏற்கெனவே பழனிக்கு இடமாற்றம் செய்து இரு மாதங்களாகியும் கன்னியாகுமரி கோயிலிலேயே பணியில் இருக்கும் கோயில் மேலாளர் ஆனந்தை உடனடியாக பழனியில் பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டது. அத்துடன், கோயில் கணக்கர் ராமச்சந்திரன், காவலர் சதீஷ்குமார், ஊழியர் சண்முகவேல் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை இந்து அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன் பிறப்பித்துள்ளார்.
