சமூகநீதி பாதிக்கப்படும், நிர்வாகமும் சீர்குலையும்! இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வையும் தூண்டும், எச்சரிக்கை!!

5 Min Read
- Advertisement -

*அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக 
ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதா?
*ஒரு நூற்றாண்டாக திராவிட இயக்கம் பாடுபட்டதன் பயனால் –
கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்ட நம் மக்களைப் பின்னோக்கி இழுப்பதா?

ஒரு நூற்றாண்டாக திராவிடர் இயக்கம் பாடு பட்டதன் காரணமாக, கல்வி உரிமை மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் கல்வி உரிமை பெற்று, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றனர். இந்த நிலையில், நிரந்தரப் பணி நியமனத்துக்குப் பதிலாக ஒப்பந்த முறையில் பணி  நியமனம் செய்யப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்திருப்பது தவறான முடிவாகும். சமூக நீதி பாதிக்கப்படும், நிர்வாகச் சீர்கேடும் ஏற்படும், இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வைத் தூண்டும் – எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகால திராவிட இயக்கத்தின் உழைப்பால், போராட்டத்தால், முயற்சி யால் கல்வி நீரோடை பெருகி, இன்று கல்லூரி செல்லாதவர்கள் குடும்பம் இல்லை என்னும் இலக்கை நோக்கிய பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். கற்றவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமையாகும்.

‘திராவிட மாடல்’ அரசுகளின் வெற்றி!

அதற்காகத் தான் பல துறை சார்ந்த தொழில்களையும் ஊக்குவிக்கிறோம்.  அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குகிறோம். நமது செல்வமான மனிதவளத்தைத் திறனுடையவர்களாக உருவாக்கி, பிற நாடுகளிலும் சென்று பணியாற்றத்தக்க வகையில் தகுதிப் படுத்து கிறோம். நூற்றாண்டு ‘திராவிட மாடல்’ அரசுகளின் வெற்றி இது தான்.

அதே நேரத்தில், அரசு சார்ந்த துறைகளுக்குத் தேவையான ஊழியர்களை முறைப்படி தேர்ந்தெடுக்க அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை  உருவாக்கி வழிகாட்டியது நீதிக்கட்சி அரசு. (பனகால் அரசர் என்ற ராமராய நிங்கர் சென்னை மாநில பிரதமர் – ஆண்டு 1924) அதனை முறைப்படுத்தி, 69 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் அனைத்து சமூகத்தவரையும் அதிகாரத் தளத்திற்குக் கொண்டு வந்து, ஆட்சியில் அதிகாரத்தில் பங்கேற்கச் செய்திருப்பது தமிழ்நாட்டின், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சாதனையாகும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனை!

கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை வழங்க, தொடர் முயற்சி எடுத்து, 21 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட ஓய்வூதியப் பலன்களை மீண்டும் பெறு வதற்கான புதிய வழிவகையினையும் கடந்த தி.மு.க. ஆட்சி செய்தது. தற்காலிகத் தேவைக்காகப் பணியாளர்களை நியமித்துக் கொண்டாலும், நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு கொடுத்த நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றி வந்தது கடந்த தி.மு.க. அரசு.

ஆனாலும், எல்லா துறையிலும் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லா தரப்பிலும் இருந்து வந்து, அதுவே ஆங்காங்கு போராட்டமாகவும் நடந்து வந்தது. இந்தப் போராட்டங்களை அரசு நடத்துவோர் அக்கறையுடன் கவனித்துத் தீர்வுகளை வழங்கி வந்த வேளையில், இதனை அரசியல் பிரச்சினையாக ஆக்கி, அதன் மூலம் பலன் பெறலாம் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளாக இருந்தோர் செயல்பட்டு வந்தனர். அதில்,  ‘தற்காலிகப் பணியாளர்களையெல்லாம் நிரந்தரமாக்குவோம்’ என்று உறுதிமொழி வழங்கிய தற்போதைய ஆளுங்கட்சியான த.வெ.க.வும் அடக்கம்.

ஆட்சிக்கு வருமுன்னரும் –
தேர்தல் அறிக்கையிலும் கூறியது என்ன?

சாத்தியக் கூறுகள் என்ன, சட்டம் என்ன, முறைப்படி நிரந்தரப் பணியாளர்கள் ஆக்குவதற்கான வாய்ப்பு என்ன என்பதையெல்லாம் அறியாமல், ஆட்சிக்கு வரும் முன்னர் எதையும் பேசலாம் என்ற நோக்கில்  உறுதிமொழிகளை அள்ளி வழங்கினர். அதை நம்பி வாக்களித்தவர்கள், தங்கள் நம்பிக்கை பொய்த்ததால், போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்களை ஒடுக்கும் வேலைகளில் இந்த அரசு ஈடுபடுகிறது.

ஆனால், அதை விட அதிர்ச்சி தரும் வகையில், தற்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு சொல்லவருவது என்ன? டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரந்தரப் பணி யாளர்களை எடுப்பதற்குப் பதிலாக ஒப்பந்த முறை யில் பணியாளர்களை நியமிப்பதையே தொடரப் போகிறார்களா? ஒவ்வோராண்டும் கல்லூரிப் படிப்பை முடித்து அரசு வேலை பெற வேண்டும் என்னும் நோக்கில், தங்கள் இளமைக் காலத்தைப் பலிகொடுத்துப் படித்து வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கும் நிலையில், அவர்களின் கனவுகள் அனைத்தையும் சிதைக்கும் வேலையா இது?

ஒப்பந்தப் பணியாளர்கள்
நியமனம் நிரந்தரத் தீர்வாகுமா?

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாரா வோரைத் திறனுடையவர்களாகத் தயாரிக்க ‘நான் முதல்வன்’, ‘முதல்வர் படைப்பகம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களின் திறன்களை வளர்த்தது கடந்த ‘திராவிட மாடல்’ அரசு. ஆனால், அவற்றின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகக் குறைக்கச் செய்து, அந்தத் திட்டங்களில் குளறுபடிகளை உருவாக்கி, கடந்த அய்ந்து மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை இந்த அரசு தோற்றுவித்திருக்கும் சூழலில், ஓ.எம்.சி.எல். மூலமாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதையே நிரந்தரத் தீர்வாக்குவது போல இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிரந்தரப் பணி அல்லாமல், ஒப்பந்த முறையில் பணிகளை வழங்குவதில் சமூகநீதி பாதிக்கப்படும்; இளைஞர்களின் கனவு சிதையும். அரசுக்கும் முழு மையான தகுதி படைத்த, நெடுங்காலம் பணி யாற்றத்தக்க பணியாளர்கள் கிடைக்க மாட்டார்கள். நிர்வாகமும் சீர்குலையும். ஆளுமை மிக்க அரசுக்கு, அரசு ஊழியர்களின் பங்களிப்பு அவசியமானது. அந்தக் கட்டமைப்பு தான், ஆட்சிகள் மாறினாலும் அரசு இயந்திரத்தை ஓரளவேனும் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அதில் கைவைப்பது – அச்சாணியை உருவுவதைப் போல!

ஏற்கெனவே, போக்குவரத்துத் துறையில் 12,000 பேரைத் தேர்ந்தெடுக்க வடநாட்டு நிறுவனத்துக்கு வாய்ப்பளித்தது இந்த அரசு, மின் துறையில் தற்காலப் பணியாளர்களை நியமிக்க முயன்று எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது இதையே தொடர்வதென முடி வெடுத்துவிட்டதா?

இளைஞர்களின் மத்தியில்
போராட்ட உணர்வைத் தூண்டும்!

இளைஞர்களின் கனவைச் சிதைத்துவிட்டு, அவர்களின் ஆளுமையை அழித்துவிட்டு, தலை முறையையே வீணடிக்க முடியாது, கூடாது! உடனடியாக, அரசு இத்தகைய முயற்சிகளை விடுத்து, அரசுப் பணிகள், பேராசிரியர்கள், ஆசிரியர் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைத்துத் துறைகளுக்கும் நிரந்தரப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யின் மூலமும், பிற உரிய தேர்வாணையங்களின் மூலமும் நிரப்ப வேண்டும்.

இல்லையென்றால், இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வே தலைதூக்கும், எச்சரிக்கை!

 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

30.10.2026     

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *