முதலமைச்சர் விஜய்க்கு 72 முன்னாள் உயர் அதிகாரிகள் கடிதம்!

- Advertisement -

மாநில உரிமைகள் தொடர்பான உயர்நிலைக் குழுவைக் கலைத்தது ஏன்?
ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த அறிக்கையின் இரண்டாம் பகுதியைத்
தயாரிக்கும் பொறுப்பை சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு

சென்னை, நவ. 15- ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வந்த உயர்நிலைக் குழுவைக் கலைத்துவிட்டு, அதன் அறிக்கையின் இரண்டாம் பகுதியைத் தயாரிக்கும் பொறுப்பை மாநிலச் சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக, முன்னாள்  அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணி உயர் அதிகாரிகள் 72 பேர் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குக் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

அனைத்திந்தியப் பணிகள், ஒன்றிய அரசுப் பணிகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்ட நடைமுறைக் குழு சார்பில், நவம்பர் 14ஆம் தேதி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எந்தவொரு அரசியல் சார்பும் இல்லை என்றும், இந்தியக் குடியரசின் அடிப்படைக் கொள்கைகளைப் பாது காப்பதிலும் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளை உறுதிப்படுத்துவதிலும் தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2026 நவம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை யின் மூலம், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வந்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டதற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, தனது முதல் பகுதி அறிக்கையை 2026 பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இரண்டாம் பகுதி அறிக்கையை 2027 மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றி வந்தது. முதல் பகுதி அறிக்கை ஒன்றிய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், முன்னாள் குடிமைப் பணி அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

கூட்டாட்சிக் கொள்கை, அதி காரப் பகிர்வு, மாநிலங்களின் நிதி, நிர்வாக உரிமைகள், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள், உள்ளாட்சி நிர்வாகம், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், காடுகள், ஒன்றிய – மாநில சட்டமன்ற, நிதி உறவுகள், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், அகில இந்திய நீதித்துறைப் பணி, சுரங்கங்கள், கனிமங்கள் தொடர்பான ஒன்றிய அமைப்புகளின் அதிகாரங்கள் உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகள் இரண் டாம் பகுதி அறிக்கையில் ஆராயப்பட வேண்டியிருந்ததாகக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சட்ட ஆணையத்திடம்
ஒப்படைப்பது பின்னடைவு!

உயர்நிலைக் குழுவின் பணிகளை மாநிலச் சட்ட ஆணையத்திடம் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு கூறியுள்ள காரணத்தையும் முன்னாள் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். உயர்நிலைக் குழுவுக்கும் மாநிலச் சட்ட ஆணையத்துக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளின் தன்மை, வரம்பு ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதாகக் கூறப்படுவது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளனர்.

மாநிலச் சட்ட ஆணையம் தனது முப்பது ஆண்டு காலச் செயல்பாட்டில் ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அதன் முந்தைய அறிக்கைகள்கூட அரசின் இணையதளத்திலோ வேறு இடங்களிலோ பொதுமக்கள் ஆய்வு செய்வதற்குக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இரண்டாம் பகுதி அறிக் கையைச் சமர்ப்பிக்க இன்னும் ஆறு மாதங்களே இருந்த நிலையில், அதன் தயாரிப்புப் பணியை வேறொரு அமைப்பிடம் ஒப்படைப்பது பின்னோக் கிய நகர்வாகும் என்றும், உயர்நிலைக் குழு ஏற்கெனவே மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட அறிவும் ஆய்வின் தொடர்ச்சியும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்ட விளக்கங்களிலும் ஆய்வு அணுகுமுறையிலும் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அறிக்கை வெளியாவதும் தாமதமாகும் என எச்சரித்துள்ளனர்.

அறிக்கையை இணைய தளத்திலிருந்து நீக்கியது ஏன்?

உயர்நிலைக் குழுவின் முதல் பகுதி அறிக்கையின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்திலிருந்து அவசரமாக நீக்கப்பட்டிருப்பதையும் கடிதம் சுட்டிக்காட்டுகிறது.

பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற ப்ளூம்ஸ்பரி (Bloomsbury) பதிப்பகம் இவ்வறிக்கையை வெளியிட்டிருந்தது. ஒரு மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இவ்வாறு பன்னாட்டுப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது அதன் தரத்திற்கும் முக்கியத்துவத்திற்கும் சான்றாகும். இந்நிலையில், அறிக்கையை இணையதளத்திலிருந்து நீக்கியிருப்பது, முந்தைய அரசு உருவாக்கிய அறிக்கை யிலிருந்து தற்போதைய அரசு தன்னைத் துண்டித்துக்கொள்ள முயற்சிப்பதையே காட்டுவதாக முன்னாள் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கூட்டாட்சிக் கொள்கையில் அரசுக்கு விருப்பமில்லையா?

உயர்நிலைக் குழுவைக் கலைத்ததற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

முதலாவதாக, உண்மையான கூட்டாட்சிக் கட்டமைப்பில் அதி காரங்கள் கிராம ஊராட்சிகள், நகராட்சி கள் போன்ற அடித்தட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவற்றால் நிறைவேற்ற முடியாத பணிகளை மட்டுமே மேல்நிலை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய அதிகாரப் பரவலாக்கக் கொள்கையில் தற்போதைய தமிழ்நாடு அரசுக்கு முழுமையான உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்களை ஒன்றிய அரசிடம் குவிக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒன்றிய அரசையும் ஆளும் கட்சியையும் பகைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு விரும்பாமல் இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மூலம் ஒன்றிய – மாநில அதிகாரப் பகிர்வில் மாற்றங்களை ஏற்படுத்துவது, நிபந்தனைகளுடன் கூடிய நிதிப் பகிர்வு, ஒன்றிய அரசின் திட்டங்களை மாநிலங்கள் மீது திணிப்பது போன்ற நடவடிக்கைகள் மாநிலங்களின் நிதி, நிர்வாகத் தன்னாட்சியைக் குறைத்து, அதிகாரங்களை ஒன்றிய அரசிடம் குவித்து வருவதாகவும் கடிதத்தில் விமர்சித்துள்ளனர்.

உயர்நிலைக் குழுவை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை!

உண்மையான கூட்டாட்சிக் கொள்கையையும் உள்ளாட்சி அமைப்பு களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தையும் உறுதிப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உயர்நிலைக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த அறிக்கையின் இரண்டாம் பகுதியைத் தயாரிக்கும் பணியை அதே குழுவிடம் ஒப்படைப்பதே இத்திசையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என்றும் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இக்கடிதத்தில் மொத்தம் 72 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் தலைமைச் செயலாளர்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் முன்னாள் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், தூதர்கள், வருவாய்த் துறை, வனத்துறை உயர் அதிகாரிகள், ரயில்வே, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யாற்றிய ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *