லக்னோ, நவ.3 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்து மதிப்பு மீது அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் ராகேஷ் யாதவ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி உதவி காவல் துறை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் ராகேஷ் யாதவ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக கிராமம் முழுவதும் முன்கூட்டியே மின் இணைப்பை துண்டித்தனர்.
ராகேஷ் யாதவ் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகப்படும்படியான அறையில் பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்கு அடியில் 3 பீப்பாய்களில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக ராகேஷ் யாதவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராகேஷ் யாதவின் பழத்தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
