அப்போது 2018 ஆம் ஆண்டு, என்னுடைய நண்பர் மரியாதைக்குரிய உதய் அய்யாவும், நானும் கப்பலில் முதல் இரு முதன்மைப் பொறுப்புகளில் (கேப்டன் மற்றும் சீப் இன்ஜினியர்) இருந்தோம். அய்யா அவர்களுக்கு வயது 55+ இருக்கும், எனக்கோ 33. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் எப்போதும் நட்புடன் சகோதரப் பாசத்துடனும் இருந்தோம், இப்போதும் இருக்கிறோம்.
அய்யா அவர்கள் முரட்டுத் தி.மு.க.காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி, கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாகப் பாதிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம். எப்போதும் கலைஞர் குறித்தும் அவரது சாதனைகள் குறித்தும் உதய் அய்யா பேசிக்கொண்டே இருப்பார், கலைஞரின் உடல்நிலை குறித்த செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருப்பார். அன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி, கப்பல் அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை 5 மணிக்கு என்னுடைய அறையின் தொலைபேசிச் சத்தம், கப்பலுக்கு ஏதோ பிரச்சினைதான் போல என தூக்கத்தில் இருந்து எழுந்து போனை எடுத்தேன்.
“கலைஞர் இறந்துட்டாருங்க தர்மராஜ்” என ஓர் அழுகுரல்! கட்டுப் படுத்த முடியாத அழுகை. உடனே போனை வைத்துவிட்டு உதய் அய்யாவின் அறைக்கு விரைந்தேன், சிறு குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார், அப்போதுதான் எனக்குப் புரிந்தது, அய்யா அவர்களின் கலைஞர் மீதுள்ள முழுமையான பாசம், மரியாதை, நன்றிக்கடன், எல்லாம்.
உதய் அய்யாவின் முழுப்பெயர் உதயசூரியன். பரம்பரை திமுக, கலைஞ ரின் மீது தனிப்பாசம். அன்று காலை மெல்ல விடியத் தொடங்கியது. “வாங்க சார் வெளியே ஒரு நடை போடலாம்” என்றேன். இருவரும் மெஸ் ரூம் சென்று காபி குடித்தபின், கப்பலின் மெயின் டெக் என சொல்லக்கூடிய மேல்பகுதியில் நடக்கச் சென்றோம். என்னால் முடிந்த அளவு ஆறுதல் கூறினேன். இதை மறக்க மற்ற கதைகளை எல்லாம் பேசினோம். பிறகு ஓரளவு சமாதானமாகி இதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தவர் மீண்டும் கலைஞரைப்பற்றி பேசி வருத்தப்பட்டார்.
ஊரில் இருந்தால் உடனே சென்னை வந்திருப்போம். ஆனால் நாங்கள் இருந்ததோ அட்லாண்டிக் பெருங்கடல், பிறகு எனக்கொரு யோசனை வந்தது, “விடுங்க சார் 94 வயதில் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்து தான் கலைஞர் அவர்கள் மறைந்துள்ளார். ஆகையால் கலைஞருக்காக நாம் ஒரு அமைதி இறுதி மரியாதை செலுத்துவோம்” என்றேன். சிறிது சந்தோஷமானார் உதய் சார். 2ஆம் பொறியாளர், 3ஆம் பொறியாளர், செகன் மேடம் ஆகியோர் தமிழர்கள் அக்கப்பலில்! அவர்களையும் அழைத்தேன், “வாங்கப்பா கலைஞருக்கு அமைதி இறுதி மரியாதை செலுத்துவோம்” என,
அனைவரும் கப்பலின் யூனிபார்ம் போட்டு வரத் திட்டமிட்டோம். கலைஞரின் ஒளிப்படம் கலர் பிரிண்ட் எடுக்கச் சொன்னேன். காலை 10 மணிக்கு கப்பலின் கட்டுப்பாட்டுத் தளமாகிய பிரிட்ஜ்க்கு வந்தடைந்தோம். பிறகு உதய் சார் கொஞ்சம் தேறியது போலத் தோன்றியது. அவர் ஒரு வயதான குழந்தை, அதிலும் கள்ளம் கபடமற்ற ஒரு மனிதர். ஈகோ என்பதே கிடையாதவர். அமைதி காத்து இறுதி மரியாதை செலுத்த கலைஞரின் ஒளிப் படத்துடன் அய்வரும் தயாரானோம்.
பிறகு எனக்கொரு சின்ன யோசனை, ஏன் கப்பலை நிறுத்தி அமைதி காத்து இறுதி மரியாதை செலுத்தக்கூடாது என. அய்வரும் ஏற்றனர். “இந்த உலகிலேயே கப்பலை நிறுத்தி கலைஞருக்கு அமைதி காத்து இறுதி மரியாதை செலுத்தியவர்கள் நாமாகத்தான் இருக்கணும்” என்றேன். உதய் அய்யா செம ஹாப்பி! “பண்ணமுடியுமா” என்றார். “நாம் நினைத்தால் எதுவும் பண்ணலாம்” என்றோம்.
உடனே 2ஆம் பொறியாளர், 3ஆம் பொறியாளர் இயந்திர அறைக்குச் சென்று வேலையை துவங்கினர். 30 நிமிடத்தில் கப்பல் நிறுத்துவதற்குத் தயார் செய்யப்பட்டு எனக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நானும் உதய் சாரும் பிரிட்ஜ்ல் இருந்து கப்பலின் வேகத்தை 14 நாட்ஸில் இருந்து படிப்படியாகக் குறைத்து 15 நிமிடங்களுக்கு பிறகு கப்பலின் வேகம் 4 நாட்ஸ் ஆனபிறகு கப்பலின் என்ஜினை நிறுத்தினோம்.
அனைவருக்கும் அதிர்ச்சி! ‘ஏன் கப்பல் நிறுத்தப்படுகிறது? ஏதேனும் பிரச்சினையா, சிக்கலா, இயந்திரக் கோளாறா?’ என பேசிக் கொண்டிருந்திருப்பார்கள் ஏனைய வர்கள் குறிப்பாக வட இந்தியர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கப்பலின் மேல் தளத்தில் தமிழர்கள் அய்வரும் ஒன்றாக தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அமைதி காத்து இறுதி மரியாதை செலுத்தினோம்.
கப்பல்காரனாக, சக கடலோடியாக எங்களுக்குத் தெரிந்த முறையில் மரியாதை செலுத்தினோம். உதய் சார் மட்டுமல்ல நாங்கள் அய்வரும் மன நிறைவடைந்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு கப்பலை இயக்கினோம். 30 நிமிடங்களில் கப்பல் அதன் உச்ச வேகத்தை எட்டியது. நாங்களும் கலைந்து சென்று அன்றைய பணிகளில் கவனம் செலுத்தினோம். 24 மணிநேர கப்பலின் ஆவரேஜ் வேகம் (average speed) சற்றுக் குறைய அதை என்ஜினின் வேகம் உயர்த்திச் சரிசெய்தோம். கப்பலின் ETA எனப்படும் இலக்கு நேரம் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம்.
முரட்டு தி.மு.க. காரர்கள் கூட செய்யமுடியாததை, எத்தனை கோடி பணமிருந்தாலும் செய்ய முடியாததை செய்ததாகத் திருப்தி! கலைஞர் மறைவிற்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலை நிறுத்தி மரியாதை செலுத்தியது இன்றளவும் பசுமரத்தாணி போல என் நெஞ்சில்!
– தர்மராஜ்
