ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு!

5 Min Read
- Advertisement -

அக்டோபர் 09 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து சிங்கப் பூருக்கு இரவு 11.15 மணிக்கு விமானம் புறப்பட வேண்டும். ஆனால் தாமதமாக 12.15 மணிக்கே புறப்பட்டது. இதனால் ஒரு பதற்றம் ஏற்பட்டது. காரணம் சிங்கப்பூரில் இறங்கி உடனடியாக நாங்கள் ஜப்பான் செல்லும் விமானத்தை அடைய வேண்டும். உரிய நேரத்திற்குச் செல்லவில்லை என்றால், அதற்கடுத்த விமானம் எப்போது ஏற்பாடாகும்? எந்த நாளில் போய் ஜப்பானில் சேர்ப்பார்கள்? இதனால் முதல் நாள் மாநாட்டில் கலந்து கொள்வது கூட சற்றுத் தாமதமாகலாம்? இந்தச் சூழலில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காலை 7.00 மணிக்குச் சென்று தரை இறக்கினார்கள்.

விமானப் பணிப்பெண் உதவி!

அடுத்த விமானத்தைப் பிடிக்க 0.45 நிமிடங்களே இருந்தன. கண்டிப்பாக இது போதுமானதாக இல்லை. நடைமுறைகளை எல்லாம் பின்பற்றி, விமானத்தின் கதவுகளைத் திறந்ததும் வேக, வேகமாக இறங்கினோம்‌. அனைவரும் இறங்கியதும், 30 தோழர்கள் இருக்கிறார்களா எனச் சரிபார்த்துக் கொண்டோம். இரவுப் பயணம் என்பதால், பலருக்கும் தூக்கம் கலையவில்லை. எனினும் அவரவர் சுமைகளைத் தூக்கிக் கொண்டு விரைந்து நடந்தோம். சிலருக்கு வேகமாக நடக்க வாய்ப்பு இல்லாததால் மெதுவாகவே நடந்து வந்தார்கள். இந்நிலையில் முன்வரிசையில் ஒருவரும், ஆகக் கடைசி வரிசையில் ஒருவரும் பொறுப்பாக நடந்து வர, மீதமுள்ள 28 தோழர்கள் பாதுகாப்பாக மய்யத்தில் நடந்து வந்தார்கள்.

பொருள் பொதிந்த வாய்ப்பு!

மற்றவைபொருள் பொதிந்த வாய்ப்பு!
டோக்கியோவில், ஜப்பானில் வசிக்கும் தமிழர்களுக்கான அமைப்பால் (Non-Resident Tamil Indians Association of Japan) ஏற்பாடு செய்யப்பட்ட, 5-ஆவது பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடான ‘பாலம் 2026ல்’ (BRIDGE 2026) பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் சுயமரியாதை குறித்த பெரியாரின் கொள்கைகளை ஒரு பன்னாட்டு தளத்தில் முன்னிறுத்தி உரையாடியது மிகவும் பொருள் பொதிந்த வாய்ப்பாக அமைந்தது.
– கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி.,
(துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க. – முகநூலில், 12.10.2026)

 

குறிப்பிட்ட தூரம் கடந்த நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர், ‘‘நீங்கள் அனைவரும் சென்னையில் இருந்து ஜப்பான் செல்லும் பயணிகளா?”, என்று கேட்டார். ஆமாம் என்றதும், எங்கள் அனைவருக்கும் ஓர் அடையாள எண் ஒன்றை (Sticker) சட்டையில் ஒட்டினார். என் பின்னால் வாருங்கள் என்றார். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய வாகனம் ஒன்று எங்களை நோக்கி வந்தது. அதை நிறுத்திய விமானப் பணிப்பெண், நமது தோழர்களில் நடக்கச் சிரமப்பட்டவர்களைச், சரியாகக் கண்டுபிடித்து வாகனத்தில் அமர வைத்தார்.

அன்புடன் வரவேற்ற டோக்கியோ!

மீதமுள்ளவர்கள் ஓட்டமும், நடையுமாக விமான நிலையத்தின் உள்ளேயே ஒரு சுற்று, சுற்றி வந்தோம். மணியைப் பார்த்தால் 07.40 காட்டியது. விமானம் புறப்பட இன்னும் 5 நிமிடங்களே இருந்தன. இருப்பினும் ஒரு நம்பிக்கையில் ஜப்பான் செல்லும் விமான நுழைவுவாயிலை அடைந்தோம். அனைவரின் விமான இருக்கைகளும் சரிபார்க்கப்பட்டன. 30 தோழர்களும் வந்துவிட்டார்களா என நாங்களும் ஒருமுறை உறுதி செய்து கொண்டோம். பின்னர் ஒவ்வொருவராகப் பெருமூச்சு விட்டு விமானத்திற்குள் கால் பதித்தோம். ஏறி முடித்து, “சீட் பெல்ட்” அணிந்து அப்பாடா என எங்களை நாங்களே சீர்செய்து கொண்டோம்.

மற்றவை

விமானம் 8.00 மணிக்கு டோக்கியோ ஹனேடா (Haneda) நிலையம் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. நாங்கள் பயணம் செய்த அனைத்துமே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் தான். ஜப்பான் செல்வதற்காகச் சென்னையில் இருந்து 30 பேர் கொண்ட குழு வருகிறார்கள். அவர்கள் வந்த பிறகே ஜப்பான் விமானம் இயக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்த செய்தி பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களின் களைப்பைப் போக்கும் வகையில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளும், சுவையான மாமிச உணவுகளும் கொடுத்தார்கள். பிற்பகல் 03.45 மணிக்கு டோக்கியோ மாநகரம் எங்களை அன்புடன் வரவேற்றது.

