சென்னை, அக். 24- வேளாண்மை – உழவர் நலத் துறையின் திட்டங்களை கள அளவில் செயல்படுத்தி வரும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தேர்வு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள், 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 பேருக்கு, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அதேபோல் 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், 2024-2025ஆம் ஆண்டிற்கான சமூகப் பொறுப்பிற்கான விருதை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத் திற்கும், 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், சிறந்த செயல்திறனுக்கான சர்க்கரை ஆலைக்கான விருதை கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இந்த 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், முதலமைச்சரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலாளர் சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் வெங்கடேஷ், சர்க்கரைத் துறை ஆணையர் கண்ணன், வேளாண்மை இயக்குநர் முரளீதரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் விஜயா ராணி, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் அருண்ராஜ், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
