திருவனந்தபுரம், நவ. 9- பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் எத்தனால் கலக்கப்படுகிறதா என்பதைச் சோதிப்பதற்காக, கேரளத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தீவிர சோதனை நடத்த உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
கருநாடக மாநிலத்திலுள்ள சில பெட்ரோல் பங்குகளில், அனுமதிக்கப் பட்ட அளவுக்கு மேல் எத்தனால் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின.
இதனைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளத்திலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கருநாடகத்தில் நிகழ்ந்த நிகழ்வைத் தொடர்ந்து, கேரளாவிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்க இச்சோதனை நடத்தப்படுகிறது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலிருந்து பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப் படும். சோதனையில் பெட்ரோலில் கலப்படம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
