சென்னை, நவ. 17- தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வில், மின்வாரிய வரலாற்றிலேயே முதன்முறையாக 1,472 பெண்கள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் மொத்தம் 5,181 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தகட்டமான உடல் தகுதித் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
தேர்வர்களுக்குச் சிறப்பு ஏற்பாடுகள்
உடல் தகுதித் தேர்வின்போது தேர்வர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், இப்பணியில் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்கும் நோக்கிலும் மின்வாரியம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி: மின்கம்பம் ஏறுவதற்கான பிரத்யேகச் சிறப்பு காலணிகள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டன.
உடல் தகுதித் தேர்வு நடைமுறை களைத் தெளிவாக விளக்கும் வகையில் விழிப்புணர்வு காணொலி தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு முன்ன தாகவே வழங்கப்பட்டது.
தேர்வு முடிவுகள் விவரம்
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 13 மய்யங்களில் கடந்த 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை உடல் தகுதித் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வில் 2,752 ஆண்கள் மற்றும் 2,021 பெண்கள் என மொத்தம் 4,773 பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2,406 ஆண்களும் (87.42%), 1,472 பெண்களும் (72.83%) என மொத்தம் 3,878 பேர் உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, சவால் நிறைந்த கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் ஒரே நேரத்தில் 1,472 பெண்கள் தேர்ச்சி பெற்றிருப்பது, தமிழ்நாடு மின்வாரிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
