
செய்தி
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னர் ராஜராஜனின் பள்ளிப்படை(நினைவிடம்) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ளதாக செய்திகள் உலவி வருகின்றன.
இது உண்மையா என ‘விடுதலை’ ஆய்ந்தறிவோர் குழு சார்பில் ஆராயப்பட்டது.
ஆய்வு
சோதனையில் ராஜ ராஜ சோழன் இறப்பு மற்றும் புதைக்கப்பட்ட இடம் பற்றி வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த தகவல்கள் கொண்ட கல்வெட்டுக் குறிப்புகள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றே தேடலில் அறிய முடிந்தது.
மேலும் தேடுகையில் 2019இல் ராஜ ராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் இருப்பதாகவும், அங்கு அவருக்கு மணிமண்டபமும், சிலையும் எழுப்பப்பட வேண்டுமென ராமாநாதபுரத்தைச் சேர்ந்த ஜி.திருமுருகன் என்ற வழங்குரைஞர் ஒரு பொதுநல வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையிடம் அவ்விடத்தில் ராஜராஜ சோழனின் நினைவிடம் இருக்கிறதா என ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து முடிவுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநரான
ஆர்.சிவானந்தம் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. டிரோன் மூலம் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு, நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரேடார்களைக் கொண்டும் விரிவான ஆய்வு நடந்தது.
ஆய்வின் முடிவில் உடையாளூரில் ஆய்வு செய்யப்பட்ட இடத்தையும், ராஜராஜ சோழனின் நினைவிடத்தையும் உறுதியாக இணைக்கும் முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த ஆய்வுக்குழு தெரிவித்தது
2020இ ல் அறன் பணி அறக்கட்டளையைச் சேர்ந்த சிவ. தியாகராஜன் சார்பில் உடையாளூரில் மணிமண்டபம் கட்ட வேண்டி சமர்பிக்கப்பட்ட வழக்கிற்கு 2025 டிசம்பரில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அங்கு சமாதி இருந்தற்கான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அவரது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
விளக்கம்
ஏன் உடையாளூர் அடக்க இடமாகக் கருதப்படுகிறது?
ஒட்டத்தோப்பு சிவலிங்கம், உடையாளூர்
உடையாளூரில் நிலத்தில் ஓரளவு புதைந்திருந்த சிவலிங்கத்தை உள்ளூர் மக்கள் கண்டறிந்தனர். சோழர் காலத்தில் மன்னர்களின் நினைவிடங்களுடன் சிவலிங்கம் இருப்பது மரபு என சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு, உடையாளூரில் உள்ளது ராஜராஜ சோழனின் பள்ளிப்படையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குலோத்துங்க சோழனின் கல்வெட்டு
கி.பி. 1112-அய்ச் சேர்ந்ததாகக் கூறப்படும் கல்வெட்டு, ராஜராஜதேவர் அல்லது சிவபாத சேகரதேவர் தொடர்புடைய கோயிலின் மண்டபம் புதுப்பிக்கப் பட்டதைப் பதிவு செய்கிறது. ராஜ ராஜனுக்குப் சிவபாத சேகரன் என்றோரு பட்டம் உள்ளதாலும், உடையாளூருக்கு சிவபாத சேகரபுரம் என்ற பெயர் உள்ளதாலும் இது ராஜ ராஜன் சமாதி என நம்பப்படுகிறது. ஆனால், சிவலிங்கம் உள்ள இடமே அவரது நினைவிடம் என்று கல்வெட்டு நேரடியாகக் கூறவில்லை.
முடிவு
கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு பள்ளிப்படை இருக்கிறது என உலவும் செய்திக்கு போதுமான அறிவியல் ஆதாரமில்லை.
– ஆய்ந்தறிவோர்
