நீட் தேர்வு: மாநிலக் கல்வி உரிமையைப் பறிக்கும் சதியா? ஆர்.டி.அய். தரவுகள் சுட்டிக்காட்டும் அதிர்ச்சி உண்மைகள்!

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.30 நீட் தேர்வு என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், கல்வியை மாநிலங்களின் பட்டிய லிலிருந்து முழுமையாக விடுவித்து ஒன்றிய மயமாக்கும் நோக்கத்தைக் கொண்டது என்ற தீவிர விமர்சனம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மாநில பாடத்திட்டத்தைப் புறக்கணித்து ஒன்றிய பாடத்திட்டத்தை  மறைமுகமாகத் திணிப்பதன் மூலம், மொழிரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மாநிலங்களின் அடையாளத்தைச் சிதைக்கும் முயற்சியோ என்ற அச்சமும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ மாணவர்களின் ஆதிக்கம்

ஆர்டிஅய் வெளிச்சத்திற்கு
கொண்டுவந்த அதிர்ச்சி புள்ளி விவரம்!

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்திட மிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் பெறப்பட்ட தரவுகள், நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவச் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்தைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன:

நீட் தேர்வுக்கு முன்

2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது (2014-2015 இல் வெறும் 2 மாணவர்கள்; 0.06%).

நீட் தேர்வுக்கு பின்

நீட் கட்டாயமாக்கப்பட்ட 2017-2018 ஆம் ஆண்டிலேயே இந்த எண்ணிக்கை 25.58% ஆக (1,113 மாணவர்கள்) திடீரென உயர்ந்தது.

தற்போதைய நிலை!

2024-2025 ஆம் ஆண்டில் 55.51% ஆகவும் (4,677 மாணவர்கள்), 2025-26 ஆம் ஆண்டில் 56.33% ஆகவும் (5,134 மாணவர்கள்) சிபிஎஸ்இ மாணவர்க ளின் ஆதிக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

சமூக நீதிக்கும்,  கிராமப்புற மாணவர்களுக்கும் நேர்ந்த பின்னடைவு

நீட் வினாத்தாள்கள் முற்றிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இது பெருஞ்சுமையாக மாறியுள்ளது.

பயிற்சி மய்யங்களின் ஆதிக்கம்

லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மய்யங்களுக்குச் செல்லக்கூடிய வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கே நீட் தேர்வு சாதகமாக உள்ளது.

அரசுக் கல்லூரி இடங்கள் கைநழுவுதல்

மாநில பாடத்திட்ட மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க 650-660–க்கும் அதிகமான மதிப்பெண்கள் தேவைப்படுகின்றன.

தனியார் கல்லூரிகளின் வசதி!

குறைந்த மதிப்பெண் பெற்றாலும், பல லட்சங்கள் கட்டணம் செலுத்த முடியும் வசதி படைத்த சிபிஎஸ்இ மாணவர்கள் மிக எளிதாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றுவிடுகின்றனர்.

கல்வி உரிமையும் –
மொழிப் பறிப்பும்!

மாநில பாடத்திட்டம் கைவிடப்பட்டு, சிபிஎஸ்இ முறையை நோக்கி மாணவர்கள் தள்ளப்படும்போது, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளின் திணிப்பு இயல்பாகவே நிகழும் என்றும், தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை மாநில அரசு தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பறித்து, ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கும் ஒரு தந்திர மாகவே நீட் பார்க்கப்படுகிறது. ஆர்டிஅய் மூலம் வெளிவந்துள்ள இந்தப் புள்ளிவிவரங்கள், நீட் தேர்வு என்பது வெறுமனே ஒரு நுழைவுத்தேர்வு மட்டுமல்ல; அது சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் சுயமரியாதைக்கு எதிரான ஒரு பெரும் காரணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *