சென்னை, ஆக. 6- தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு எதிராக சிறை தண்டனை விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, பொது இடங்களில் புகைபிடிக்கும் நபர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த அபராத நடவடிக்கை பொது இடங்களில் புகைபிடிப்போரைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை எனத் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும், இந்த விதியை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தவும் தற்போதைய தண்டனையை மேலும் கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அபராதத்திற்குப் பதிலாக அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
