டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டி.வி.எஸ். குடும்பச் சொத்து பிரிவினையில் தந்தைக்கு எதிராக மகள் நோட்டீஸ்! டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் மகள் லக்ஷ்மி, கூட்டுக் குடும்பச் சொத்தில் தனக்குரிய பங்கைப் பிரித்து தரக்கோரி தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தாயார் மல்லிகா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குடும்பச் சொத்துகள் மற்றும் நிறுவனப் பங்குகள் பிரிப்பதில் குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க உச்சநீதிமன்ற அனுமதி கோரும் இந்தியா கூட்டணி! வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகள் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் மூலம் பதிலளிக்கவும், எஸ்.அய்.ஆர். நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளன.
* பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்! 2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவரின் தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி பிணை வழங்கியுள்ளது. 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததையும், ஒருவரின் கடுமையான உடல்நலக் குறைபாட்டையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பசு வதை குற்றச்சாட்டில் பஜ்ரங் தளத்தினர் வழிபாட்டுத் தலத்திற்குள் புகுந்ததால் சர்ச்சை – ஒடிசா பழங்குடியினர் போராட்ட எச்சரிக்கை! சாந்தால் பழங்குடியினரின் வழிபாட்டுத் தலம் அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாரால் ஒடிசாவில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. கைது செய்யப்பட்ட அய்ந்து பஜ்ரங் தளத்தினருக்கு ஆதரவாக விஸ்வ ஹிந்து பரிசத் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெண்களுக்கு எதிரான உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்க உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் முன்மொழிவு! உயர்நீதிமன்றத் தீர்ப்புகளில் பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் பாலினப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கருத்துகளைக் கண்டறிந்து நீக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய கருத்துகள் பெண்களின் கண்ணியத்தையும் சமூகப் பார்வையையும் பாதிப்பதால் நீதிமன்றங்கள் மொழிப் பயன்பாட்டில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
தி அய்ந்து:
* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இணையதளத்தில் 287 ‘பிற மதங்கள்’ பட்டியலிடப்பட்டன! மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-க்கான சுயக் கணக்கெடுப்பு இணையதளத்தில் ‘பிற மதங்கள்’ பிரிவில் 287 பெயர்கள் இடம்பெற்றன; பின்னர் அந்தப் பட்டியல் நீக்கப்பட்டது. கணக்கெடுப்பாளர்கள் பெயர்களை எழுத்துப் பிழையின்றி பதிவு செய்ய உதவும் முன்கணிப்பு உரைப் பட்டியல் என அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* அய்டிபிஅய் வங்கியை பேர்பாக்ஸ் நிறுவனத்திற்கு விற்கும் திட்டத்தைக் கண்டித்து டிசம்பர் 3இல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! அய்டிபிஅய் வங்கியின் முன்மொழியப்பட்ட விற்பனைக்கு எதிராக, வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு டிசம்பர் 3ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அகில இந்திய அய்டிபிஅய் அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊழியர்கள் சங்கம் இணைந்து இப்போராட்டத்தை அறிவித்துள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: நான்கு மாநிலங்களில் சுயக் கணக்கெடுப்பு தொடக்கம் – டிசம்பர் 1 முதல் வீடு வீடாகக் கணக்கெடுப்பு! உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளில் சுயக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. நவம்பர் 30 வரை நடைபெறும் இப்பணி முடிந்ததும், டிசம்பர் 1 முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
– குடந்தை கருணா
