*பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை! மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை!
* டெல்டா விவசாயிகள் படும்பாடு கொடுமையானது! மேகதாது அணை கூடாது!
*விலைவாசி கடுமையான ஏற்றம்! ஊடகங்கள் கள்ள மவுனம் கடைப்பிடிக்கின்றன!
சாலியமங்கலம், நவ.16 பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை! மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை! டெல்டா விவசாயிகள் படும்பாடு கொடுமையானது! மேகதாது அணை கூடாது! விலைவாசி கடுமையான ஏற்றம்! ஊடகங்கள் கள்ள மவுனம் கடைப்பிடிக்கின்றன! 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களை உடனடியாகத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (15.11.2026) சாலியமங்கலத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
18 கோடி ரூபாயில் பெரியார் வளாகம்!
இப்பொழுது நடைபெற்ற நிகழ்ச்சி மிக முக்கிய மானதாகும். 18 கோடி ரூபாயில் இந்த ஊரில் பெரியார் வளாகம் என்று சிறப்பான முறையில் உருவாகிறது. அடுத்த ஆண்டு முழுமையடையும் வாய்ப்பிருக்கிறது. உரத்தநாட்டில் இப்படி ஒரு வளாகம், பெரியார் பெயரில் உருவாகிறது. அந்தப் ‘பெரியார் வளாகத்தில்’ நூலகம் இருக்கும்.
செய்தியாளர்: த.வெ.க. ஆறுமாத கால ஆட்சி எந்த அளவுக்கு இருக்கிறது?
ஆட்சி வெறும் காட்சியாக இருக்கிறது!
தமிழர் தலைவர்: ஆறு மாத கால ஆட்சி, ஓட்டுப் போட்டவர்களுக்கே மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு கொடுத்த கூட்ட ணிக் கட்சிக்காரர்களே, ஆறு மாதத்தில் ‘‘இந்த ஆட்சி வெறும் காட்சியாக இருக்கிறது, மக்களுடைய மீட்சியாக இல்லை’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
எதற்கெல்லாம் வாக்குறுதி கொடுத்தார்களோ அவை நிறைவேற்றப்படவில்லை. அதற்குச் சமாதானம் சொல்வதுபோன்று, ‘‘எங்களுக்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன’’ என்று சொன்னாலும் கூட, சட்டம் – ஒழுங்கு என்பதைப் பற்றி டில்லியே கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு இன்றைக்கு நிலைமை இருக்கிறது.
எங்களைப் போன்றவர்கள் செய்தியாளர்களாகிய உங்களை அடிக்கடி சந்திக்கின்றோம். அதே மாதிரி தலைவர்கள் சந்திக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், முன்னாள் முதலமைச்சர்களாக இருந்தாலும், எல்லோருமே சந்திக்கிறார்கள். நீங்கள் கேட்கிற கேள்விகள் எவ்வளவு இக்கட்டான கேள்வியாக இருந்தாலும், ஆத்திரமூட்டக்கூடிய கேள்வியாக இருந்தாலும், கேள்வி கேட்பது செய்தியாளருடைய உரிமை. ஆகவே கேள்விகள் எப்படி இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் பதிலளிக்கிறார்கள். விமர்சனமாக எடுத்துக்கொண்டு அவற்றுக்கு மகிழ்ச்சி யாக பதிலளிக்கிறார்கள்.
உலகத்திலேயே முதலிடம் பெறக்கூடிய பிரதமர் மோடிக்குப் போட்டியாக இருக்கிறார்!
இதில் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், இந்த ஆறு மாதமாக நடைபெறும் த.வெ.க. ஆட்சியின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்ற நிலை இருக்கிறது. பத்திரிகையாளர்களை பொதுவெளியில் சந்தித்து, கருத்துகளைக் கூறாதவர்களில் உலகத்திலேயே முதலிடம் பெறக்கூடியவர் நம்முடைய பிரதமர் மோடி என்றால், அவருக்குப் போட்டியாக இன்னொருவர் வந்திருக்கிறார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பதும் இல்லை. எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருக்கின்றார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கக்கூடிய இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!
செய்தியாளர்கள் கேள்விகள் கேட்பது, அவர்க ளுக்காக அல்ல, மக்களுடைய உணர்வுகளை ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். கேள்விகளைக் கேட்கிறார்கள். அதை நல்ல உணர்வோடு எடுத்துக்கொள்ள வேண்டும்; ‘இட்ஸ் குட் ஸ்பிரிட்’ என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே அதைச் செய்யாத ஓர் ஆட்சியாக, வெறும் காட்சிக்காக இந்த ஆட்சி இருக்கிறது. இது மீட்சிக்கான ஆட்சி இல்லை. கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சியினர் நடக்கவில்லை.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை!
யாருக்குப் பாதுகாப்பு உள்ளது என்றே தெரிய வில்லை. எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுக்கிற வர்கள் காவல்துறையினர். ஆனால், அந்தக் காவல்துறை யினருக்கே பாதுகாப்பு இல்லை. அதுபோல, ‘‘நீங்கள் என்னுடைய சகோதரிகள், நான் உங்களுக்கு சகோதரன், குழந்தைகளுக்கெல்லாம் நான் மாமன், தாய்மாமன்’’ என்றெல்லாம் முதலமைச்சர் சொல்லுகிறார். அந்தக் குழந்தைகள் இன்றைக்குச் சுதந்திரமாக வெளியே வந்து விளையாட முடியவில்லை, நடமாட முடியவில்லை. காணாமல் போன குழந்தைகளுக்கு ‘‘இப்போது 30 நாள்’’ என்று திரைப்படத்திலே ‘‘வெற்றிகரமான 30 ஆம் நாள்’’ என்று சொல்வதைப் போல இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. கொடுமையிலும் கொடுமை! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. அது போல நாட்டு நடப்பைப்பற்றி எல்லோருக்கும்
தெரியும்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றன!
இன்னொரு பக்கம் விலைவாசிகள் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கின்றன என்றும் எல்லோருக்கும் தெரியும்.
எங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா, இல்லையா? என்பது வேறு செய்தி. ‘தீபாவளி’ மக்கள் அதிகமாகக் கொண்டாடக்கூடிய ஒரு விழா. அந்த விழாவின்போது இன்றைக்கு அரிசி விலை என்ன? தக்காளி, வெங்காயம், காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலை என்ன? எல்லாம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றன. முன்பாவது, அமெரிக்க – ஈரான் போரால் ேஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதைக் காரணமாகச் சொன்னார்கள். இப்போது என்ன?
அதே மாதிரி பல குழப்பங்கள், காலையிலே போட்ட உத்தரவை, மாலையிலே திரும்பப் பெற்றுக் கொள்ளுகின்ற குழப்பமான நிலை.
எதிரி நாடுகள் மீது படையெடுத்துப் போவது மாதிரி, பெரியார் திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்தனர்!
மாநில உரிமைகளைப் பெறுவதற்காக ஒன்றிய அரசுடன் போராடுவதுதான் எங்கள் கொள்கை – பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் எல்லாம் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய ஓர் ஆட்சியிலே, அந்தக் கொள்கைத் தலைவர்களுடைய உரிமைக் குரலுக்கு மதிப்பு எதுவும் இல்லை. ‘‘நீட் தேர்வை ஒழிக்கிறோம், அதுதான் எங்கள் கொள்கை’’ என்று சொல்கிறார்கள். ‘நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்’ என்று இன்றைய ஆட்சியாளர்களின் கரத்தைப் பலப்படுத்துவதற்காகத் திராவிடர் கழகத்தவர்களாகிய நாங்கள் பிரச்சாரம் செய்தால், அதைத் தடுப்பது மட்டுமல்ல, அவர்களின் உத்தரவை மீறி நடக்கிறோம் என்று எதிரி நாடுகள் மீது படையெடுத்துப் போவது மாதிரி, பெரியார் திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் குவித்தனர். அதை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
உயர்நீதிமன்றம் கண்டனம் செய்திருக்கிறது!
உயர்நீதிமன்றத்தை நாடி, அதற்குப் பிறகு, அப்பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்கினோம். மக்கள் மன்றம் வருந்துகிறது, வேதனைப்படுகிறது. உயர்நீதிமன்றம் கண்டனம் செய்திருக்கிறது என்பதிலிருந்தே இந்த ஆட்சியைப்பற்றிப் புரிந்துகொள்ளலாம்.
யாரோ ஒருவர், இந்த ஆட்சியைப்பற்றி விமர்சனம் செய்துவிட்டார் என்றவுடனே, அவர் மீது உடனே காவல்துறையின் நடவடிக்கை பாய்கிறது. அதுபோல, ஊழலை ஒழிப்போம் என்றால், அதிலே ஓர் அடைப்புக் குறிகளைப் போட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் மீது, குறிப்பாக தி.மு.க. மீது அவதூறுச் சேற்றை வாரி இறைத்து, வழக்குகளைப் போடுகிறார்கள்.
சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவரே, தொகுதியின் குறை களைப்பற்றிச் சொல்ல வந்த பொதுமக்களில் ஒருவரைத் தாக்கியிருக்கிறார் என்ற செய்தியும் வெளி வந்திருக்கிறது.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு
ஏற்பட்ட அவலம்!
அதற்கடுத்தபடியாக, ‘‘பெண்களுக்கு எங்களுடைய ஆட்சியில்தான் பாதுகாப்பு’’ என்று கூரை ஏறி, கோபுரம் ஏறிச் சொல்லுகின்றார் முதலமைச்சர். அவருடைய கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பெருந்தலைக் குனிவை, இந்தியாவே வேதனைப்படக் கூடிய அளவிற்கு, மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கக்கூடிய ஒரு பெண்மணிக்கு, ‘தரக்குறைவான’ வகையில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
அதை ஆளுங்கட்சியில் கூட்டணி வைத்துள்ள நேர்மையானவர்கள் கண்டித்து இருக்கிறார்கள். அதில் ஒரே ஒருவர்தான், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு தலைவர், ‘‘அதற்கு ஆதாரம் உண்டா?’’ என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார். அதனால், அவருடைய காங்கிரஸ் கட்சிக்காரர்களாலேயே அவர் முடக்கப்பட்டு இருக்கிறார். அதே கட்சியைச் சார்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர், அந்தக் கட்சியைச் சார்நத பெண்கள், மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகியோர் கண்டித்திருக்கிறார்கள்.
பக்கத்து மாநிலங்களுக்குச் செல்லும் அயல்நாட்டு முதலீடுகள்!
எனவே, நேர்மைக்கு இடமில்லாத அளவிற்கு, ஏதோ இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதாக இல்லை. காரணம், புதிதாக வரவேண்டிய முதலீடுகள் – ஏற்கெனவே இருந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உலகம் முழுவதும் சென்று, முதலீடுகளை ஈர்த்தார். அதன்மூலமாக, பெரிய பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்ய முன்வந்தன. ஆனால், இந்த ஆட்சியில், அவையெல்லாம் காணாமல் போய், அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.
விவசாயிகள் ரத்தக் கண்ணீர்
வடிக்கின்ற நிலைதான்!
விவசாயிகள் நிலையோ வேதனையாக இருக்கிறது. அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்வது, மேலும் வேதனைப்பட வைக்கிறது. ஏற்கெ னவே காவிரித் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதி டெல்டா பகுதியாகும். அப்பகுதி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்ற நிலைதான் இப்போது உள்ளது. அவர்கள் எல்லாம் வீட்டுக் கைதிகளாக்கப்படுவது மிகப்பெரிய கொடுமையாகும்.
நமது உரிமைகளையெல்லாம் பெற்றுத் தருவ தற்காக உயர்நிலைக் குழு ஒன்றை ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அமைத்தார்கள். அது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நீதிபதியையும், நிர்வாகிகளையும், நிர்வாக அதிகாரிகளையும் கொண்டது. அந்தக் குழு முதல் அறிக்கையையும் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்தக் குழுவை, யாருடைய பேச்சையோ கேட்டுக்கொண்டு, கலைத்திருக்கிறது இந்த த.வெ.க அரசு.
சொந்தமாகவும் சிந்திக்கக் கூடியதாக இல்லை; ஆக்கப்பூர்வமாகப் பிறர் சொல்வதையும் கேட்கக்கூடிய நிலை இல்லை!
எனவே, இந்த த.வெ.க. அரசு, சொந்தமாகவும் சிந்திக்கக் கூடியதாக இல்லை; ஆக்கப்பூர்வமாகப் பிறர் சொல்வதையும் கேட்கக்கூடிய நிலை இல்லை. அனுபவமும் இல்லை. தான்தோன்றித்தனமாக எல்லாம் தனக்கே தெரியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த ஆட்சி மிகப்பெரிய கொடுமையான ஆட்சியாக இருக்கிறது.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை; பெண்க ளுக்குப் பாதுகாப்பு இல்லை. சிறையில் இருக்கக்கூடிய கைதிகள் தப்பியோடக் கூடிய அவலம் இருக்கிறது. காவல் நிலையத்திலேயே உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதிலே, சிங்கப் பெண், தங்கப் பெண் என்று சொல்லக்கூடிய அந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
ஊடக நண்பர்களே, வருத்தத்தோடு ஒன்றைச் சொல்லுகிறேன், இதுவே திராவிட மாடல் ஆட்சியில், இதுபோன்ற நிகழ்வுகள் கால் பகுதியளவிற்காவது நடைபெற்று இருந்தால், உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய அளவிற்கு ஊடகங்கள் நடந்தி ருக்கும். ஆனால், அந்த ஊடகங்கள் கூட இன்றைக்குக் கள்ள மவுனத்தைக் கடைப்பிடிக்கின்றன.
தாழ்ந்த தமிழகம், வீழ்ந்த தமிழகமாக ஆகியிருக்கிறது!
இன்றைக்கு உண்மைகள் பலியாகி இருக்கின்றன. ஆனால், அதைவிட மிகப்பெரிய சக்தியாக, ஊட கங்களைத் தாண்டி, சமூக வலைதளங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
‘தாழ்ந்த தமிழகமே’ என்று அண்ணா சொன்னார்.
தாழ்ந்த தமிழகம், வீழ்ந்த தமிழகமாக ஆகியிருக்கிறது. அப்படி வீழ்ந்த தமிழகம், இன்றைக்கு அதைவிடக் கேவலமாகி விடக்கூடாது என்பதுதான் நமது கவலை.
ஆட்சி நேர்மையாக நடைபெறுகிறது என்று காட்டவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு!
ஆளுரை அழைத்து, ஒன்றிய உள்துறை அமைச்சர், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கைப் பற்றி அறிக்கை கேட்கிறார் என்கிறபோது, உடனே, குற்றம் நடத்திய அந்த சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, ஒரு தலைமை கண்டிக்கவேண்டும். அவர்கள் மீது, முதல மைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன்மூலமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் கிடைக்கும் நீதியல்ல – எங்களுடைய ஆட்சி நேர்மையாக நடைபெறுகிறது என்று காட்டவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
அதற்கு மாறாக, அவர்களையெல்லாம் அழைத்து, தீபாவளிப் பரிசு அளிக்கிறார் முதலமைச்சர் என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
‘‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், செய்யுங்கள்; அப்படிப் பேசினாலும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன், பரிசு கொடுப்பேன்’’ என்று சொன்னால், பொது ஒழுக்கம் என்னாவது?
நீதிமன்றமே முன்வந்து வழக்கைப் பதிவு செய்யவேண்டும்!
இன்னொரு செய்தியை உங்களிடம் சொல்லுகிறேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு, ஒரு சட்டமன்ற உறுப்பினர், தரக்குறைவான குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கும் செய்தி குறித்து, ‘விடுதலை’யில் அறிக்கையையும் எழுதியிருக்கிறேன்.
இதுவரையில், மாவட்ட ஆட்சியருக்கு, எந்த சட்டமன்ற உறுப்பினராவது இப்படித் தரக்குறைவான குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார்களா? அவரு டைய இல்லத்திற்கு இரவில் சென்று, இதுபோன்று நடந்திருக்கிறார்களா?
அந்தப் பெண் மாவட்ட ஆட்சித் தலைவரின் கணவர் அதுகுறித்துப் புகார் செய்திருக்கிறார்.
‘விடுதலை’ அறிக்கையில் நான் எழுதியிருக்கிறேன். பல நேரங்களில் கண்டித்து நேர்மையைச் சொல்லு கின்றது உயர்நீதிமன்றம் – விமர்சனத்தைத் தாங்கக்கூடிய பக்குவம் இருக்கவேண்டும் என்று, அதற்காகக் கைது செய்தவர்களை விடுதலை செய்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து, பெண் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில், Suo Moto என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், வழக்குரைஞர்களுக்குத் தெரியும் – சில முக்கிய பிரச்சினைகளில் நீதிபதிகள், தாங்களே முன்வந்து வழக்கைத் தொடுத்து, தங்களு டைய மேற்பார்வையிலேயே விசாரணை என்கிற அளவிற்குத் தனி வழக்கினைத் தொடுப்பதற்கு முன்வரவேண்டும்.
அதேபோல, கூட்டணிக் கட்சிக்காரர்களும் இன்றைய ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் ‘மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்’ என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்த நிலையாகும்!
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரிடமே, வழக்குரைஞர் நியமனத்திற்குப் பணம் கேட்டிருக்கிறார்களே!
செய்தியாளர்: த.வெ.க. ஆட்சியில் கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன் அவர்கள், ‘‘அரசு வழக்குரைஞர் பதவிகளில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை’’ என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அது நியாயமானதுதான். ஏனென்றால், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஒரு சட்டமே இருக்கிறது.
சமூகநீதியைப் பின்பற்றாதது என்கிற ஒரு நிலை இருக்கட்டும். அதைவிட முக்கியமானது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரே புகார் கொடுத்து, அதை நீதிமன்றம் கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று நீங்கள் கேட்கவில்லையே!
கன்னியாகுமரியில், அரசு வழக்குரைஞர் நிய மனத்திற்காக, த.வெ.க.வைச் சேர்ந்தவரே, ‘‘என்னிடம் இத்தனை லட்சம் ரூபாய் கேட்டார்கள்’ என்று சொல்லி யிருக்கிறார். அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம், காதைத் திருகி, தலையில் குட்டியிருக்கிறது.
திசை திருப்பல் அரசியல்
நீண்ட நாள்களுக்கு நீடிக்காது!
ஆனால், இதுகுறித்து முதலமைச்சரோ, அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை. எல்லாவற்றிற்கும், ‘‘தி.மு.க.வின் ஊழலை ஒழிக்கிறோம், தி.மு.க.வின் ஊழலை ஒழிக்கிறோம்’’ என்று சொல்லி, திசை திருப்பல்களைச் செய்கிறார்கள். ஒரு நிகழ்வை விட்டு விட்டு, வேறொரு நிகழ்வை அதற்குப் பதிலாகச் சொல்வது என்கிற அரசியல் நீண்ட நாள்களுக்கு நீடிக்காது.
எனவே, திசை திருப்புகின்ற அரசியல், அதற்குரிய பதில் அல்ல. கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகம் வாங்கியிருப்பதில் ஊழல் நடந்திருக்கிறது என்றால், யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.
ஆகவே, என்ன செய்யவேண்டும்.
‘‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’’ என்பதுதான் மிக முக்கியம். இன்றைக்கு அந்த நிலைதான் இருக்கிறது.
பதவிக்குப் போகிற இயக்கமா,
திராவிடர் கழகம்?
எல்லோரும் எதிரிகள், எதிரிகள் என்கிறார். எங்க ளைத் தவிர, எல்லோரும் எதிரிகள் என்கிறார். நீதிமன்றம் அவருக்கு எதிரி இல்லை. முதலமைச்சர் பதவியிலிருந்து அவரைத் தள்ளிவிட்டு, திராவிடர் கழகமான நாங்கள் அந்தப் பதவிக்கு வருகிறோம் என்று சொல்லக்கூடிய இயக்கமா எங்கள் இயக்கம்?
பொதுமக்களின் வேதனையை எடுத்துச் சொல்ல வேண்டாமா? மக்கள் கருத்தைப் பிரதிபலிக்கின்ற செய்தியாளர்களாகிய உங்கள் மேல் கோபப்படலாமா? கேள்வியாகக் கேட்கிறீர்கள் – அதற்காகக் கோபப்படக் கூடாது.
ஒவ்வொரு நாளும், மிகப்பெரிய அளவிற்கு கீழிறக்க நிலைதான்!
தமிழ்நாட்டிற்கு இப்படிப்பட்ட ஓர் அவலம் ஏற்பட்டதில்லை. இனிமேல் இதற்கான பரிகாரம் காணப்படவேண்டும். அய்ந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரவிருக்கின்றன. அதற்கு முன், தமிழ்நாடு என்னாகுமோ என்ற நிலைதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும், மிகப்பெரிய அளவிற்குக் கீழிறக்க நிலைதான் உள்ளது.
இவ்வாட்சி பாயாசம் அல்ல,
முழுக்க முழுக்க பாசிசம்!
தவறுகள் நடக்கலாம்; ஆனால், அந்தத் தவறைத் தலைமை கண்டிக்கவேண்டாமா? மற்றவர்கள் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டும்பொழுது, திருத்திக் கொள்ளவேண்டும் அல்லவா! அதற்குப் பதிலாக, தவறைச் சுட்டிக்காட்டுபவர்களையெல்லாம் சிறையில் தள்ளுவோம், அவர்கள் எல்லாம் எதிரிகள் என்று சொல்வது நியாயமா?
