ஜெருசலேம், அக். 30- இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு அரசு தவித்து வருகிறது. அதே நேரத்தில், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றச் சாட்டு வைத்துள்ள நிலையில் அதனை அரபு கட்சிகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 120 இடங்களில், 61 இடங்களை பிடிக்கும் கட்சி அல்லது கூட் டணியே ஆட்சி அமைக்க முடியும். 93 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலை மையிலான வலதுசாரி கூட்டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இவருக்கு கடுமையான சவாலாக விளங்கும் முன்னாள் ராணுவ தளபதி காடி அய்சென்கோட் தலை மையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை எந்த கட்சியும் பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரபு நாடாளுமன்ற கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் அரசை உரு வாக்கும் தகுதியை பெற்றுள்ளன. அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், காடி அய்சென்கோட் தனது சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளார். இதனால் இரு முக்கிய அணிகளும் இணைந்து ‘தேசிய ஒற்றுமை அரசு’ அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு பிறகு இஸ்ரேல் அதிபர் அய்சக் ஹெர்சாக் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப் படும். தேவைப்பட்டால் கூடு தலாக 14 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பெரும் சவால்கள் நீடிக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், அரபு கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து வாக்குகளை திருடி விட்டன.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். வாக்காளர் மோசடி, லஞ்சம், மிரட்டல் மற்றும் வன்முறை உள்ளிட்டவற்றில் அரபுக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அரபு கட்சிகளின் தயவோடு அமையவிருக்கும் அரசை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்றார். இதற்கு கடும் மறுப்பு தெரிவித்துள்ள அரபு கூட்டணி கட்சிகள், ‘தோல்வி பயத்தால் நெதன்யாகு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுகிறார்’ என பதிலடி கொடுத்துள்ளன.
ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் செலுத்திய அஞ்சல் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. இதிலும் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அல்லது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இஸ்ரேலில் விரைவில் மீண்டும் ஒரு தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
