அனில் அம்பானி குழுமம் ரூ.27 ஆயிரம் கோடி மோசடி! சி.பி.அய். தீவிர விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

புதுடில்லி, மே 10- தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான, ‘திருபாய் அம்பானி’ குழும நிறுவனங்கள் மிகப் பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், ‘இது குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணை அவசியம்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மோசடி மூலம் வங்கிகளுக்கு 27,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.பி.அய்., தெரிவித்துள்ளது.

தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ‘திருபாய் அம்பானி’ குழும நிறுவனங்கள் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி பணத்தை மோசடி செய்திருப்பதாக, மேனாள் அய்.ஏ.எஸ்., அதிகாரியான ஈ.ஏ.எஸ்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மோசடி குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் 8.5.2026 அன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், ”வங்கி பணம் 27,337 கோடி ரூபாயை மோசடி செய்ததில், அனில் அம்பானி தான் மூளையாக செயல்பட்டார் என்பதை சி.பி.அய்., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.”ஆனால், இதுவரை அவரை ஏன் கைது செய்யவில்லை; அவர் என்ன புனிதரா?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘விசாரணை முகமைகள் கோராத வரை, ஒருவரை கைது செய்யும்படி நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. விசாரணையை பரபரப்பாக்குவதை விட, முறையான ஆதாரங்களை திரட்டுவதில் தான் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் இந்த விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம்’ என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஒன்பது எப்.அய்.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன; ஏழு வழக்குகளில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, 3,960 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வழக்குகளில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க, 31 ‘லுக் அவுட்’ அறிவிக்கைகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன.

அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ”என் கட்சிக்காரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். அம்பானியை கைது செய்வது தான் மனுதாரரின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஒருவேளை அம்பானியே கூட இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில், விசாரணை காலதாமதமின்றி வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும்’ என அறிவுறுத்தினர்.

மேலும், விசாரணையில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால், நீதிமன்றம் தலையிடும் என எச்சரித்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *