மலேசியா தமிழ் மாநாட்டில் பங்கேற்க கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு!

2 Min Read
- Advertisement -

திருப்புவனம், நவ. 18- மலேசியாவில் நடை பெறும் தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்க, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் அடுத்த மாதம் டிசம்பர் 19, 20 ஆகிய நாள்களில் தமிழ் வரலாற்று ஆய்வு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் துறைரீதியாக இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டதாகவும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாநாட்டின் ஏற்பாட்டாளர் மலேசிய திருமாவளவன், கூறியதாவது:

டிசம்பர் 19, 20 ஆம் நாள்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தோம். கீழடி அகழாய்வு அறிக்கையில் மாற்றங்கள் செய்ய மறுத்ததால், அவரது வெளிநாட்டுப் பயணத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட அனுமதிக்குத் தேவையான தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, இந்திய தொல்லியல் துறை அவரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி கேட்டுள்ளது. அவர் அந்த உறுதிமொழியை தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான கடிதத்தில், இந்திய தொல்லியல் துறை நிர்வாக இயக்குநர், அமர்நாத் ராமகிருஷ்ணன் மாநாட்டில் ஆற்றும் பேச்சு அல்லது உரையின் எழுத்து மற்றும் காட்சிப் பதிவை, திரும்பி வந்தபிறகு தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்; இந்திய தொல்லியல் துறை அல்லது இந்திய அரசின் செயல்பாடு, கொள்கைகள் அல்லது நற்பெயரை விமர்சிக்கும் எந்த கருத்தையும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி எழுத்துப்பூர்வ உறுதிமொழி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கீழடியில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையில் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கலாம் என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்ட காலத்தை மறுத்து, அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு கேட்டது. ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணன் அதை செய்ய மறுத்து வருகிறார். இதனால் அந்த அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு தாமதப்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *