தஞ்சைத் தீர்மானங்கள் (2)

5 Min Read
- Advertisement -

கடந்த 14ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட போராட்ட அறிவிப்புத் தீர்மானங்களுள் ஒன்று – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் பற்றியதாகும்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஏற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.  (Tamilnadu Act 2 of 1971)

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டதுண்டு.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் 23.5.2006 அன்று நிறைவேற்றப்பட்டது.

14.7.2006 அன்று தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறைச் சட்டம் 1959இல் திருத்தம் செய்ய அவசர சட்டம் (Ordinace எண் 5 – 2006) பிறப்பிக்கப்பட்டது.

அந்தச் சட்டத்திற்கு (15/2006) 29.8.2006 அன்று ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு மறுநாள் 30.8.2006 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 2007ஆம் ஆண்டு சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஆறு இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் சைவ மற்றும் வைணவ ஆகமப் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் மதுரை, தல்லாகுளம் அய்யப்பன் கோயிலில் முதன் முறையாக பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இரண்டாவது பார்ப்பனரல்லாதார் அர்ச்சகர் 2020 ஜூலையில் மதுரை நாகமலை சித்தி விநாயகர்கோயிலில் நியமிக்கப்பட்டார்.

‘திராவிட ஆட்சி நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி ஆகமப் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்குப் பணி நியமனம் அளிக்கப்பட்டது.

அதற்குமேல் பார்ப்பனரல்லாதார் அர்ச்சகர் நியமனம் நடக்கவில்லை. இந்த நிலையில்தான், தஞ்சாவூரில் கடந்த14ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முறைப்படி ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையேல், 2027ஆம் ஆண்டு போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒரு வகையில் ஜாதி ஒழிப்புக்கான தீர்மானம் ஆகும். வேறு எந்தத் துறையிலும் இத்தகைய ஜாதி முறை பின்பற்றப்படவில்லை. அதுவும் ஒரே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்  உரிய ஆகமப் பயிற்சி பெற்ற பிறகும்கூட, ஆகமக் கோயில்கள் என்று கூறி, அதில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பது சட்ட ரீதியாகவும், நியாய ரீதியாகவும் எப்படி சரியாக இருக்க முடியும்?

இது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினாலும் பார்ப்பனரல்லாதாரை நியமனம் செய்யும்போதெல்லாம் பார்ப்பனர்கள் நீதிமன்றம் செல்வதும், தடை வாங்குவதும் வழமையாகி விட்டது.

சரி, பார்ப்பனர்கள் சொல்லுகிறபடியே பார்த்தாலும் அதிலாவது ஒரே வகையான சீர்மை இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை! காசி சிவலிங்கம் கோயிலில் ‘அனைத்து ஜாதியினரும் சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கலாம்’ என்ற நடைமுறை இருக்கிறதே! அங்கே மட்டும் ஆகமம் முக்காடு போட்டு ஒளிந்து கொள்கிறதா – என்ற கேள்விக்குப் பதில் என்ன?

நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் (அக்குழுவில் சங்கராச்சாரியார், கிருபானந்தவாரியார் உள்பட உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது) அந்த அறிக்கை என்ன கூறுகிறது?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமங்களில் தடையில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறவில்லையா?

ஜாதி மற்றும் பிறப்பு அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் நடைபெற வேண்டும் என்று அந்த ஆணையம் கூறவில்லையே! அதற்கு நேர் மாறாக ஜாதி மற்றும் பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், தகுதி அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரை நியமிக்கலாம். அது உரிய பயிற்சியின் அடிப்படையில் நடைபெற வேண்டும். அதற்கான பயிற்சிப் பள்ளிகளை அரசு உருவாக்க வேண்டும் என்று நீதிபதி எஸ். மகாராஜன் தலைமையிலான ஆணையம் (1979–1982) அய்யத்திற்கு இடமின்றி அறுதியிட்டுக் கூறியுள்ளது.

இவ்வளவு சட்டங்கள் இருந்தும், நீதிபதி தலைமையிலான ஆணையம் தெளிவாக, திட்ட வட்டமாக ‘ஜாதி, பிறப்பு அடிப்படையை நோக்காமல் தகுதி அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம் நடைபெற வேண்டும்’ என்று கூறியிருந்தும், அந்த முழு உரிமைக்காகப் போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலை இருப்பது – இன்னும் பார்ப்பன ஆதிக்கம் பல வகைகளிலும் திமிரோடு இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் யதார்த்தமாகும்.

இது வெறும் பக்திப் பிரச்சினையல்ல; பக்தி நம்பிக்கை உள்ளவர்களின் சுயமரியாதைக்கான – உரிமைக்கான பிரச்சினை! அதனால்தான் தந்தை பெரியார் அதைக் கையில் எடுத்துக் கொண்டார்.

ஆகமக் கோயில்கள், ஆகமம் அற்ற கோயில்கள் என்று சாஸ்திர விதிகளை (கற்பித்தது யார்?) மேற்கோள் காட்டுவோர்க்குச் சில கேள்விகள் இருக்கின்றன –

தமிழ்நாடு அரசு 2006ஆம் ஆண்டில் நீதிபதி டாக்டர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார்கள் இருந்தனர். ஒவ்வொரு கோயிலுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதுபற்றியெல்லாம் ‘கோயில்கள், ஆகமங்கள், மாற்றங்கள்’’ என்ற தலைப்பில் நீதிபதி டாக்டர் ஏ.கே. ராஜன் 87 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றை (டிசம்பர் 2010) வெளி யிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. அவற்றில் குழு உறுப்பினர்களான உ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார் 106 வைணவக் கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

106 கோயில்களில் வெறும் 30 பேர்கள் மட்டுமே ஆகமம் தெரிந்த அர்ச்சகர்களாக உள்ளனர் என்று கூறியிருக்கிறார்களே – இதற்கு என்ன பதில்? சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் ஆகமம் பயின்றவர்கள் 4 நபர்கள் மட்டுமே!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகப் பார்ப்பனர்கள் பணியாற்றுகின்றனர். 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே! இதர 66 அர்ச்சகர்கள் முறையாக ஆகம விதிகளை அறிந்தவர்கள் இல்லை – இவர்களெல்லாம் தந்தையார் வழி யில் வந்தவர்கள்தான்! இதற்கு என்ன பதில்?

பழனி முருகன் கோயிலை உருவாக்கி யவர்கள் பண்டாரத்தார்கள். பூஜை செய்தவர்களும் பண்டாரத்தார் மரபு வழி வந்தவர்களே! இப்பொழுது அந்தக் கோயில் பார்ப்பனர் ஆதிக்கத்தில் சமஸ்கிருத வழிபாட்டு முறையில் இயங்குகிறதே – இதனை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்? என்பது மற்றொரு முக்கிய வினாவாகும்.

உண்மைகள் எல்லாம் இவ்வாறு இருக்க, தங்கள் வசதிக்கேற்ப பார்ப்பனர்கள் ஆதிக்கம் கோயில்களில் கொடி கட்டிப் பறப்பது எப்படி?

பக்தர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாதார் சிந்திக்க வேண்டாமா?

திராவிடர் கழகம் 2027இல் இதற்கான போராட்டத்தை அறிவிக்க உள்ளது. சுயமரி யாதை உள்ள அத்தனைப் பேர்களும் அணி வகுக்க வேண்டும் –ஒவ்வொரு வகைகளிலும் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

தயாராவீர்கள் தோழர்களே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *