பெங்களூரு, அக்.20 இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழா கர்நாடகத்தின் பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பக்ரூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினரான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பட்டத்தோ்வுகளில் சிறப்பிடங்களை பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சட்ட பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிலையில், இந்தப் பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவை 105 மாணவர்கள் புறக்கணித்தனர். இதனால், வெறும் 17 மாணவர்களுக்கு மட்டும் பட்டம் வழங்கி நீதிபதி சூர்யகாந்த் கௌரவித்தார். முன்னதாக, தலைமை நீதிபதி சூர்ய காந்த், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2026-ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பின் தற்போது நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடத்தப்பட்டதால், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தனர். இந்த விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் வினாத்தாள் முறைகேட்டை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் விடியோ பார்த்து விசாரிக்க நேரமில்லை எனக் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, மே மாதத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது, “வேலையில்லா இந்திய இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்றும் விமர்சித்திருந்தார்.
