புதுடில்லி, நவ. 15- பிரதமர் மோடியுடன் தான் நேருக்கு நேர் விவாதித்தால் அவரால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் அமர்வின்போது, “நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்கள், சீனா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது எனது ‘மைக்’ அணைக்கப்படுகிறது, தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
நீண்ட நேர விவாதங்கள் தேவையில்லை. ஒரு மேஜையின் ஒரு புறத்தில் பிரதமர் மோடியும், மறுபுறம் நானும் நேருக்கு நேர் அமர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விவாதம் மட்டுமே வேண்டும்.
இந்த விவாதத்துக்கு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி அல்லது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் யாரை நடுவராக நியமித்தாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னுடனான இந்த நேருக்கு நேர் விவாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடியால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