புடைசூழக் காத்திருந்த தோழர்கள்!

விமான நிலையச் சோதனைகள் முடிந்து வெளியே வந்தால், ஜப்பான் தோழர்கள் நம்மைப் புடைசூழ நின்றார்கள். ஒரு பேருந்தும், நான்கைந்து மகிழுந்தும் அணிவகுத்துக் காத்திருந்தன.‌ தமிழ்நாட்டுத் தோழர்கள் 30 பேரும் பேருந்தில் அமர வைக்கப்பட்டனர். நிஷிகசாய் பகுதியில் அமைந்திருந்த “ஹோட்டல் ஸ்மைல்” நோக்கிப் பேருந்துப் புறப்பட்டது. முதல் நாள் தொடங்கி, இறுதி நாள் வரை பேருந்தில் எங்களை வழி நடத்தியவர் மதுரையைச் சேர்ந்த தோழர்  சந்தீப் அவர்கள். எப்போதும் புன்னகை மாறாமல், பொறுமை இழக்காமல் 30 பேரின் பயணத்தையும் இனிமையாக்கியவர். இடையில் வந்த அவரின் பிறந்தநாளை 30 பேரும் சேர்ந்து, பேருந்திலேயே கொண்டாடி மகிழ்ந்தோம். தமது 25 ஆம் வயதில் ஜப்பானுக்கு வந்தவர், 15 ஆண்டு களாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார்.

மற்றவை

“செயல்வீரர்” ச.கமலக்கண்ணன், ஒரு வார காலப் பயணத் திட்டமிடல்கள் குறித்துப் பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே அழகுற விவரித்தார். அனைவருக்கும் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். ஜப்பான் பயணம் மேற்கொள்ளும் முன்பே காணொலிக் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதில் ‘‘ஜப்பானின் சட்ட திட்டங்கள், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், சிரமமான சூழலில் கையாள வேண்டிய நடை முறைகள் என அனைத்துமே பேசப்பட்டன. மற்றபடி ஜப்பான்  அமைதியும், பாதுகாப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நாடு, அனுபவித்து மகிழுங்கள்”, எனத் தோழர்கள் உற்சாகம் தந்தனர்!

முதல் நாளே இனிய அனுபவம்!

புன்னகையையே தனது பெயராகக் கொண்ட (Hotel Smile) தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். 2024 ஆம் ஆண்டு ஜப்பான் வந்த போதும் இதே தங்குமிடம் தான். 30 தோழர்களுக்கு 15 அறைகள் ஒதுக்கப்பட்டன.‌ அறைக்கு இரண்டு பேர் வீதம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியல் தயார் செய்யப்பட்டு, தோழர் களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.‌ எனவே வரவேற்பு அறைக்குச் சென்று உடனடியாக அவரவர் அறைச் சாவிகளைப் பெற்றுக் கொண்டு ஓய்வெடுக்கச் சென்றனர். இரசிக்கக் கூடிய மெல்லிய குளிரே இருந்தது.‌ ஒரு மணி நேரப் புத்துணர்ச்சிக்குப் பின் இரவு உணவிற்காக அனைவரும் ஒன்று கூடினர்.

மற்றவை

விடுதியில் இருந்து இரண்டு சாலைகள் நடந்தால் வரக்கூடிய ஒரு தமிழ்நாடு உணவகத்திற்குச் சென்றோம். உணவகத்தின் பெயர் மொரிங்கா (Moringa). உணவகத்தில் சுயசேவைப் பிரிவாக (Self Service) வடிவமைத்து இருந்தார்கள். சோறு, கோழிக்கறி, காய்கறிகள், இட்லி, தோசை, இனிப்பு வகைகள் எனப் பல விதங்களில் உணவுகள் இருந்தன. அந்த உணவக உரிமையாளரும் மதுரையைச் சேர்ந்தவர் தான். இணையர்கள் இருவரும் சேர்ந்து அன்போடு கவனித்துக் கொண்டனர்.

மற்றவை

இந்த நிஷிகசாய் பகுதியைத் தான் ஜப்பானின் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கிறார்கள்.‌

ஜப்பான் சென்ற முதல் நாளே கடைத் தெருக்களில் நடந்து சென்று உணவகத்தில் சாப்பிட்டுத் திரும்பியது தோழர்களுக்கு நிறைவைத் தந்தது. சிலர் கடைகளுக்குச் சென்று குடிநீர் மற்றும் நொறுவல்கள் (Snacks) வாங்கினர். ஜப்பான் நாட்டு நாணயங்களை (யென்) வெகு விரைவாகப் பழக்கிக் கொண்டனர். தங்குமிடம் திரும்பியதும் இணைய இணைப்பைப் (Wifi) பயன்படுத்தி, தத்தம் வீடுகளுக்குப் பேசி நலம் விசாரித்தும், ஜப்பான் நாட்டுச் சிறப்புகளை மகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டனர். இப்படியாக ஜப்பானின் முதல் நாள் நிறைவைத் தந்தது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *