விழுப்புரம், நவ. 16– பூவரசங்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் 2,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
விழுப்புரம் அருகே பூவரசங்குப் பத்தை அடுத்துள்ளது எஸ்.மேட்டுப் பாளையம். இப்பகுதியைச் சேர்ந்த க.பிரகாஷ் என்பவர் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் இப்பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் 14.11.2026 அன்று கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது முதுமக்கள் தாழிகள் மற்றும் கருப்பு, சிவப்பு மட்பாண்டம் கண்டறியப்பட்டன.
இதுபற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், “எஸ்.மேட்டுப்பாளையம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டபோது முதுமக்கள் தாழிகள் இருப்பது கண்டறியப்பட்டன. தொடர்ந்து மேற்பரப்பு ஆய்வு செய்ததில் கருப்பு சிவப்பு மட்பாண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிய அளவிலான மட்பாண்டம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் கருப்பு நிறத்திலும் வெளிப்பகுதி கருப்பு சிவப்பு நிறங்களிலும் காணப்படுகிறது. மட்பாண்டத்தின் விளிம்பு மிகவும் மெல்லியதாகவும் கலைநயத்துடனும் அமைந்துள்ளது. மூடியுடன் கூடியதாகவும் இருக்கிறது.
ஈமச்சடங்கின்போது இறந்தவருடன் இத்தகைய பொருட்களும் வைத்துப் புதைக்கப்பட்டன. இதற்குச் சான்றாக தாழிகளில் எலும்புகளும் காணப்படு கின்றன. இது 2,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இதே பகுதியில் கள ஆய்வு நடத்தினோம். அப்போது குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இப்பகுதியில் அகழாய்வு மற்றும் மேற்பரப்பாய்வு செய்ய வேண்டும். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்குக் கோரிக்கை வைத்தோம்.
2020 ஜூலையில் தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க விழுப்புரம் தொல்லியல் அலுவலர் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தது. ஆனால் 6 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தென்பெண்ணை ஆற்றில் எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்கள் அழிவின் விளிம்பில் காணப்படுகின்றன. இவற்றைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் தொல்லியல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