விலைவாசி ஏற்றம் அதிகமாகியிருக்கிறது என்று ஒரு பொருளாதார நிபுணர் சொல்லுகிறார். அதற்காக, இரவோடு இரவாக அவரைக் கைது செய்வது என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
இவ்வாட்சி பாயாசம் அல்ல, முழுக்க முழுக்க பாசிசம்!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்களைச் செய்தது
திராவிட மாடல் ஆட்சி!
இன்னொரு மிக முக்கியமான செய்தியைச் சொல்லு கிறேன். திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமானது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது, ஜாதி ஒழிப்பிற்காகத் தந்தை பெரியார் முழங்கிய போராட்டமாகும். அதனைக் கலைஞர் அவர்கள் ஏற்றுச் சட்டமாக்கினார். அந்தச் சட்டம், நீதிமன்றத்தால் மூன்று முறை சரியென்று சொல்லப்பட்டதாகும். அதனைச் செயல்படுத்தவிடாமல், முடக்கிக் கொண்டு வந்தார்கள்.
பிறகு, திராவிட மாடல் ஆட்சி வந்தவுடனே, அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தினார்கள். இப்போது, நீதிமன்றத்தில் சில வழக்குகளில் தடை இருக்கிறது என்று சொல்லி, அதனைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இன்றைய ஆட்சியாளர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் என்பது ஒவ்வோர் ஆண்டும், 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி செய்யப்படவேண்டும்.
69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்!
ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் ஒவ்வோர் ஆண்டும் எப்படி அனுமதி கொடுக்கிறார்களோ, அதுபோன்று, அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரியிலும் பயிலுவதற்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும்.
தடை ஆணைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கெனவே உள்ள தடையாணையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கவேண்டும்.
பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொன்னால் மட்டும் போதாது; பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த பெருமை, திராவிட மாடல் ஆட்சிக்கு உண்டு.
இப்போது ஏற்பட்டிருப்பது ‘மாற்றம்’ அல்ல; தடுமாற்றம், ஏமாற்றம்தான்!
எனவே, ஏற்கெனவே இருந்த ஓர் ஆட்சி செய்தது என்றால், அந்த ஆட்சியின் மீது இருக்கின்ற காழ்ப்பு ணர்ச்சியினால், அதைத் தொடராமல் இருக்கக் கூடாது.
நீங்கள் சுதந்திரமாகச் சிந்திக்கவில்லை. ஏற்கெனவே இருந்த ஆட்சியின் திட்டங்களுக்குத்தான், வேறு பெயர்களை வைத்து செயல்படுத்துகிறீர்கள். இப்போது ஏற்பட்டிருப்பது மாற்றம் என்பது அல்ல. தடுமாற்றம், ஏமாற்றம்தான்.
இதனை மாற்றிக் கொள்ளவேண்டியதுதான் இப்போது தேவையானதாகும். அதிவிரைவில், உங்கள் போக்கிலே மாற்றம் ஏற்படவேண்டும்.
தமிழ்நாட்டிலேயே காங்கிரஸ் கட்சியில் ஒருமித்த கருத்து இல்லையே!
செய்தியாளர்: மேதாது அணை கட்டும் பிரச்சி னையில், இங்கே உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள் அணை கட்டக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், கருநாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவகுமார் அவர்கள், எந்தக் கண்டனம் வந்தாலும், அணை கட்டுவோம் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அது இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, பெண் மாவட்ட ஆட்சியர் பிரச்சினையில், காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் சொல்வதிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொல்வதிலும் வேறுபாடு என்றால், பிறகு எப்படி இரண்டு மாநில காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒத்துப் போவார்கள்?
இதுதான், காங்கிரஸ் கட்சியின் பெருமைகளில் ஒரு தனித்தன்மையாகும்.
ஏற்கெனவே டெல்டா பகுதி மிகப்பெரிய அள விற்குப் பாலைவனமாகி விட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால், குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காது என்ற சூழ்நிலைதான் ஏற்படும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை, கருநாடக மாநில அரசு மதித்திருக்கிறதா? தற்போது அதைத் தமிழ்நாடு அரசு கண்டித்திருக்கிறதா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டித்திருக்கிறதா? என்றால், எதுவும் இல்லை.
மக்கள் நலனைப்பற்றி
அவர்களுக்குக் கவலை இல்லை!
இப்போதுள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கின்றன. அதுதான் அவர்களுக்கு முக்கியமே தவிர, மக்கள் நலனைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்பதை வேதனை யோடும், வருத்தத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
